Magic Stone 10


 

மந்திரக்கல் 10

     “ரத்னமாலையா”ஒரே நேரத்தில் ஒரே மாதிரி அதிர்ந்தனர் பரசு சாஸ்தா இருவரும். “நீங்க இரண்டு பேரும் அவங்களைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா என்ன”ஆர்வமாகக் கேட்டாள் யசோதா.

     “ஹிஹி… நாங்க எங்க போய் அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்க” சமாளிக்க நினைத்துச் சிரித்தான் சாஸ்தா.

     “மூஞ்சில கிலோ கணக்கில் திருட்டுத்தனம் தெரியுது, என்ன விஷயம் நீங்களே சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” கைகளைக் கட்டிக்கொண்டு தமையன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தாள் யசோ.

     “என்ன யசோ நீ, நீ கேட்கிறதைப் பார்த்தா நாங்க பில்டிங் கட்டுற இடத்தில் இருந்து எங்களுக்கு ஒரு பெட்டி கிடைச்ச மாதிரியும் அதில்  ரத்னமாலை” சாஸ்தா உளறப்போக விரைந்து வந்து அவன் வாயைப் பொத்தினான் பரசு.

     யசோ நெற்றி சுருக்கி அவர்களைப் பார்க்க, “இவனுக்கு மதியம் அடிச்ச சரக்கோட எபெக்ட் இன்னும் போகல போல. அதான் கண்டதையும் உளறிக்கிட்டு இருக்கான். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, நைட் எல்லாத்தையும் பொறுமையா பேசிக்கலாம்” என்றபடி அறைக்குள் செல்வதற்கு வழிவிட்டான் பரசு.

     “குடிகார நாயே, நீயெல்லாம் திருந்தவே மாட்ட” சாஸ்தாவைப் பார்த்து எரிந்து விழுந்தவள் அப்படியே  பரசு பக்கம் திரும்பி, “ஆமா அந்த சார் கம்பெனி இல்லாம குடிக்க மாட்டாரே, அப்ப அவருக்கு கம்பெனி கொடுத்தது யாரு” என்று குதர்க்கமாய் கேட்டாள்.

     “ஐயே நான் குடிக்கவே இல்ல. அந்தக் கருமத்தை எல்லாம் புத்தி உள்ள எவனும் தொட மாட்டான். அதுவும் நான் வாய்ப்பே இல்லை” அவசரமாகப் பதில் சொன்னான் பரசு.

     “நம்ப முடியல, இருந்தாலும் நம்புறேன். அப்புறம் முக்கியமான விஷயம் நீங்க மட்டும் நல்லவரா இருந்தாப் பத்தாது உங்க கூட இருக்கும் நபர் தப்புப் பண்ணும் போது பிடரியில் நாலு போடு போட்டு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கணும்.

     ஒட்டுண்ணி மாதிரி எப்பப் பாரு உங்ககூடவே தானே சுத்திக்கிட்டு இருக்கான். அந்த எருமைக்கும் கொஞ்சம் நல்லது சொல்லிக் கொடுங்க“ என்றவள், திலோவின் கரத்தைப் பிடித்துக்கொண்டு இடத்தை காலி செய்ய, அவ்வளவு நேரமாக இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டு நிம்மதியானான் பரசு.

     அவள் சென்றுவிட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பரசு, சாஸ்தாவை இன்னொரு அறைக்குள் இழுத்து வந்து கதவைச் சாற்றினான். அடுத்த பத்து நிமிடங்களுக்கு அந்த அறையில் என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த சாஸ்தா சமயோஜிதமாக யோசித்து பாத்ரூமிற்குள் ஓடிச்சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.

     “மலமாடு என்ன புத்திசாலித்தனமா நடந்துக்கிறதா நினைப்பா. உன் நல்ல நேரம் தப்பிச்சிட்ட, இப்ப மட்டும் நீ என் கையில் மாட்டி இருந்த உன் தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டு உன்னையே திங்க வைச்சிருப்பேன் பன்னி. கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் உளறிக் கொட்டப் பார்த்தியே டா " மூச்சு வாங்க பேசினான்.

     “நான் அதைச் சொல்றதால என்னடா வந்துச்சு” உள்ளிருந்து எதிர்குரல் கொடுத்தான் சாஸ்தா.

     “ஏன்டா கேட்க மாட்ட. அந்தக் காட்டேரி, இமயவரம்பனை எப்படியெல்லாம் வாழ்த்தி வாழ்த்திப் பேசினான்னு நீயும் கேட்டுக்கிட்டு தானே இருந்த. அந்த இமயவரம்பனே நான் தான்னு தெரிய வந்தா சும்மா இருப்பாளா? ஆடுகாலி ஆடியே தீர்த்திட மாட்டாளா? சரியான கிராதகி.

     போன ஜென்மத்தில் நான் வேற சும்மா இருக்க முடியாம மூணு பேரைக் கல்யாணம் பண்ணித் தொலைச்சிட்டேன். அதில் இவ எத்தனாவதுன்னு தெரியல. அவளுக்கு மட்டும் இது தெரிஞ்சது, போன ஜென்மத்தில் செஞ்சதுக்கு இந்த ஜென்மத்தில் என்னை உயிரோட சமாதி கட்டிடுவா யமகாதாகி” தன்னைப் போல் பரசு புலம்ப, அவன் நிலை கட்டிய மனைவியைப் பற்றி நண்பனிடம் குறை சொல்லிச் சிரிக்கும் நார்மல் குடும்பத்தலைவனைப் பார்ப்பது  போல் இருந்தது சாஸ்தாவிற்கு. என்ன முயன்றம் முடியாமல் சிரித்துவிட்டான்.

     “சிரிக்கிறியா இருடி மாப்ள, என் தங்கச்சி கிட்ட உன் அருமை பெருமையை ஓதி வைக்கிறேன். நான் கஷ்டப்படும் போது உன்னைச் சந்தோஷமா இருக்க விட்டுடுவேனா, பார்க்கத் தான போற இந்த பரசு யாருன்னு” சொல்லி முடிக்கும் முன்னர் வெளியே வந்திருந்தான் சாஸ்தா.

     “ஏன்டா மச்சான் உனக்கு இந்த நல்ல எண்ணம். நான் என் கல்யாண வாழ்க்கையைப் பத்தி நிறைய கனவு கண்டு வைச்சிருக்கேன். அதில் மண் அள்ளிப் போட்டுடாத டா, நல்லா இருப்ப.

     இந்த ஜென்மத்திலும் உன் தங்கச்சி தான் எனக்குப் பொண்டாட்டின்னு என் தலையில் எழுதி இருந்தா, நான் அவளை தேவதை மாதிரி வைச்சுப் பார்த்துக்கிறேன் டா, கொஞ்சம் கருணை காட்டு மச்சான்” சாஸ்தா காலில் விழாத குறையாக கெஞ்ச பரசுவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

     “சிரிக்கிறயா, நல்லாச் சிரிச்சுக்கோ மச்சான். ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். இன்னைக்கு நான் இருக்கிற நிலைமை உனக்கு வருவதற்கு ரொம்ப நாள் ஆகாது. என்னைக்காவது ஒருநாள் நீ என்கிட்ட என் தங்கச்சியைக் கேட்டு இதே மாதிரி கெஞ்சத் தான் போற, அப்ப” தனக்குள்ளாக சாஸ்தா நினைக்க, “அவனைப் பழிவாங்கப் போறியா?“ எடுத்துக்கொடுத்தது மனசாட்சி.

     “ஐயே, அவன் என்கிட்ட யசோதாவைக் கேட்டா அடுத்த நாளே கல்யாணம் பண்ணிக்கொடுத்திடுவேன்“ எதிர்காலம் தெரியாமல் வேகமாக மனசாட்சிக்குப் பதில் சொன்னான் சாஸ்தா.

      “ஏன் மச்சான் எனக்கு ஒரு சந்தேகம். போன ஜென்மத்தில் நடந்த மாதிரி தான் எல்லாம் நடக்குமுன்னு எப்படி நாம நம்புறோம். ஒருவேளை மாறி நடந்தா" நெடுநேரமாக மண்டைக்குள் உறுத்திக்கொண்டிருந்த விஷயத்தை முன்வைத்தான் பரசு.

     “இல்லையே பரசு, மாற்றி நடக்கிறதா இருந்தா எப்படி டா நாம எல்லோரும் அதே உருவத்தில், அதே உறவுகளோட மறுபடியும் பிறந்திருப்போம்” என சாஸ்தா சொன்னதும் சரியெனத்தான் பட்டது பரசுவிற்கு.

     “சரி உன் தங்கச்சி இப்ப என்ன பண்றா. நமக்கு ஓலைச்சுவடிகள் மூலம் தெரியவந்த கதை அவளுக்கு எப்படித் தெரிய வந்துச்சு” முக்கியமான விஷயத்திற்கு வந்தான்.

     “எல்லாத்துக்கும் நீதான்டா காரணம். காலேஜ் முடிச்ச கொஞ்ச நாளிலே நீ கண்டதைக் கண்டுபுடிக்கிறேன்னு பரதேசம் போக ஆரம்பிச்சுட்ட. அதைப் பத்தியும் நீ என்கிட்ட சொல்ற வித்தியாசமான அனுபவங்களையும் நான் அவகிட்ட, சித்திகிட்ட சொல்லிப் புலம்புவேன். உன் பைத்தியம் அந்தப் பைத்தியத்துக்கும் பிடிச்சிடுச்சு.

     மேற்கு வங்களாத்தில் இருக்கிற விஷ்வபாரதி யுனிவர்சிட்டியில் BA, MA (Anciant Indian History and Archeology) இன்டர்ன்ஷிப்புன்னு எல்லாம் சேர்த்து ஆறு வருஷப் படிப்பு. ஆசைப்படுறாளேன்னு சித்தி சொன்னதை மீறி நான் தான் அவளை அவ்வளவு தூரம் படிக்க வைச்சேன்.

     கல்வெட்டியல் (Epigraphy), பழங்கால நாணயங்கள் பற்றிய படிப்புன்னு (Numismatics) அதுக்குத் தனியா டிப்ளமோ கோர்ஸ் பண்ணா. அவ படிப்புக்கு நாலு சுவத்துக்குள் இருந்தா வேலை செய்ய முடியும். உன்னை மாதிரியே ஊர் ஊரா சுத்தினா. விளைவு நானும் என் வீட்டுக்குப் போக முடியாத நிலைமை.

     அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுமுன்னு சித்திக்கு எண்ணம். டாக்டரேட் பண்ணனுமுன்னு அவளுக்கு எண்ணம். இரண்டு பேருக்கும் நடுவில் நான் தான் முழிச்சுக்கிட்டு இருக்கேன்“ சாஸ்தா சொல்லி முடிக்க, “சண்டிராணி வாய்க்குள் குதிரை ஓட்டுறவன்னு நினைச்சேன்.  நிஜமாவே பெரிய புத்திசாலிதான் போல“ தனக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டான் பரசு.

     ஒரு முறை கொல்லிமலைக்குப் பக்கத்தில் சித்தர்கள் வாழ்ந்ததா சொல்லப்பட்ட ஒரு இடத்தில் ஆராய்ச்சி நடக்கும் போது அவளோட குழு ஒரு கல்வெட்டைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

     வேடர் குலத்துப் பெருமையான வீரமங்கை, நிடத நாட்டு ராஜாவின் ராணியாக செல்லும் நிகழ்வை திருவிழாவாகக்  கொண்டாடவும், வீரமங்கையின் வாழ்வு ஆனந்தமாக இருக்க வேண்டியும் காவல்தெய்வம் கொல்லிப்பாவைக்கு கோவில் எழுப்ப ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறதுன்னு அதில் எழுதப்பட்டிருந்துச்சாம்.

     பல வருஷத்துக்கு முன்னாடி அங்க மலைவாழ் மக்கள் இருந்தாகவும், அவங்களுக்குப் படிப்பறிவு இருந்தாலும்  வெளியே பயன்படுத்த முடியாத காரணத்தால் சந்தோஷமோ, சோகமோ எதுவா இருந்தாலும் அதை நினைவு படுத்திக்கிற மாதிரி இப்படிக் கல்வெட்டுகளில் பொறிச்சு வைப்பதை வழக்கமாக வைச்சிருந்தாங்களாம். அப்படிப்பட்ட கல்வெட்டு தான் இது, பெருசா எடுத்துக்க வேண்டாமுன்னு இவ கூடப்போன ஹெட் சொல்லி இருக்காரு.

     ஆனா என் வீட்டு சண்டிராணிக்கு ஒரே ஆர்வம். அந்தக் காலத்தில் குலம், கோத்திரம், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடு எல்லாம் ரொம்பவே அதிகமாச்சே. அப்படி இருக்க வேடர் குலத்தில் பிறந்த பொண்ணு எப்படி ஒரு நாட்டோட ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு கண்டுபுடிக்கணுமுன்னு ஆர்வம் வந்திருக்கு.

     அரைகுறையா இருக்கும் வரலாற்றைப் பற்றி விசாரித்து முழுமை செய்ய முயற்சிப்பது தானே அவ படிச்ச படிப்பு. அதனால் இந்த இராணியைப் பத்தி முழுசாத் தெரிஞ்சு வெளிப்படுத்த போறேன்னு சொன்னா. இதுவரைக்கும் தான் எனக்குத் தெரியும்.

     அவ கண்டெடுத்த அந்த கல்வெட்டில் இருந்த வீரமங்கை தான் உன் பொண்டாட்டி ரத்னமாலைன்னு எனக்கு சத்தியமா தெரியாது மச்சான்” சாஸ்தா சொல்லி முடிக்க, புரிந்து கொள்ள முடியாத உணர்வை வெளிப்படுத்தியது பரசுவின் முகம்.

     “என்னடா” சாஸ்தா விசாரிக்க, “மலைவாழ் மக்கள் பழமை, பாரம்பரியத்தில் முழுசா ஊறிப் போனவங்க. அதிலும் வேடவர் குலத்து மக்கள் தங்களோட ஜாதியில் பிறக்கிற பொண்ணுங்களை சாமியா நினைச்சு மரியாதை கொடுக்கிறவங்க.

     அப்படிப்பட்டவங்க அவங்க பொண்ணை சொந்த நாட்டையே ஒழுங்கா ஆளத் தெரியாத என்னை மாதிரி ஒரு ராஜாவுக்கு எப்படி கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பாங்கன்னு யோசிச்சேன்" என்றான்.

     “என்னடா பேசுற, ராஜாவோட கல்யாணம் என்றால் யாரு தான் வேண்டாமுன்னு சொல்லுவாங்க சொல்லு. நாம தான் காடு, மேடு, மலைன்னு சுத்துறோம். நம்ம பொண்ணாவது அரண்மனையில் சந்தோஷமா இருக்கட்டுமுன்னு நினைச்சு ரொம்ப சந்தோஷத்தோட கல்யாணம் பண்ணிக் கொடுத்திருப்பாங்க.

     அந்தக் கல்வெட்டில் இருந்ததா யசோதா சொன்னதை வைச்சுப் பார்த்தாக் கூட, இமயனுக்கும் வீரமங்கைக்கும் கல்யாணம் ஆனதில் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் மாதிரித் தானே தெரியுது” என்க, ஒருவழியாக சமாதானமானான் பரசு.

     “ஹாய் இளவரசி” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள் யசோ. “ஹே பஞ்சவர்ணி வந்துட்டியா, நான் சொன்னதுக்காக எங்க அண்ணனைப் போட்டு அந்த வாங்கு வாங்கிட்ட ரொம்ப தேங்க்ஸ்” யசோ தன்னைத் தேடி வந்த கிளியிடம் கொஞ்சினாள்.

     “இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர் யசோ பாவம் உன் அண்ணன்” சாஸ்தாவிற்கு சப்போர்ட்டாக பேசினாள் திலோ.

     “என்னை என்ன பண்ணச் சொல்ற திலோ. எனக்கு அவன் மேல செம காண்டு. நேரடியாத் திட்டினா இரண்டாவது வரிக்கே மூஞ்சைத் தூக்கி வைச்சுப்பான். அதுக்கு அப்புறம் என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது. அதனால் தான் பஞ்சவர்ணி மூலமா ஏதோ கொஞ்சம் திட்டி மனசை ஆறுதல் படுத்திக்கிறேன்" எனத் தோள்களைக் குலுக்கினாள்.

     “அப்படி உனக்கு உங்க அண்ணன் மேல என்னம்மா காண்டு" என்க, “என்ன காண்டா அந்த எருமைமாடு காலகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி நாலைஞ்சு குழந்தையைப் பெத்துப் போட்டு என் அம்மாவைப் பிஸியாக்கி வைச்சிருந்தான்னா, அவங்க என்னைக் கண்டுக்காம விட்டு இருப்பாங்க.

     அவன் எருமை மாடு மாதிரி சுதந்திரமா சுத்துறதால், எங்க அம்மா டோட்டல் ப்ரீ. எப்ப பார்த்தாலும் என்னைப் பத்தி மட்டுமே யோசனை. ஆம்பிளைப் புள்ள ஒன்னை ஊர் மேய விட்டு இருக்கோமே, அந்தப் புள்ளையை கொஞ்சம் என்னன்னு கவனிப்போம் என்கிற அக்கறையே இல்லாம, என்னைப் பத்தி மட்டுமே யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க" என்றாள்.

     “உன் மேல கூடுதல் அக்கறை இருக்கிறது நல்லது தானே" திலோ சொல்ல, “நல்லாச் சொன்ன போ. கூடுதல் அக்கறையில் வக்கனையா, வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டா சந்தோஷப்படலாம். ஆனா எப்பப் பாரு கல்யாணம் பண்ணிக்க, கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க" சலித்தாள் யசோதா.

     “கல்யாணம் தானே பண்ணிக்க உனக்கும் வயசாகிட்டே தானே போகுது" திலோ சொல்ல, “ஹலோ அம்மணி எனக்கு அப்படி என்ன வயசாகிடுச்சுன்னு சொல்ற. நான் ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கேன்.

     ராணி ரத்னமாலையைப் பத்தி முழுசாத் தெரிஞ்சிக்கிட்டு, அவங்க கதையை ஒரு புத்தகமாத் தயார் பண்ணி மொத்த உலகத்துக்கும் அவங்களைத் தெரியப்படுத்தணும். அதுக்கு அப்புறம் தான் இந்த காதல் கத்திரிக்கா கல்யாணம் எல்லாம்” தீர்மானமாக சொல்லிய யசோவை திகைத்துப் பார்த்தது திலோ மட்டும் அல்ல. அவளை பார்க்கவென்று வந்திருந்த பரசுவும், சாஸ்தாவும் சேர்த்து தான்.

    


   

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1