Magic Stone 1


 

மந்திரக்கல் 1

“வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்

கால்நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக என்று”.

     வானவில்லின் ஆதி மற்றும் அந்தத்தை கணிக்க முடியாதது போல், இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான பிறப்பின் தன்மை மற்றும் நோக்கத்தையும் அவர்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது.

     சரியான நேரம் வரும் போது, மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரையும் அவர்கள் பிறந்த கடமையைச் செய்வதற்கான வழி நோக்கி வழிகாட்டுவார் இறைவன். அதுவரை அவர் திருவடி வணங்கி வாழ்தல் சாலச்சிறந்தது என்கிறது நாலடியார்.

     தங்களின் பிறப்பிற்கான காரணம் அறிந்துகொண்ட மனிதர்கள் அனைவரும் அதை நிறைவேற்ற நினைக்கிறார்களா என்றால் இல்லை. சிலர் நிறைவேற்ற நினைத்தாலும் விதி அதற்கு விடுவதில்லை. விதி, சதி அனைத்தையும் உடைத்து எறிந்து சொற்பமான நபர்கள் தான் தாங்கள் பிறப்பெடுத்த இலட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள். அப்படியான ஐந்து நபர்களின் கதையே இந்த “மந்திரக்கற்கள்”.

     காக்கைக் கூட்டில் பிறந்து வளர்ந்து, முதல்முறையாகத் தன் குட்டி வாயைத் திறந்து இனிய குரலால் கூவி மாட்டிக்கொண்ட குயில் குஞ்சு ஒன்றை இத்தனை நாட்களாக தன் வாரிசென்று கருதி பாதுகாத்த காகம் ஏமாற்றத்தின் விளைவால் ஏற்பட்ட கோபத்துடன் கொத்துவதற்காக துரத்திக் கொண்டிருந்தது.

     அந்தக் கோபக்காரத் தாயுடன் சேர்த்து, அவைகளின் கூட்டத்திற்கு என்றே எழுதப்படாத சட்ட விதிப்படி மற்ற காகங்களும் சேர்ந்து கொள்ள அங்கே பெரும் இரைச்சல் உண்டாகியது.

     அந்தச்சத்தம், தான் விரும்பும் நேரத்தில் எழுந்து, விரும்பிய படியே அந்த நாளை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அவனை திடுக்கிட்டு விழிக்கச் செய்தது.

     எரிச்சலில் உச்சுக் கொட்டியவன் திரும்பிப் படுக்க, 'ஒழுங்காக எழுந்திடு’ இனியும் உன்னை உறங்க விடமாட்டேன் என்பதாய் மேலும் மேலும் தொந்தரவு செய்தது தொடர் காக்கைச் சத்தம். தலையணையை வைத்து காதை மூடினால் காக்கைகள் காதிற்குள்ளே வந்து கத்துவது போல், சத்தம் மிக அருகில் கேட்க, இதுசரிப்பட்டு வராது என்று போர்த்தி இருந்த ப்ளாங்கட்டை தூக்கி எறிந்துவிட்டு எழுந்து அமர்ந்தான்.

     "டேய் சண்டாளா எல்லாம் உன்னால் தான் டா. சென்னையில் கம்மியான ரேட்டில் அமைதியான ஏரியா எத்தனையோ இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இந்த அண்ணாநகரில் தான் வீடு வாங்குவேன்னு ஒத்தக்காலில் நின்னு, கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து ஒத்த வீட்டை வாங்கி, என்னையும் இங்க கூட்டிட்டு வந்துட்டியே நீயெல்லாம் நல்லா இருப்பியா டா” தனக்கு எதிரே கால் மேல் கால் போட்டவண்ணம் ஒற்றை சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த பரசுவைத் திட்டினான் சாஸ்தா.

     "ஏன்டா இந்த ஏரியாவுக்கு என்ன குறைச்சல்” சாதாரணமாகக் கேட்டான் பரசு. அவனுக்கு காக்கைகளின் இரைச்சல் சங்கீதமாய் தெரிந்தது போலும்.

     "ஏன்டா கேட்க மாட்ட, ஏரியாவா இது. அடுக்குமாடி வீடுங்கிற பேச்சுக்கே இடம் இல்லாமல் ஒத்த ஒத்த வீடாக் கட்டிப் போட்டு இருக்காங்க. ஒரு வீடும் இன்னொரு வீடும் பக்கத்து பக்கத்தில் இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனா ஆளுங்க ஒருத்தருக்கொருத்தர் தூரமா இருக்காங்க.

     இதில் ரோட்டுக்கு இரண்டு பக்கமும் மரங்கள் வேற. அந்த மரத்தில் இருந்து கொட்டுற குப்பையை இந்த கார்ப்பரேஷன் காரங்க ஒழுங்கா க்ளீன் பண்ணாம தெரு எப்பவும் குப்பையாத் தான் கிடக்கு.

     மரம் நிறைய இருக்கிறதால காக்கா, கிளி, புறா, மைனான்னு ஏகப்பட்ட கிரியேச்சர் வந்து தினமும் காலங்காத்தால கத்தி மனுசனை உயிரை வாங்குதுங்க நிம்மதியா எட்டு மணி வரைக்கும் கூட தூங்க முடியல" கத்தாத குறையாக சொன்னான்.

     "டேய் சாஸ்தா இங்க வா நான் உனக்கு ஒன்னு காட்டுறேன்" என்று நண்பனின் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றவன், திறந்து இருந்த ஜன்னலின் மெல்லிய திரையை நீக்க வெளியே நடப்பவை கண்ணுக்குப் புலனானது.

     "அங்க பாரு அந்தச் சின்ன குயில் குஞ்சை துரத்துவது ஒரு  பெரிய பறவைக் கூட்டம். எங்க இடத்தில், எந்த நேரத்தில் பாதுகாப்பு உண்டு இல்லன்னு அதுங்களுக்கு நல்லாலவே தெரியும். வயசை வைச்சுப் பார்த்தாக் கூட அந்த காக்கைக் கூட்டத்துக்கு தான் அனுபவம் அதிகம் இல்லையா?" பரசு  கேட்க சாஸ்தா டங்குடங்கென்று அழகாய் தன் தலையை ஆட்டினான். தலையாட்டுவதில் தலையாட்டி பொம்மை தோற்றுவிடும் சோ ஸ்சுவீட் என்று மனதிற்குள் நண்பனைச் செல்லம் கொஞ்சிய பரசு தொடர்ந்தான்.

     "வயது, அனுபவம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் அந்தக் காக்கைக் கூட்டத்தால் பிறந்து கொஞ்ச நாட்களே ஆன இப்பத் தான் பறந்து பழகுற அந்த குயில் குஞ்சை துரத்திப் பிடிக்க முடியல ஏன்" என்று கேள்வியாய் நிறுத்த, "ஆமா ஏன் அதுங்களால அதைப் பிடிக்க முடியல" திரும்பக் கேட்டான் சாஸ்தா.

     "காரணம் அந்தக் குட்டிக்குயில் தன்னோட உயிரைக் காப்பாத்துறதுக்காக, தனக்குக் கிடைச்ச இந்த அரிதான வாழ்க்கையை இழந்திடக் கூடாதுங்கிறதுக்காக, தான் அந்த காக்கை கூட்டத்துக்கிட்ட தோத்துப் போயிடக் கூடாதுங்கிற வைராக்கியத்தில் ஓடுது. காக்கைகக் கூட்டம் பழிவாங்குறதுக்காக மட்டும் ஓடுது.

     இந்த மாதிரிப் போட்டிகளில் எப்பவுமே கடைசி வரைக்கும் போராடுறவங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். அந்த குட்டிக்குயில் தான் இதில் ஜெயிக்கும் நீ வேணும்னா பாரு" பரசு சொல்லி முடிக்க தலையில் துண்டு போட்டுக்கொண்டு பாவமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் சாஸ்தா.

     பரசு இதழ்களுக்குள் சிரித்துக்கொள்ள, "இன்னைக்கு உன்னோட ஆராய்ச்சி, தொன்மை விளக்கம் கோட்டா முடிஞ்சிடுச்சுன்னா சொல்றியா? நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன். ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கு" பாவமாய் சொன்ன சாஸ்தாவை சிரிப்புடன் பின்னால் இருந்து  மிதித்து பாத்ரூமிற்குள் தள்ளினான் பரசு.

     இருவருமாக இரு அறையில் தயாராகி வந்து காலை உணவாக ரொட்டி மற்றும் பழஊறையும் (ஜாம்) கொறிக்க ஆரம்பித்தனர். "பரசு இன்னைக்காகவது ஆபீஸ் பக்கம் வாயேன்" வழக்கமான வழக்கமாக இன்றும் ஆர்வத்துடன் கேட்டான் சாஸ்தா.

     "நான் எதுக்கு டா எல்லாத்தையும் நீயே பார்த்துக்கோ என்னை விட உனக்கு தான் எல்லாம் நல்லாத் தெரியும்" யோசியாமல் பதில் வந்தது எதிர்ப்புறம் இருந்து.

     "நீ கடைசியா அங்க வந்து எத்தனை நாள் ஆச்சுன்னு உனக்கு நியாபகம் இருக்கா" இம்முறை சற்று கோபத்துடன் கேட்டான் சாஸ்தா.

     "என்ன ஒரு நாலு மாசம் இருக்குமா?" சாதாரணமாகப் பரசு சொல்ல எதிரே இருந்தவனுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது.

     "டேய் அது உன்னோட ஆபீஸ் டா. வாரத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டு போனா என்ன உனக்கு. எனக்குத் தெரியாது இன்னைக்கு நீ அங்க வந்தே ஆகணும்.

     நம்ம பிரான்ஞ்ச் ஒன்னு நேபாளத்தில் ஆரம்பிக்க, அங்க இருக்கும் கம்பெனி கூட டையப் கேட்டு இருக்கேன். அதுக்கான மீட்டிங் இன்னைக்கு நம்ம ஆபீஸில் நடக்கப்போகுது. இது பைனல் ஆச்சுன்னா சக்ஸஸ்புல்லா நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியோட ஆறாவது பிரான்ஞ்ச் ஓபன் பண்ணிடலாம், அதுவும் வெளிநாட்டில். ஓனர் என்கிற முறையில் நீ வந்தே ஆகணும்“ என்ற நண்பனைச் சலிப்பாகப் பார்த்தான் பரசு.

     என்ன தான் உன்னோட அதிகாரத்தை நீ எனக்குக் கொடுத்து இருந்தாலும் நான் எப்பவும் உனக்கு கீழ வேலை செய்யுறவன் தான்டா. நீ இப்படி கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்கிறது நல்லாவா இருக்கு பரசு" கேட்ட சாஸ்தாவினிடத்தில் கோபத்தை விட வருத்தமே மேலோங்கி இருந்தது.

     "டேய் நான் இதையெல்லாம் பார்த்து சம்பாதிச்சு என்னடா பண்ணப் போறேன். எனக்குன்னு யாரு இருக்கா. அப்பா, அம்மா, கூடப்பிறந்தவங்க, காதலி, பொண்டாட்டி, குழந்தை குட்டின்னு ஒரு மண்ணும் கிடையாது.

     ஏனோ அந்தக் கன்ட்ராவி மேல ஆசையும் வந்தது கிடையாது. இந்த அழகில் நான் என்னோட சுயசந்தோஷத்தை இழந்துட்டு யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்கணும் சொல்லு.

     அதனால் தான் எல்லாப் பொறுப்பையும் உன்கிட்ட ஒப்படைச்சேன். சின்ன வயசில் இருந்தே என் கூட வளர்ந்த உனக்கு உன்னோட ஆசைக் கனவான கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியைக் கொடுத்தேன்“ வியாக்யானம் பேசினான்.

     “உனக்குன்னு ஒரு இலட்சியம் இல்லையா?“ ஏக்கமாகக் கேட்டான் சாஸ்தா. உற்ற உறவு பொறுப்பில்லாமல் அலைவதைப் பார்த்துக்கொண்டு யாரால் தான் அமைதி காக்க முடியும்.

     “யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிற. எனக்கா இலட்சியம் இல்லை. இந்த ஊர் உலகத்தில் என்னைப் போல இலட்சியம் உள்ள ஆள் யாரும் இருக்க மாட்டாங்க.

     என்னோட ஆசை, கனவு, இலட்சியம் எல்லாம் என்ன தெரியுமா? ஒரு நாள், ஒரே ஒரு நாளாச்சும் டீவி சேனல், நியூஸ் பேப்பர்ஸ், விதவிதமான மேகசின்ஸ் எல்லாத்திலும் என்னோட போட்டோ ப்ரண்ட் பேஜ் ல வரணும். சோஷியல் மீடியா எல்லாத்திலும் என்னோட பெயர் திரும்பத் திரும்பப் பேசப்படணும்.

     இந்தியன் டீம் வேர்ல்டுகப் ஜெயிச்சப்ப, அஸ் எ கேப்டனா எப்படி எம் எஸ் தோனியோட போட்டோ பார்க்கிற எல்லா இடத்திலும் இருந்ததோ, பார்க்கிற எல்லோரும் எப்படி அவரைப் பத்தியே பேசினாங்களோ, அதே மாதிரி ஒருநாளாச்சும் இந்த ஒட்டு மொத்த இந்தியாவும் என்னைப் பத்தி மட்டுந்தான் பேசணும். அதுக்கு நான் எதையாவது பெருசா சாதிக்கணும், சாதிப்பேன்" இல்லாத காலரைத் தூக்கிவிட்டான் பரசு.

     "ஆமா சாதிச்சுக் கிழிச்ச, ஸ்கூல் முடிச்ச கொஞ்ச நாளில் உன்னோட அப்பா, அம்மா, தங்கச்சின்னு மூணு பேரும் ஒன்னா ஒரு கார் ஆக்சிடென்ட்டில் செத்துப்போனாங்க. அப்பாவோட நண்பர் மேனேஜரா இருந்ததால் நீ காலேஜ் முடிக்கும் வரை உனக்கான சொத்துக்களை உனக்கானதாகவே பாதுகாத்து வைச்சிருந்தார். காலேஜ் படிப்பு முடிந்து வந்ததும், உன் பொறுப்புக்கு வந்த கம்பெனியை என் தலையில் கட்டிட்டு ஆராய்ச்சி பண்ணப் போறேன்னு சொன்ன“ என்க, வலதுகை நடுவிரலால் நெற்றியைத் தேய்த்தான் பரசு. அடுத்து என்னென்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும் என்பதால் வந்த சங்கோஜம் அது.

     சஞ்சீவி மூலிகையை கண்டுபுடிக்கப் போறேன்னு கொல்லிமலையில் ஆரம்பிச்சு கேரளா, மேகலையா, அமேசான் வரைக்கும் ஒரு வருஷமா அலைஞ்சு திரிஞ்சு கடைசியில் பிச்சைக்காரனை விட கேவலமான கெட்டப்பில் திரும்பி வந்த" என்க, "அவ்வளவு கேவலமாவா வந்தேன்" எதிர்கேள்வி கேட்டான் பரசு.

     "பின்ன இல்லையா? உன்னைக் க்ளீன் பண்ண பார்லர் காரன் அடுத்த நாளே ஊரை விட்டு ஓடிட்டான்" சாஸ்தா பட்டாசாய் வெடிக்க, "ஹாஹா பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லு சாஸ்" பனிக்கூழின் குளிர்ச்சியோடு அவனை அணுகினான் பரசு.

     "சரி, எனக்கு ஒரு விஷயம் சொல்லு. அப்படிக் கஷ்டப்பட்டு சுத்துனியே என்ன ஆச்சு உன் பயணம்" சாஸ்தா நக்கலாகக் கேட்கவும், "ஊத்திக்கிச்சு" என்று கட்டைவிரலை தலைகீழாகக் காட்டிச் சிரித்தான் பரசு.

     "சரி அதை விடு எவன் அவன், மகாபாரதத்தில் ஒருத்தன் வருவானே அவன் பேரு என்ன" என்க, "அஸ்வத்தாமன்" என்றான் பரசு.

     "ஆங்… அஸ்வத்தாமன். சிரஞ்சீவிகள் இருக்கிறது உண்மை. மார்க்கண்டேயன், பரசுராமன், விபீஷனன், அனுமன், மகாபலி சக்கரவர்த்தி, வியாச முனிவர் இந்தச் சிரஞ்சீவிகள் எல்லாம் தெய்வாம்சம் பொருந்தியவங்க, அவங்களைக் கண்டுபுடிக்கிறது முடியாது. ஆனா இவன் அப்படிக் கிடையாது. 

     இமயமலைப் பக்கம் கிட்டத்தட்ட பத்து அடிக்கு மேல உயரம் கொண்ட ஒருத்தன் நெத்தி நிறைய காயத்தோட உடல் முழுக்க நாற்றத்தோட சுத்திக்கிட்டு இருக்கான். அவன் தான் அஸ்வத்தாமன். அவனைக் கண்டுபுடிக்கிறது மூலமா மகாபாரதம் உண்மையா பொய்யான்னு இத்தனை வருஷமா இருக்கிற குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போறேன்னு சொன்ன அது முடிஞ்சுச்சா" சாஸ்தா புலம்பலாய் கேட்க, அதை இரசித்துக்கொண்டு, "முடியலையே" சைகை காட்டிச் சிரித்தான் பரசு.

     "இதுக்கா ஒரு ஆறு மாசம் அங்க இருக்குற சாமியார் கூடப் பழகி நீயும் சாமியாரா போகப் பார்த்த. என் நல்ல நேரம் நான் சரியான நேரத்துக்கு அங்க வந்து உன்னையும் என் கூட இழுத்துட்டு வந்தேன்" என்க, சிரிப்பு தாங்கமுடியவில்லை நாயகனுக்கு.

     "நீ அந்தத் தப்பை செய்யாமலேயே இருந்திருக்கலாம் சாஸ்தா. இங்க வந்தும் நான் சாமியார் மாதிரி தானே இருக்கேன். அதுக்கு அங்கேயே சாமியாரோட சாமியாரா சந்தோஷமா இருந்திருப்பேன்" பொய் சோகத்துடன் சொல்ல, 

     "டேய் டேய் நிறுத்துடா அக்கப்போருக்குப் பிறந்தவனே. நீ பண்ணாத அட்டூளியமே கிடையாது. இந்த அழகில் நீயெல்லாம் சாமியாரா போனா நாடு தாங்காது டா மகனே"

     "என்னை எப்பப் பார்த்தாலும் டிமோட்டிவேட் பண்றதே உனக்கு வேலையாப் போச்சு. நீ மட்டும் என் விஷயத்தில் குறுக்கே வராம இருந்திருந்தா நான் எவ்வளவு பெரிய விஷயங்களை எல்லாம் கண்டுபிடிச்சு இருப்பேன் தெரியுமா? இப்ப கூட ஒன்னும் இல்லை. என்னைக் கொஞ்ச நாள் சுதந்திரமா விடு நான் பெரிய கண்டுபிடிப்பையெல்லாம்  அசால்ட்டா கண்டுபிடிப்பேன்“ கெத்தாகச் சொன்னான்.

     "யப்பா டேய் நீ இதுவரைக்கும் பண்ணது பத்தலையா? இச்சாதாரிப் பாம்புகள் நிஜமான்னு கண்டுபிடிக்கப்போறேன். பேய் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கப் போறேன். மந்திர தந்திரங்கள், சூனியங்கள் உண்மையா பொய்யான்னு ஆதாரத்தோட நிரூபிக்கப்போறேன். கடல்கன்னிகள், சித்திரக்குள்ளர்கள் எல்லாம் நிஜத்தில் இருக்காங்களான்னு தேடிப்பார்க்கப் போறேன். காட்டேரி தேடிப்போறேன். சையின்ட்டிஸ்ட் வைச்சு டைம் மிஷன், எப்போதும் இளமையாகவே இருக்கும் மருந்து ஆராய்ச்சி பண்ணப்போறேன். பூதம் காக்கும் புதையல் தோண்டப்போறேன்னு ஆரம்பிச்சு காடு, மேடு, அடுத்த நாடுன்னு அலைஞ்சு எத்தனையோ கிறுக்குத் தனம் பண்ண. ஏதாவது ஒன்னு உருப்பட்டுச்சா, எல்லாம் என்னாச்சு" மூச்சைப் பிடித்துக்கொண்டு கத்திய நண்பனுக்குப் பதில் கொடுக்கும் வகையில், "புட்டுக்கிச்சு" என்றுவிட்டு கலகலவெனச் சிரித்தான் பரசு.

     "ஏன்டா இப்படி கட்டுக்கதைகளுக்கு பின்னால அலைஞ்சு உன் வாலிபத்தையும், உன்னோட நல்ல எதிர்காலத்துக்காக உன் அப்பா அம்மா சேர்த்து வைச்ச சொத்தையும் இப்படி அழிச்சுக்கிட்டு இருக்க" உண்மையான வருத்தத்துடன் கேட்டான் சாஸ்தா.

     "டேய் நான் பொறுப்பா இருந்து என்ன பண்ணப் போறேன் சொல்லு. உயிரைக் கொடுத்துச் சம்பாதிச்சு சொத்து சேர்த்து வைக்க எனக்குன்னு யார் இருக்கா. அதனால் தான் நான் என் இஷ்டப்படி இருக்கேன்.

     அதோட, நான் ஒன்னும் தப்பான வழியில் போகலையே. எனக்குப் பிடிச்ச கொஞ்சம் கிரேஸியான விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதில் எனக்கு கொஞ்சம் த்ரில் கிடைக்கிது அவ்வளவு தான்" அசால்ட்டாகத் தோள்களைக் குலுக்கினான் பரசு.

     "ஏது இந்தக் கட்டுக் கதைகளால உனக்கு த்ரில் கிடைக்குதா?" இன்று நண்பனை விடுவதாக இல்லை சாஸ்தா.

     "எதை வேண்ணாலும் பொய், கட்டுக்கதைன்னு சொல்லு மச்சான். அஸ்வத்தாமனை மட்டும் பொய்யுன்னு சொல்லாத. அவன் இருக்கிறது உண்மை மச்சான்.

     நார்த் இந்தியாவில் ஒரு டாக்டர் கிட்ட வந்த உயரமான மனுசன் ஒருத்தன் என்னோட நெத்தியில் இருக்கிற காயம் ஆறவே மாட்டேங்கிது. நானும் எத்தனையோ டாக்டர்ஸை பார்த்துட்டேன். காயம் குணமான பாடில்லைன்னு  சொல்லி இருக்கான்.

     நீங்க சொல்றதை எல்லாம் வைச்சுப் பார்த்தா ஒருவேளை நீங்க தான் அஸ்வத்தாமனோன்னு அந்த டாக்டர் விளையாட்டாச் சொல்லிட்டு ஸ்டெத்தை எடுத்துட்டு திரும்பும் போது அவன் மாயமா மறைஞ்சு போயிட்டானாம். அவன் கண்டிப்பா அஸ்வத்தாமனா தான் இருப்பான். ஆனா என் கண்ணுக்கு சிக்காம போயிட்டான்" என்றான் பரசு.

     "வேண்டாம் டா பரசு, நான் ஏதாவது சொல்லிடப் போறேன். ஏன்டா இப்படிச் சொல் பேச்சுக் கேட்க மாட்டேங்கிற. ஆறு வருஷமா ஆராய்ச்சி கழுதை குதிரைன்னு சுத்தி சுத்தி அழகான உடம்பை வீணாக்கிட்ட. இதுக்கு அப்புறமாவது நான் சொல்றதைக் கேளு. கம்பெனியைப் பாரு, ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணு. எல்லாரையும் மாதிரி சாதாரணமா வாழு” பொறுமையை இழுத்துப் பிடித்து அவன் சொல்ல, “அப்ப என்ன இலட்சியம்” அதிர்வது போல் நடித்தான் பரசு.  

     நண்பனை முறைத்துக்கொண்டு, “இந்தப் பிஸினஸ் மூலமாக் கூட நீ ஆசைப்பட்ட மாதிரி எல்லோரையும் உன்னைப் பத்தி பெருமையாப் பேசவைக்க முடியும் டா. ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கான்ட்ராக்ட் எடுத்து எல்லாத்தையும் பர்பெக்ட்டா பண்ணி கொடு. தொழில் வட்டாரத்தில் உனக்குன்னு ஒரு பெயர் சம்பாதி.  

     நிறைய நல்லது பண்ணு. ஏதாவது கின்னஸ் சாதனை பண்ண முயற்சி பண்ணு. இல்லையா கழுதை அரசியல் கூட பண்ணு. ஆனா எதுவா இருந்தாலும் என் கண்ணு முன்னாடியே இருந்து பண்ணு டா நல்லா இருப்ப. எனக்கு இருக்கிற ஒரே ப்ரண்டு நீ மட்டுந்தான். நீ எங்க இருக்க, என்ன பண்ற சாப்பிட்டியா இல்லையான்னு வேலைக்கு நடுவில் உன்னைப் பத்தி யோசிச்சு யோசிச்சுப் பைத்தியம் பிடிக்கிது" என்றான் சாஸ்தா.

     "ஏன் இவ்வளவு டென்ஷன். சின்ன வயசில் முடி கொட்டிடப்போகுது. அப்புறம் நல்ல அழகான பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணனும் என்கிற உன்னோட கனவு கனவாவே போயிடும்“ என்ற நண்பனை நான் என்ன சொல்கிறேன் பதிலுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதாய் முறைத்துப் பார்த்தான் சாஸ்தா.

     நண்பனின் மனநிலையைப் புரிந்துகொண்டவனாக, “சரிடா இப்போதைக்கு நான் ஆராய்ச்சி பத்தி யோசிக்காம உன் கூட இருக்கேன். நாளைக்கு மீட்டிங் அட்டென் பண்றேன் போதுமா?" பரசு சொல்ல சாஸ்தாவிற்கே அது பெரும் ஆச்சர்யம் தான்.

     கொஞ்ச நேரம் விட்டாலும் முடிவை மாற்றிக்கொள்வானோ எனப் பயந்து நடைபழகும் குழந்தையின் கரத்தை தந்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்வது போல் நண்பனின் கரத்தைப் பிடித்து அவனை அலுவலகம் அழைத்து வந்தான் சாஸ்தா.

     இருவரும் சேர்ந்து மீட்டிங் செல்ல அது நல்லபடியாகவே முடிந்தது. அடுத்த ஒரு மாதத்தில் அவர்களுடைய கம்பெனி "பரசுராமன் கன்ஸ்ட்ரக்ஸன்" என்கிற பெயரில் நேபாளத்தில் அந்த நாட்டில் உள்ள ஒரு சிறிய கம்பெனியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் உருவாகியது.

     முதல் வேலையாக தங்கள் இருவருக்கும் அங்கு ஒரு வீடு கட்டலாம். வேலை விஷயமாகச் செல்லும் நேரம் தங்க வைக்க வசதியாக இருக்கும் என்று அதற்கான வேலையை ஆரம்பித்தனர் நண்பர்கள் இருவரும். வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போட்டு வேலைகள் ஆரம்பித்து நல்ல படியாக போய்க் கொண்டு இருந்தது.

     "மச்சான் பரசு, நீ ஆராய்ச்சி அது இதுன்னு புலம்பாம கடந்த மூணு மாசமா முழுக்க என் கூட இருந்து தொழிலைப் பார்த்துக்கிறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" ஆனந்தமாய் ஆரம்பித்தான் சாஸ்தா.

     "என்ன பண்றது ப்ரண்டா போயிட்ட, கெஞ்சிக் கேட்ட வேற, அதான் உன் கூடவே இருக்கேன். ஆனா ஒன்னு, எனக்குச் சுவாரஸ்யமா படுற மாதிரி ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி கேள்விப்பட்டேன்னா உடனே இங்க இருந்து எஸ்கேப் ஆகிவிடுவேன் ஆமா" பரசு சொன்ன அதே வேளையில் குழி தோண்டிக் கொண்டிருந்த இயந்திரம் எதிலோ இடித்து வித்தியாசமான சத்தத்தை எழுப்பியது

  

கருத்துகள்

கருத்துரையிடுக