Magic Stone 11


 

மந்திரக்கல் 11

     “உனக்கு ஏன் அந்த ராணி மேல இவ்வளவு அக்கறை” கேட்ட திலோவுக்கு ஆரம்பத்தில் இருந்து புரியாத புதிர் இது ஒன்று தான்.

     “தெரியல திலோ, எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். சாதாரணப் பிடித்தம் எல்லாம் இல்ல. தோழி, அம்மா, தங்கை எல்லாம் சேர்ந்து ஒரு உறவு இருந்தா அப்படி ஒரு அறவா அவங்களோட இருக்க ஆசை.

     நான் சொல்றது உனக்குச் சிரிப்பு கூட வரவைக்கலாம். ஏதோ எனக்கும், அவங்களுக்கும் ரொம்ப நெருக்கமான பந்தம் இருக்கிற மாதிரி அடிக்கடித் தோணும்” யசோவின் வாயில் இருந்து இதைக் கேட்டதும் தொண்டையில் ஏதோ அடைப்பது போல் உணர்ந்தான் பரசு.

      அதென்ன யாருன்னு தெரியாத ஒருத்தர் மேல் இத்தனை அன்புஎன்ற திலோவின் கேள்விக்குப் பதில் சொல்லத் தோன்றாமல் அமைதியாக இருந்தாள் யசோதா.

     “இதைக் கேட்டா மட்டும் வாயைத் திறக்க மாட்டியே. சரி விடு, அடுத்து என்ன செய்யப்போற“ என்க, “என்கிட்ட அவங்க வாழ்ந்ததுக்கான நிறைய ஆதாரம் இருக்கு. அவங்க எப்படி இறந்து போனாங்கன்னு தான் தெரியல. அதைத் தெரிஞ்சிக்க தான் இங்க வந்து இருக்கேன்என்றாள்.

     எப்படி செத்து இருப்பாங்க இரண்டே பாஸிபில் தான் இருக்கு ஒன்னு வயசாகி இயற்கையா செத்துப் போய் இருப்பாங்க இல்லையா யாராவது கொன்னு இருப்பாங்கஎன்றபடி உள்ளே வந்தான் சாஸ்தா.

     நீ சொல்றது உண்மையா இருந்தா அவங்க சாவுக்குக் காரணமானவங்க சவக்குழியைத் தோண்டியாச்சும் பழிவாங்காம விட மாட்டேன் நான்பைத்தியக்காரத்தனமாகச் சபதம் செய்த யசோதாவை மற்ற மூவரும் விநோதமாகப் பார்த்தனர். அந்த அளவு யசோவின் மனதோடு கலந்துவிட்டிருந்தாள் ரத்னமாலை.

     தாயோடும், தமையனோடும், தோழியோடும் உணரும் உணர்வை முகம் கூட தெரியாத யாரோ ஒருவர் மீதும் உணர்கிறோமே இதை விடப் பெரிய பைத்தியக்காரத்தனமான செயல் எதுவும் இல்லை என்று அவ்வப்போது அவளே நினைப்பது உண்டு. ஆனால் அந்த பைத்தியக்காரத்தனத்தை விரும்பிச் செய்யத்தான் அவள் மனம் ஆசை கொண்டது.

     நீ சொல்றது ரொம்பவே காமெடியா இருக்கு யசோ. எப்பவோ செத்துப் போனவங்களைக் கொன்னவங்களை நீ எப்படி பழிவாங்குவ. நீ சொல்ற மாதிரி நடக்கணும் என்றால் போன ஜென்மத்தில் இருந்த அத்தனை பேரும் இந்த ஜென்மத்தில் பிறந்திருந்தா தான் உண்டுஎன்றாள் திலோ.

     டேய் உன் தங்கச்சி தெரிஞ்சு பேசுதா இல்ல தெரியாமப் பேசுதா சாஸ்தா நண்பனின் காதைக் கடித்தான்.

     உன் வாய்க்கு சக்கரை தான் போடணும். நீ சொன்ன மாதிரி நடந்து அந்த ராணி மட்டும் மறுபடியும் பிறந்து இருந்தாங்கன்னா, நான் காலம் முழுக்க அவங்களோடவே இருந்திடுவேன்உணர்ச்சிவசப்பட்டாள் யசோ. இதைச் சொல்லும் போது அவள் கண்கள் ஆசையில் மின்னியது அவளைத் தவிர சுற்றியிருந்த அனைவருக்குமே தெரிந்தது.

     ஏய் லூசு என்ன உளறிக்கிட்டு இருக்க. யாருன்னே தெரியாத, முன்ன பின்ன பார்த்தே இராத ஒருத்தி மேல உனக்கு என்ன இவ்வளவு பாசம்அண்ணனாய் சாஸ்தா கோபம் கொள்ள, அவன் தோள் மேல் கைவைத்து சாந்தப்படுத்த முயற்சி செய்தான் பரசு.

     யாருன்னே தெரியாம தானே நீ உன்னோட ப்ரண்டு பரசுவை மீட் பண்ண. இப்ப அவருக்காக உன் உயிரைக் கொடுக்கிற நிலைமை வந்தா, கொடுக்க மாட்டேன்னு சொல்லுவியாகேட்ட தங்கைக்குப் பதில் சொல்ல முடியவில்லை சாஸ்தாவினால்.

     உனக்கும் உன் ப்ரண்டுக்கும் உள்ள பாண்டிங் எப்படிப்பட்டதோ அதே மாதிரி ஒரு பாண்டிங் தான் எனக்கும்  ரத்னமாலைக்கும். என்ன நீங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறீங்க, நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கல அவ்வளவு தான் வித்தியாசம்.

     ஆனா என் உள்மனசு சொல்லுது, நான் நிச்சயம் அவங்க முகத்தைப் பார்ப்பேன். என் மனசுக்குள்ள அவங்களுக்குன்னு ஒரு உருவம் இருக்கு. அதைத் தாண்டி நிஜத்தில் அவங்க எப்படி இருந்தாங்கன்னு எப்படியாவது கண்டுபிடிப்பேன்.

     இதுக்காகத் தான் எங்கெங்கோ போய் தோண்டித் துருவி, கடைசியா அவங்க புருஷனைப் பற்றியும் அவர் ஆட்சி செய்த நாட்டைப் பற்றியும் கேள்விப்பட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கேன் பெருமையாய் சொன்னாள் யசோ.

     உனக்கு ஏன் அவங்களை இவ்வளவு பிடிச்சிருக்கு. ஐ மீன் அவங்களோட குணம், வீரம், அன்பு, ஆட்சிமுறைன்னு எது உன்னை அவங்க பக்கம் ஈர்த்ததுன்னு கேட்கிறேன்குறுக்கே வந்தான் பரசு.

     இந்தக் கேள்வியை நான் எனக்குள்ள பலமுறை கேட்டு இருக்கேன். ஆனா பதில் தான் கிடைச்சதில்லை. காரணமே இல்லாமல் ஒரு பிடித்தம். இப்ப உங்க கண்ணுக்கு நான் பைத்தியமாத் தெரியுறேன் இல்ல" என்றவளின் குரல் சற்றே இறங்கியது.

     சாஸ்தாவும், திலோவும் அமைதியாக இருக்க யசோ எதிர்பார்த்த பதிலை தலையை இடவலமாக ஆட்டி சைகையால் தெரிவித்தான் பரசு.

     எனக்கும் ரத்னமாலைக்கும் நடுவில் இந்த ஜென்மத்தில் இல்லாமல் போனால் கூட மேபி போன ஜென்மத்தில் ஏதோ ஒரு பெரிய உறவு இருந்திருக்குமுன்னு அடிக்கடி நினைப்பேன்“ என்றவளை விநோதமாகப் பார்த்தான் அண்ணன்காரன்.

     “முன்ஜென்மம், மறுபிறவின்னு யாராவது சொன்னா படிச்ச பிள்ளைங்க ஆதாரம் கொடுன்னு தானே கேட்பாங்க. நீ என்ன இப்படிச் சொல்ற“ அவள் மனதைப் புரிந்துகொள்வதற்காக கேட்டான்.

     “மறுஜென்மம் உண்மைன்னு ஆதாரம் கொடுக்க முடியலங்கிறது உண்மை தான். அதே சமயம் மறுஜென்மம் என்ற ஒன்று இல்லவே இல்லங்கிறதையும் யாரும் ஆதாரப் பூர்வமா நிரூபிக்கலையே.

     சில விஷயங்களை கண்ணால் பார்க்காம உணர்வால் உணரணும். அந்த வகையில் எனக்கு உண்மையான ஆன்மீகத்தில் நம்பிக்கை இருக்கு“ என்றவள், தானே தொடர்ந்தாள்.

     எனக்கு ரத்னமாலையை நினைச்சாலே உள்ளுக்குள் அன்பு ஊற்று மாதிரிப் பொங்கும். அவங்களை என்னோட உள்ளங்கைக்குள்ள வைச்சுப் பார்த்துக்கணும் போலத் தோணும். என் பொண்ணு மாதிரி பாசமா பாதுகாக்கணும், தங்கச்சி மாதிரி ஆசையா சண்டை போடணும், என்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுக்கணுமுன்னு என்னென்னமோ தோணும்.

     ஏதோ அவங்களுக்கு நான் பலமான நன்றிக்கடன் பட்டு இருக்கிற மாதிரியும், என்ன செஞ்சாலும் அதைத் தீர்க்க முடியாதுங்கிற மாதிரியும் தோணும்தன் போக்கில் அவள் சொல்லிக்கொண்டே போக,

     பார் முழுசா பைத்தியமா மாறி இருக்கிற உன்னோட தங்கச்சி யசோதாவைப்  பார்எனச் சூழ்நிலைக்கு சம்பந்தம் இல்லாமல் சாஸ்தாவின் உள் மனம் குரல் கொடுத்தது.

     ஓகே கூல், சீக்கிரம் நீ உனக்குப் பிடித்தமான அந்த இராணியையும் அவங்க புருஷனையும் பார்க்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்என்றான் பரசு.

     “இராணி வரை ஓகே. அவங்க புருஷனை எல்லாம் பார்க்கத் தேவையில்லை. அந்த ஆள் மட்டும் என் கையில் சிக்கினான் கேட்கிற கேள்வியில் நாக்கைப் பிடுங்கிக்கிட்டு செத்திடுவான்“ என்க, “தேவையாத உனக்கு“ என்று நண்பனை வம்பிழுத்த சாஸ்தா, அப்பொழுது தான் அறையைச் சுற்றி வந்து கொண்டிருந்த பஞ்சவர்ணியைக் கவனித்தான்.

     ஏய் கிளியக்கா, என்னை அந்தப் பேச்சு பேசிட்டு இன்னமும் என் வீட்டுக்குள்ள தான் சுத்திக்கிட்டு இருக்கியா நீ.  உன்னை என்ன பண்ணுறேன்னு பாருஎன அதைப் பிடிக்க முயற்சி செய்ய, அது அவனுக்கு ஆட்டம் காட்டித் தப்பித்துவிட்டு திலோவின் தோளில் போய் அமர்ந்தது.

     எனக்கே ஆட்டம் காட்டப் பார்க்கிறயா? உன்னை எப்படிப் பிடிக்கிறதுன்னு எனக்குத் தெரியும். இப்பப் பாருஎன நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து தாவியது மட்டும் தான் சாஸ்தாவின் நினைவில் இருந்தது. அடுத்த கணம் அவன் தலை தரையில் வலுவாக மோதி இருக்க வலி உயிர் போனது.

     அவன் கத்தப்போக அவனுக்கு முன்னதாக மெல்லிய குரல் ஒன்று வலியில் புலம்புவது கேட்க தன்னால் வாயை மூடிக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொண்டான். கிளியைப் பாய்ந்து பிடிக்கிறேன் என்று தானும் விழுந்து, திலோத்தமாவையும் விழ வைத்திருக்கிறோம் என்பது தாமதமாகத் தான் புரிந்தது.

     ஹே ஸ்சாரி மா ஸ்சாரி, நான் அது வந்து குயில் ச்சீ… கிளிவாயில் வந்ததை உளறிக்கொட்டினான். தனித்தனியாக விழுந்திருந்தாலும் திலோவின் ஒரு கை முழுக்க சாஸ்தாவின் உடம்பின் அடியில் சிக்கிக்கொள்ள வலி உயிர் போனது அவளுக்கு.

     டேய் எதுவா இருந்தாலும் அவ கை மேல இருந்து எழுந்திரிச்சிட்டு பேசு டா. பொதிமூட்டை மாதிரி அவ பிஞ்சுக் கை மேல கிடக்கிற, கை உடைஞ்சிடப் போகுதுதமையனைத் திட்டிய யசோ வந்து தோழியைத் தூக்கிவிட்டாள்.

     இந்தக் கலவரத்தில் சாஸ்தா அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் கீழே விழுந்திருந்தது. ஆடவர்களின் கெட்ட நேரம் அது சரியாக யசோவின் கண் பார்வையில் விழுந்துவிட்டிருந்தது. அதைத் தான் எடுத்து ஆர்வமாகச் சுற்றிப் பார்த்தவள் முதல் கேள்வியாக, ஹேய் இதை எங்க கண்டெடுத்தீங்கஎன்றாள்.

     கண்டெடுக்கிறதுக்கு நாங்க என்ன உங்களை மாதிரி எப்பப் பார்த்தாலும் மண்ணையா நோண்டிக்கிட்டு இருக்கோம். அது நாங்க ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கினது வாய்க்கு வந்த பொய்யைச் சொன்னான் சாஸ்தா.

     இல்ல நீ பொய் சொல்ற. ஒரு உலோகம் இருக்கும் அமைப்பை வைச்சே அது எத்தனை வருஷங்கள் பழமையானது யார் காலத்தைச் சார்ந்ததுன்னு சொல்லக்கூடிய திறமை உள்ளவ நான்.

      இந்த மோதிரம் கண்டிப்பா சில நூறு வருஷங்கள் பழமையானதா தான் இருக்கணும். இந்தக் கல்லை சுத்தி இருக்கிற வேலைப்பாட்டை நல்லா உத்துப் பாரு, அந்த மிகக்குறுகிய இடைவெளியில் சிவன், பார்வதி, விஷ்ணு, லட்சுமின்னு சாமி உருவங்கள் செதுக்கி இருக்கு.

     அட்வான்ஸ் டெக்னாலஜி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கூட இவ்வளவு குறுகிய இடைவெளியில் உருவங்களை இத்தனை நேர்த்தியா பண்ணி இருக்க முடியாது. இது கண்டிப்பா பழங்காலத்துல யாரோ ஒருத்தர் கையால உருவாக்கினது தான். உண்மையை சொல்லுங்க நீங்க இதை எங்க இருந்து கண்டெடுத்தீங்கமீண்டும் துவக்க நிலைக்கே வந்தாள் யசோ.

     நீ சொன்ன மாதிரி இது உண்மையிலே சில நூறு வருஷத்துக்கு முந்தையதா இருக்கலாம். இல்லைன்னா வெறும் கலர் கல் பதிச்ச மோதிரமாக் கூட இருக்கலாம். ஆனா நாங்க இதை சும்மா நியூமராலஜி பார்த்து வாங்கிப் போட்டு இருக்கோம் அவ்வளவு தான்" சமாளித்தான் பரசு.

     சரி அப்ப எனக்கு உன்னோட ஆர்டர் ஐடி கொடு நான் நேரடியா அங்க போய் விசாரிச்சுக்கிறேன்" தடாலடியாக அடுத்த முடிவை எடுத்தாள்.

     ஏன் பதற்றத்தோடு வந்தது பரசுவின் குரல். ஏனா இதெல்லாம் ராஜா ராணி காலத்துப் பொருட்கள். இது அவன்கிட்ட நிறைய இருந்தா, கண்டிப்பா வரலாற்றோட அவனுக்குத் தொடர்பு இருக்கும்.

    ராணி ரத்னமாலைக்கு இந்த மாதிரி கலைகள் தெரியுமுன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அதோட இந்த கல்லைப் பார்த்தா நவரத்தினக்கற்களில் ஒன்றான் நீலக்கல் மாதிரி இருக்கு. இதைக் கண்டெடுத்தவனைச் சந்திச்சா எனக்கு இராணி ரத்னமாலையைப் பத்தி ஏதாவது தெரிய வரலாம், அதுக்குத் தான் அங்கே சுற்றி இங்கே சற்றி கடைசியில் ரத்னமாலையிடம் தான் வந்து நின்றாள்.

     யசோ ஏன் உனக்கு இந்த வேலை எல்லாம். அமைதியா அம்மாவோட இருக்கலாம் தானே. காலம் கிடக்கிற கிடையில் யாரோ ஒருத்தரைத் தேடி இப்படி அலைவது நல்லாவா இருக்கு. உனக்கு நீ படிச்ச படிப்புக்கு ஏத்த வேற நல்ல வேலையா நான் பார்த்து தரேன்அக்கறையாகச் சொல்லி தனக்குத் தானே ஆப்பை வைத்துக்கொண்டான் பரசு.

     ஓகோ ஆம்பிளை நீங்க மட்டும் இஷ்டப்பட்ட வேலையைச் செய்யலாம், நினைச்ச நேரம் ஊர் சுத்தலாம். ஆனா பொம்பிளைப் பிள்ளைங்கிற ஒரே காரணத்தால் எனக்கு புடிச்ச வேலையை நான் பார்க்கக் கூடாதா? நான் அப்படித்தான் பண்ணுவேன்கோபமாகப் பேச ஆரம்பித்தாள் யசோதா.

     சரி நீ ரொம்பக் கோவமா இருக்க, நாங்க போயிட்டு அப்புறம் வரோம்என்ற சாஸ்தா வாக்குவாதம் பெரிதாகும் முன்னர் தங்கை மற்றும் நண்பனைப் பிரித்து விட்டு நடுவில் நின்று வெள்ளைக்கொடி பிடித்தான். இன்று தொடங்கி காலம் முழுவதும் தனக்கு இது தான் பெரிய வேலை என்று அவனுக்கு அந்த நிமிடம் புரியாது போனது.

     அன்றைய இரவு சாப்பாடு நேரத்தில் கூட பொதுவான சில பேச்சுகளைத் தவிர்த்து பெரிதாக  யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பரசு, சாஸ்தா இருவரும் ஒரு அறையிலும் யசோ, திலோ இருவரும் ஒரே அறையிலுமாக படுத்துக்கொண்டனர்.

     சலசலவென்ற சத்தத்துடன் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்த அந்த நீரோடையின் மையத்தில் அமைந்திருந்த பாறையின் மேல் வானம் பார்க்க அமர்ந்திருந்த இமயாவின் அருகே வந்தாள் ஒரு பெண்.

     பார்ப்பதற்கு மிக எளிமையாக இருந்தாலும் அவள் முகத்தில் இராஜகளை தென்பட்டது.ராணி தமயந்தி எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் கரையில் இருந்து அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனேஎன்றபடி பாறையில் இருந்து இறங்கி கணுக்கால் வரை இருந்த நீரில் இறங்கி நடந்து வந்தான் இமயன்.

     கணவன் செல்லும் பாதை எதுவாக இருந்தாலும், அங்கே மனைவியும் உடன் வர வேண்டும். அப்படி இருக்க இது வெறும் நீரோடை தானே. இது என்னைப்  பெரிதாக என்ன  செய்துவிடப் போகிறது.

     இன்று தங்களின் பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை நம்முடைய அரண்மனையில், அண்டை நாட்டு ராஜாக்கள் அனைவரையும் அழைத்து, ஆடம்பரமாகக் கொண்டாடுவோம் ஆனால் இப்போது தலைகுனிந்து வருந்தினாள்.

     அண்டை நாட்டு ராஜாக்கள், நம் நாட்டுப் பிரஜைகள், அமைச்சர்கள், குருமார்கள் அனைவரின் முன்னிலையில் என் பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம் என் மனைவியான உன் அருகே கூட என்னால் வர முடியாது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லையே. நான் உன் அருகில், அதுவும் மிக அருகில் இருக்கிறேன். உண்மையில் இந்தப் பிறந்தநாள் தான் என் வாழ்வின் இனிமையான பிறந்தநாள்மையலாகச் சொன்னான் இமயன்.

     வாள் வீச்சில் மட்டும் அல்ல வாய் வீச்சிலும் உங்களை யாராலும் வெல்ல முடியாது தான். அது போகட்டும் நான் உங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்" தமயந்தி சொல்ல, எங்கே கொடு பார்க்கலாம்" இனித்தது இமயனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.

     ஏதோ என்னால் முடிந்த ஒரு எளிமையான பரிசுஎன்று தன் புடவை முந்தானையில் ஒளித்து வைத்திருந்த மரகதக்கல் பதித்த மோதிரத்தை எடுத்து நீட்டினாள் தமயந்தி.

     புடவை முந்தானையில் இருந்து மோதிரத்தை விடுவித்துவிட்டாய். அதற்குப் பதிலாக எத்தனை காலம் என்னை அங்கே அடைத்து வைக்கத் திட்டம்கேலியில் இறங்கினான் அந்த வனம் ஆளும் ராஜா.

     போங்கள் அரசே தாங்கள் என்னை மிகவும் கேலி செய்கிறீர்கள்” சிணுங்கினாள் தமயந்தி. என் ராணியை நான் கேலி செய்யாமல் வேறு யார் கேலி செய்வார்கள். அந்தளவு தைரியம் உள்ள நபர் யார் இருக்கிறார்" புருவம் உயர்த்திய கணவனின் முகத்தில் தெரிந்த கம்பீரத்தில் மதி மயங்கினாள் இராணி.

     “மரகதக் கல் உன் கண்களைப் போலவே மின்னுகிறதே“ என்ன செய்தி என்க, “இந்த மோதிரம் நான் சொல்லி ரத்னா செய்தது. திருமணம் முடித்து வந்த போது, அவள் கூட்டத்தினர் அவளுக்காக கொடுத்தனுப்பிய ஒன்பது நவரத்தினக்கற்களை எப்போதும் அவளுடனே வைத்திருப்பாள்.

     உங்கள் பிறந்தநாளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்தவும் அதில் இருந்து இரண்டு கற்களைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு மரகதக்கல் பதித்த மோதிரத்தையும், உங்கள் நண்பர் உதயனுக்கு நீலக்கல் பதித்த மோதிரத்தையும் தயாரித்து இருக்கிறாள். அவருக்கும் பிறந்தநாள் வரப்போகிறது அல்லவா.

     இந்தப் பெண் இத்தனை திறமைசாலியாக இருப்பாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சரி போகட்டும் என்னுடைய பிறந்தநாள் பரிசு பிடித்திருக்கிறதா" என்க, பரிசையும் பிடித்திருக்கிறது பரிசு கொண்டு வந்த என் அழகு ராணியையும் பிடித்திருக்கிறது" செல்லம் கொஞ்சினான் இமயன்.

     இமயவரம்பனும், தமயந்தியும் எளிமையான உடையில் இருக்க அதற்கு நேர்மாறாக ராஜஅலங்காரத்துடன் நெற்றியில் அதே சங்கு மச்சத்துடனும் அந்த இடம் வந்து சேர்ந்தாள் ரத்னமாலை.

     ரத்னாஇமயன் அழைக்க, விழிமறை வஸ்திரம் விலகும் நேரம் அற்புத புதையல் ஒன்று கிட்டும். அப்புதையல் தம் வாழ்விற்கான திசைகாட்டும்என்றுவிட்டு  காற்றோடு காற்றாய் கரைந்தாள் ரத்னா.

     வியர்த்து விறுவிறுக்க  கனவில் இருந்து எழுந்து அமர்ந்தான் பரசு. அவனுடைய இதயம் தாறுமாறாகத் துடித்தது. "மதியவேளையில் உறங்கும் போதும் கனவில் வந்து ஏதோ சொன்னாள். இப்பொழுதும் ஏதோ சொல்கிறாள் என்றால் நான் செய்ய வேண்டிய காரியம் ஏதோ இருக்கிறது.

     எதுவாக இருந்தாலும் நேரில் வந்து கேட்டுப்பெறலாமே. ஒருவேளை நான் நினைப்பது போல் அவள் மறுபிறவியைப் ப்ராப்தம் பெறவில்லையா? மீண்டும் என்னைச் சேர்வதற்கான வழியைத் தான் ஏதோதோ குறிப்புகளாய் கனவில் வந்து சொல்கிறாளா?” பலவாக யோசித்தான்.

     மதியம் ஏதோ சொன்னாளே, “வெள்ளைக் கிணற்றில் நீந்தும் கருப்பு நிலா காட்டும் யாவும் மாயை.  மாயை மயங்க மாயக்கண்ணன் வர வேண்டும். காரிருள் கரைய காரிகையவள் வர வேண்டும்.

     வெள்ளைக்கிணற்றில் நீந்தும் கருப்பு நிலா என்னவா இருக்கும்“ என தீவிரமாய் யோசனை செய்துகொண்டிருந்த நேரத்தில், அவனைக் கடந்து செல்ல முயன்ற பஞ்சவர்ணி எதிர்பாராமல் அவன் முகத்தை தன் கால்களால் உரசிச் சென்றது.

     ஏய் லூசு கிளி, உன்னால் சாஸ்தாவுக்கு மானம் போச்சு, எனக்கு கண்ணு போச்சுதிட்டியபடி கண்ணைக் கசக்கியவனுக்கு ரத்னா கனவில் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

     வெள்ளைக் கிணற்றில் நீந்தும் கருப்பு நிலான்னா கண்கள். சோ கண்கள் காட்டும் யாவும் மாயை. இரண்டாவது லைன் மாயை மயங்க மாயக்கண்ணன் வர வேண்டும். ஆனா கண்ணன் பேரு உள்ள யாரும் இங்க வரலையே. மூணாவது வரி காரிருள் கரைய காரிகை வர வேண்டும். காரிகைன்னா பொண்ணு, எந்தப் பொண்ணைப் பத்தி சொல்றா. ஒருவேளை யசோவா இருக்குமோ.

     கரெக்ட் யசோ மூலமா தான் எல்லாம் தெளிவாகும் போல. இதைத் தான் ரத்னா கனவில் வந்து சொல்லி இருக்கா. யசோகிட்ட பேசினா எல்லாம் தெளிவாகும் இப்பவே யசோகிட்ட பேசுறேன்என்று கிளம்பினான் பரசு.

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1