Magic Stone 13


 

மந்திரக்கல் 13

     கண்ணைக் கட்டிய துணியை அவிழ்த்த பரசுவிற்கு, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தைப் பார்த்ததும் பல நினைவுகள் வந்து போனது. மணல் புதைகுழியில் மாட்டிய சாஸ்தாவைக் காப்பாற்றியது, ஓவியங்கள் இருந்த பெட்டியைக் கண்டுபிடித்தது, இடிபாடுகளோடு கூடிய கோவிலைக் கனவு நிஜம் என இரண்டிலும் கண்டது, எனப் பரசுவின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கிச் செல்ல, இதுவரை அவன் கவனத்தைக் கவராத, அவன் மறந்து போய் இருந்த ஒரு விஷயம் இந்த நொடியில் கண் முன் காட்சியாய் விரிந்தது.    

     முதல் முறை கனவில் வந்த ரத்னா ஆலயம் மற்றும் கர்ப்பக்கிரத்தைப் பற்றி சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் சிலையாக மாறிய காட்சியோடு சேர்த்து வேறு ஒன்றையும் பார்த்திருந்தான் பரசு.

     சிலையின் காலுக்கு அடியில் இருந்த பீடம், சங்கு சக்கரம் போல் கடுமையாகச் சுழன்று நின்றதும் உள்ளிருந்து இன்னொரு தகடு போன்ற அமைப்பு வெளியே வந்தது. அதில் ஆங்காங்கே சின்னச்சின்ன பள்ளங்களும் கூடவே இரண்டு ஓலைச்சுவடிகளும் இருந்தது.

     அப்ப முதல் கனவிலேயே தனக்கு என்ன வேணுமுன்னு ரத்னா என்கிட்ட சொல்லிட்டாளா? நான் தான் பயத்தில் அதை மறந்து தொலைச்சுட்டேனா?“ என்ற குழப்பத்துடன் சிலையாய் நின்றிருந்த பரசுவை உலுக்கினான் சாஸ்தா.

     விளையாடியது எல்லாம் போதும், நாம வீட்டுக்குள்ள போகலாம் வாங்க.” என்றுவிட்டு யாரையும் எதிர்பாராமல் அவன் முன்னே நடக்க, “நல்லா தானே இருந்தாரு திடீர்னு என்னாச்சு.” யோசனையாய் கேட்டாள் திலோ.

     பூர்வ ஜென்ம ஞாபகம் வந்திருக்கும்.” நக்கலாகச் சொன்னாள் யசோதா. “ஒருவேளை அப்படித்தான் ஏதும் வந்திருக்குமோ.” என்ற நினைப்புடன் பரசுவைத் தேடி ஓடினான் சாஸ்தா.

     சாஸ்தா எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு பண்ணாத. நீ போய் தூங்கு, அவங்களையும் தூங்கச் சொல்லு.” என்றுவிட்டு அறையின் கதவை பரசு உள்பக்கம் தாளிட்டுக்கொள்ள சாஸ்தாவிற்கு நண்பனுடைய நடவடிக்கை புதிதாகத் தெரிந்தாலும் அவன் சொன்ன படியே செய்தான்.

     திலோ படுத்ததும் உறங்கிவிட சாஸ்தா, யசோ இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அன்று எடுத்த சுயமிகளைப் பார்வையிட்டு நல்லவற்றைச் சேமித்து, வேண்டாம் என்பதை அழித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது சண்டை வரவில்லை என்றால் அவர்கள் அண்ணன் தம்பியாய் இருக்க வாய்ப்பில்லையே. ஆளாளுக்குப் பின்மண்டையில் தட்டிய தட்டில் மூளையே கலங்கி இருக்கும். ஆனாலும் கலகலப்புக்கு அங்கே பஞ்சம் இல்லாமல் இருந்தது. நேரம் கடக்க கடக்க இருவரும் தங்களையும் அறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

     நள்ளிரவு நேரம் மெதுவாகத் தன் அறையை விட்டு வெளியே வந்தான் பரசு. நண்பர்கள் யாரும் தன் நடவடிக்கையைக் கவனித்து விடக் கூடாது என்று வீட்டை வெளிப்பக்கமாக சாவி வைத்துப் பூட்டியவன் ஒற்றையாய் நடக்க ஆரம்பித்தான்.

     கட்டுமானப்பணி முடியும் வரை அருகில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்று சாஸ்தா சொன்ன ஐடியா தொழில் வேலைக்குப் பயன்பட்டதோ இல்லையோ சொந்த வேலைக்கு நன்றாகவே பயன்பட்டது.

     அன்று போல் இன்றும் வாட்ச்மேன் நல்ல உறக்கத்தில் இருக்க, அவனைத் தொந்தரவு செய்யாமல், சின்னச் சத்தம் கூட கொடுக்காமல் நத்தையின் வேகத்தில் மெதுவாக ஒரு இடத்தை நோக்கி நடந்தான். அது கட்டுமானப் பணியில் அரிதாகத் தேவைப்படும் பொருள்கள் போட்டு வைத்திருக்கும் இடம். அங்கே தான் சிதைந்த கோவிலின் நடுவில் கிடைத்த சிதிலமடையாத சிலையை வைத்திருந்தனர் வேலையாட்கள்.

     பரசுவிற்கு அதிக வேலை கொடுக்காமல் அறையின் ஆரம்பித்திலேயே பெரிய துணி கொண்டு போர்த்தப்பட்டு பாதுகாப்பாக இருந்தது சிலை. பரசு அதை நோக்கி நடந்த நேரம் சட்டென்று அந்த அறையின் விளக்குகள் அனைத்தும் அணைந்து போக ஒரு நொடி பரசுவின் உயிர் வரை ஆட்டம் கண்டு போனது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு மொபைல் போன் வெளிச்சத்தை நம்பி முன்னேறினான்.

     அந்தப் பெரிய அறையில் பல வேண்டாத பொருள்களுக்கு நடுவில் பரசுவும், அந்தச் சிலையும் மட்டுமே இருக்க முதுகிற்குப் பின்னால் கேட்கும் சின்னச்சின்னச் சத்தங்கள் யாவும் உணவு தேடி அலையும் எலிகளின் சத்தம் தான் என்று புரிந்தாலும் பயம் அகலவே இல்லை பரசுவிற்கு.

     பத்தடி தூரத்தை பல யோசனைகளுடன் கடந்து வந்தவன் வெற்றிக்கொடி நாட்டுவதற்காக சிலையைப் போர்த்தி இருந்த புடவையை விலக்கினான். ஓவியத்தில் பார்த்தது போல் அல்லாமல் கனவில் வந்த இராணியின் தோரணை கொண்ட ரத்னாவின் சிலை அது. தலைமுடி முதல் கால்நகம் வரை ஒவ்வொரு அம்சமும் மிகச்சரியாக இருக்க உயிருள்ள பெண்ணொருத்தி ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பது போல் இருந்தது பரசுவிற்கு.

     “ரத்னா, இது உன்னோட சிலை தான் எனக்குப் புரியுது. ஆனா இதை யார் செய்தது. எதுக்காக வாழ்ந்து மறைஞ்ச உனக்கு கோவில் கட்டி இருக்காங்க. அப்படிப் போன ஜென்மத்தில் உனக்கு என்னதான் ஆச்சு“ என்று சிலையின் தலையை வருடியவனுக்கு சொல்ல முடியாத உணர்வுகளின் உந்துதலில் கண்ணீர் வந்தது. அது அவன் பூர்வஜென்ம உணர்வுகளின் மிச்சம் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

     தலையில் இருந்து தோள்பட்டை, புஜம் கை, விரல்கள் என அன்பாக வருடிக்கொண்டே வந்தவன் இறுதியாக சிலையின் பாதத்தை நெருங்கினான்.

     “இந்தக் காலுக்கு அடியில் தான் நீ என்கிட்ட எதிர்பார்க்கும் விஷயம் இருக்கா” தன்னோடு சொல்லிக்கொண்ட பரசு பாதத்தை மென்மையாக வருடிவிட, அவன் கை பட்டு சிலையின் மெட்டி சுழன்றது.

     வித்தியாசமாக இருக்கிறதே என்னும் நினைப்பில் அவன் மேற்க்கொண்டு மெட்டியைச் சுழற்ற, சில நிமிடங்களில் டப்பென்ற சத்தத்தைத் தொடர்ந்து பீடம் இரண்டாகத் திறந்து, ஒரு பாகம் வெளியே வந்தது. அதில் பல பாதுகாப்புகளுக்கு நடுவில் இருந்த ஓலைச்சுவடிகள் இரண்டு பரசுவின் காலடியில் வந்து விழுந்தது.

     அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த சுற்றுப்புறம் திடீரென பரபரப்பானது. எங்கோ தூரத்தில் நாய் ஊளையிட, வெகு அருகில் ஆந்தை ஒன்று அலறியது. அர்த்த இராத்திரி நேரத்தின் அமைதியை அடியோடு அழிக்கும் வண்ணம் புயல்காற்று வீச ஆரம்பிக்க, ஓலைச்சுவடிகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பரசு.

     வீடு வரை வந்துவிட்டவன் வீட்டிற்குள் செல்ல முயன்ற நேரம் எமனாக வந்து சேர்ந்தது அந்தக் கழுகு. அவனைக் காயப்படுத்தி அவன் கையில் இருக்கும் ஓலைச்சுவடியைக் கீழே போட வைக்க முயற்சித்தது.

     பயம் இருந்தாலும் சென்ற முறை போல் பின்வாங்கவில்லை பரசு. இந்த ஓலைச்சுவடிகள் தான் தன் உயிர் என்பதாய் நினைத்து நெஞ்சோடு இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

     முகம், கை, கால் என சிக்கும் இடங்களில் எல்லாம் தன் கூரான நகங்களால் காயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது கழுகு.

     அந்த நேரத்தில், “பரசுஎனக் கத்திக்கொண்டு ஓடி வந்தான் ஒருவன். அவனைப் பார்த்ததும் என்ன நினைத்ததோ பரசுவை ஒன்றும் செய்யாமல் அந்த இடத்தை விட்டு பறந்து சென்றது கழுகு.

     பரசு, ஆர் யூ ஆல்ரைட். என்ன உடம்பெல்லாம் சேறா இருக்கு. ஆமா இந்த அர்த்த இராத்திரியில் அந்தக் கழுகுகிட்ட என்ன பிரச்சனை பண்ண நீ" தாக்கும் பட்சியிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈர மண்ணில் உருண்டு பிரண்டதால் சட்டையில் ஒட்டிக்கொண்டிருந்த சேற்றைத் தட்டிவிட்டுக்கொண்டே வினவினான் வந்தவன்.

     என்னை ரூமுக்கு கூட்டிட்டு போடா யுவாசற்றே தள்ளாடினான் பரசு. அவன் உடம்பில் இருந்த ஆற்றல் ஒட்டுமொத்தத்தையும் உறிஞ்சி இருந்தது கழுகு. நண்பனின் உடலில் உள்ள சேற்றையும் பொருட்படுத்தாது தன்னுடைய தோள் மேல் அவன் கையைப் போட்டு அணைவாக உள்ளே அழைத்து வந்தான் யுவா.

     அறைக்குள் சுவரில் சாய்ந்தவண்ணம் நண்பனை அமர வைத்தவன், “இப்பவாச்சும் சொல்லு, என்னாச்சு உனக்கு. சாஸ்தாவோட பிறந்தநாளுக்கு வரனுமுன்னு நினைச்சு நான் கிளம்பும் போது, காலநிலை மாற்றத்தில் ப்ளைட் திசைமாறி வேற இடத்துல லேண்ட் ஆகி, அங்க இருந்து ரொம்ப சிரமப்பட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இங்க வந்து சேர்ந்தேன். சரி ஒரு சர்ப்பரைஸா இருக்கட்டுமுன்னு நைட்டோட நைட்டா கிளம்பி வந்தா இங்க இப்படியெல்லாம் நடக்குது" வருத்தமாகக் கேட்டான்.

     உண்மை தான் யுவா, இங்க என்னென்னமோ நடக்குது. அதுக்கெல்லாம் விடை தெரியணுமுன்னு தான், நான் சாஸ்தாகிட்ட கூட சொல்லாம செயலில் இறங்கினேன். ஆனா அந்தக் கழுகு வந்து என்னைப் பாடாய் படுத்திடுச்சு. நீ சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துட்ட. இல்லைன்னா நான் பட்ட ஒட்டுமொத்தக் கஷ்டமும் வீணாப் போய் இருக்கும்" என்றவன் ஓலைச்சுவடிகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

     டேய் மூதேவி, என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுஎன்ற யுவாவின் பேச்சில் ஒரு நொடி அதிர்ந்தான் பரசு. அடுத்தகணம் சாஸ்தாவுடன் நேபாளம் வந்ததில் இருந்து சற்று முன்னர் நடந்தது வரை எல்லாவற்றையும் தெளிவாக சொல்லி முடித்தான். நடந்ததைக் கேட்டு யுவா உறைநிலையில் இருந்து வெளியே வர இரண்டு நிமிடம் ஆனது.

     டேய் எவ்வளவு பெரிய விஷயம் இத்தனை அசாதாரணமா சொல்ற. நான், நீ, சாஸ்தா, யசோ, திலோன்னு எல்லோரும் மறுபிறவி எடுத்திருக்கோமா" நம்ப முடியவில்லை யுவாவினால்.

     நிறைய பேர் மறுபிறவி எடுத்து இருக்காங்க. ஆனா அவங்களுக்கு அது தெரியவராது. நமக்கு தெரிஞ்சிடுச்சு அவ்வளவு தான் வித்தியாசம் ப்ரீயா விடுசாதாரணமாகச் சொன்னவன் ஓலைச்சுவடிகளைப் பிரித்தான். ஒரு விஷயம் வித்தியாசமாக நடந்தால் ஆச்சர்யம் கொள்ளலாம். இங்கு வந்ததில் இருந்து எல்லாம் ஆச்சர்யப்படும் விதத்தில் நடக்க பரசுவிற்குப் பழகிப்போனது.

     “நீ சொல்றதை வைச்சுப் பார்த்தா சாஸ்தா இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது, அவன் பிறந்தநாளுன்னு நாம எல்லோரும் இங்க வந்து சேர்ந்ததுன்னு எதுவும் எதேச்சையா நடந்த மாதிரித் தெரியல.

     யாரோ இல்லை ஏதோ ஒன்னு நம்ம மொத்த பேரையும் ஒரே இடத்தில் திட்டமிட்டு ஒன்னு சேர்த்திருக்குன்னு தோணுது“ என்க, ஆம் என்ற பரசு ஓலைச்சுவடி எழுத்துக்களை இணையத்தின் உதவியுடன் படிக்க ஆரம்பித்தான்.

     ஏன்டா தமிழ் வளர்ச்சி மையத்தில் முக்கியமான இடத்தில் இருக்கிறவன் நான். எவ்வளவோ பழங்காலத்து ஓலைச்சுவடிகளைப் பார்த்து படிச்சு இருக்கேன். அப்படிப்பட்ட என்னை விட்டுட்டு கம்ப்யூட்டர் உதவியைத் தேடுறியேஉரிமையாய் கோபித்தான் யுவா.

    “சரி நீயே படி, ஆனா இப்படியே இல்ல. போய் முதலில் சட்டையை மாத்து. உனக்குத்தான் அழுக்குப் பட்டாலே பிடிக்காதே“ பரசு நினைவுபடுத்தவும் யுவா குளிப்பதற்காகச் சென்ற வேலையில் மொத்தத்தையும் படித்து முடித்தான் பரசு.

     சுவடியில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும் அவனுக்கு இதயத்தில் ஊசி வைத்து குத்துவது போல் சுருக்சுருக்கென்று தைத்தது. கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

     வெளிப் பார்வை பார்ப்பவர்களுக்கு அது கண்ணீர் போலத் தெரியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட அவனுக்குத் தான் தெரியும் வழியும் கண்ணீர் அவன் இதயம் சிந்த முடியாத இரத்தத்தின் வடிவம் என்பது.

     ஒவ்வொரு ஓலையாகப் புரட்டும் போதும் அவனுடைய கண்ணீர் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. இறுதி ஓலையைப் படித்து முடித்ததும், அதைத் தரையில் வீசி எறிந்துவிட்டு தலையில் அடித்து கதறி அழுதான். சற்று நேரத்தில் என்ன நினைத்தானோ மின்னல் வேகத்தில் தரையில் இருந்து எழுந்தவன் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

     அப்போது தான் குளித்து விட்டு வந்த யுவா நண்பனின் அவசரம் கண்டு, பரசு, என்னடா ஆச்சு எங்க போறஎன்று கேட்டுக்கொண்டே அவன் பின்னால் நடந்தான்.  

      பிரம்மை பிடித்தவன் போல் பரசு முன்னேறிக்கொண்டே போக, “அப்படி என்னடா இருந்தது அந்த ஓலைச்சுவடியில். சொல்லித் தொலையேன் டாநின்ற இடத்தில் இருந்து கத்தினான் யுவா. அதற்கும் பதில் சொல்லாமல், சற்று முன்னர் அவனைப் பயமுறுத்திய அதே மாயாஜால சூழ்நிலைகளுக்கு நடுவில் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல் கொண்டது ஒன்றே கொள்கையென தன்போக்கில் நடந்தான்.

     அத்தனை வேகமாக அவன் வந்த இடம், சற்று முன்னர் அவன் வந்து சென்ற அதே வேண்டாத பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம். அங்கே தான் சில நூறு ஆண்டுகளாக மன்னவன் இவன் வருகைக்காக உயிருள்ள சிலையாக உருமாறிய ரத்னா உண்மை அறிந்து வருபவனை இருகரம் கொண்டு அணைக்க முடியாமல் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள்.


 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1