Magic Stone 15


 

மந்திரக்கல் 15

     உன் ப்ரண்டுக்கு என்ன உலகத்தை ஆளும் ராஜான்னு நினைப்பா. அவர் யார் எனக்கும், உனக்கும் ஆர்டர் போட. என்னால் எல்லாம் உங்க கூட வரமுடியாது” கத்தினாள் யசோதா.

     “இங்க பார் அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். எத்தனையோ முறை நீ ஊர் சுத்தப் போகும் இடத்துக்கு என்னைக்கூட்டிட்டுப் போன்னு சொல்லி இருக்கேன். அங்கெல்லாம் ஆபத்து அதிகமுன்னு மறுத்ததே அவன் தான். இப்ப அவனே கூப்பிடுறான்னா கண்டிப்பா காரணம் பெருசாத் தான் இருக்கும்” உறுதியாகச் சொன்னான் சாஸ்தா.

     “அட்லீஸ்ட் அந்தக் காரணம் என்னன்னு கேட்கலாம் தானே” என்க, “நேரம் வரும் போது அவனே சொல்லுவான்” என்றான் சாஸ்தா.

     “நீ இப்படி இருக்கிறதால் அவர் உருப்படாமப் போறாரா? அவர் அப்படி இருப்பதால் நீ இப்படி உருப்படாமக் கிடக்கிறியான்னு தெரியல. ஆக மொத்தம் இரண்டு பேரும் உருப்படாமத் தான் இருக்கீங்க.

     தேளும் இரண்டு கொடுக்கும் எக்கேடும் கெட்டுப்போங்க, நான் சொன்னது சொன்னது தான். சென்னை வர தான் நானும் திலோவும் உங்ககூட வருவோம். அதுக்குப் பிறகு உங்க பயணம் வேற, எங்க பயணம் வேற“ என்றவளுக்கு, அவர்கள் அனைவரும் ஜென்ம ஜென்மமாக ஒரே பயணத்தைத் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

     தங்கை கத்திவிட்டுப் போனதை எல்லாம் தூசி போல் துடைத்துப் போட்ட சாஸ்தா யுவாவின் அருகே வந்தான். என்ன நடக்கிது யுவா, நானும் பார்த்துட்டே இருக்கேன். விடிஞ்சதில் இருந்து அவனுக்கு வால் மாதிரி பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கியே என்ன விஷயம்என்றான்.

     அந்தக் கேள்வியில் சாஸ்தாவினுள் தன் மீது பொறாமை துளர்விட்டு இருப்பதைப் புரிந்து கொண்டான் யுவா. திலோவிற்காக இவன் அவன் மீது பொறாமை கொண்டால், அவனோ பரசுவிற்காக இவன் மீது பொறாமை கொண்டிருந்தான்.

     இரண்டு ஜென்மத்திலும் அவன் காதல் நிறைவேறணும், நீ வேடிக்கை பார்த்துக்கிட்டே இருப்பியா?” தூண்டிவிட்ட மனசாட்சியின் தலையில் தட்டி அடக்கிய யுவா, உன் கேள்விக்கு கட்டாயம் விடை தெரியணுமுன்னா போய் அவன்கிட்டையே கேளுஎன்றுவிட்டு கண்டுகொள்ளாமல் நகர்ந்தான்.

     இவனுக்கு என்னாச்சு, நேத்து வரை என்னிட்ட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான். திடீர்னு என்ன ஆச்சு. அவனுக்கு ரத்னா பேய் புடிச்ச மாதிரி, இவனுக்கும் ஏதாவது பேய் புடிச்சிடுச்சா என்னதன்னோடு நினைத்துக்கொண்டான்.

     கட்டிட வேலைகளை எல்லாம் தங்களின் பார்ட்னர் பொறுப்பில் விட்டுவிட்டு, தாங்கள் திரும்பி வரும் வரை வீட்டை யாருக்கும் கொடுத்துவிட வேண்டாம் என்று ஒரு முறைக்கு இருமுறை சொல்லிவிட்டு கனத்த மனதுடன் நேபாளத்தில் இருந்து இந்தியா வந்தான் பரசு.

     “ரத்னா, இன்னைக்குத் துவங்குற என்னோட இந்தப் பயணம் முடிய எத்தனை நாள்கள் ஆகுமுன்னு எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்னு மட்டும் உறுதி, எத்தனை நாள் ஆனாலும் உனக்கான சாபவிமோட்சனத்தோட தான் நான் உன்னை வந்து பார்ப்பேன்“ என்று மனதோடு சொல்லிக்கொண்டு தில்லி வந்து இறங்கினான்.

     தில்லியில் இருந்து சென்னை விமானத்திற்காக காத்திருந்த வேளையிலும், சென்னை வந்து இறங்கி விமானநிலையத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்த நேரத்திலும் யுவாவுடன் எதையோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த பரசுவைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்த சாஸ்தாவின் அருகே வந்தாள் யசோதா.

     “என்னடா எங்கேயோ பயங்கரமா கருகிற வாசனை வருது“ கிண்டலாய் கேட்டபடி தமையனின் தோளில் கையைப் போட்டாள்.

     “என்ன நான் பொறாமைப் படுறேன்னு சுத்தி வளைச்சு சொல்றியா? நான் எதுக்குப் பொறாமைப்படணும், எனக்குப் பொறாமை எல்லாம் இல்லை” என்றவன் தங்கை சிரிப்பதைப் பார்த்ததும், “லைட்டா பொறாமை தான்“ என்றான் பார்வையை பரசு மற்றும் யுவாவின் மீது வைத்தபடி.

     “எதுக்கு இந்த வெட்டி சீன். உன் ப்ரண்டு கல்யாணம் பண்ணி, வாழ்ந்து முடிச்சு கட்டையில் போற நிலை வந்தாலும் அவருக்கு நீதான் முதலில். உனக்கு அப்புறம் தான் மத்த யாரா இருந்தாலும்“ வித்தியாசமாக ஆறுதல் சொன்னாள் யசோதா.

     “அது தான் எனக்கே தெரியுமே“ அவ்வளவு நேரமாக சுருங்கி இருந்த சாஸ்தாவின் முகம் சிரிப்பைத் தத்தெடுத்தது.

     சரி சாஸ்தா, நானும் திலோவும் கிளம்புறோம் அசராமல் சொன்னாள் யசோதா.

     என்ன கிளம்புறியா? பரசு நாம எல்லோரும் தென்காசிக்குப் போகணுமுன்னு சொன்னானே, மறந்துட்டியா என்ன?" பதறினான்.

     ஏன் மறந்தேன், அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு" எனத் தோள்களைக் குலுக்கினாள்.

     அப்புறம் போறேன்னு சொல்ற"

     உன் ப்ரண்டு சொன்னது ஞாபகத்தில் இருந்தா, அவரு சொன்னதை கேட்கணுமுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன. அவரு யாரு எனக்கு ஆர்டர் போடுறதுக்கு. எனக்கு தாலி கட்டின புருஷனா, இல்ல நான் பிறந்த நாட்டோட ராஜாவா" நிமிர்வாகக் கேள்வி கேட்கிறேன் என்று விதண்டாவாதம் செய்தாள்.

     யம்மா தேவதை நீ தெரிஞ்சு பேசுறியா இல்ல தெரியாம பேசுறியான்னு எனக்குத் தெரியல. ஆனா நீ சொல்றது அத்தனையும் சத்தியமான உண்மைஎனத் தனக்குள் நினைத்துக் கொண்ட சாஸ்தா, "அவனுக்குத் தெரியாம, அவன்கிட்ட சொல்லாம நீ போறது நல்லா இல்லஎனக் கண்டித்தான்.

     கவலை வேண்டாம் சாஸ்தா, உன் தங்கச்சி மட்டும் இல்ல யாருமே எனக்குத் தெரியாம எங்கேயும் போக முடியாது. எல்லாரோட பாஸ்போர்ட்டும் என்கிட்ட தான் இருக்குஎன்று ஒரு சின்னப் பையைக் காட்டினான்.

     வைச்சிக்கோங்க பத்திரமா வைச்சிக்கோங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு எனக்கு அது தேவைப்படாதுஎன்றாள்.

     இப்பத் தேவையில்லை சரி, எப்பவுமே தேவைப்படாதா என்ன. நீங்க என்கூட வரலன்னா தயவு தாட்சண்யமே இல்லாம பாஸ்போர்ட்டை கொழுத்திப் போட்டுடுவேன்அத்தனை தீவிரமாகச் சொன்ன பரசு அங்கிருந்தவர்களுக்குப் புதிது. தனக்குத் தேவையானதை எப்படியாவது சாதித்துக்கொள்ளும் ரகம் தான் என்றாலும், இதுநாள் வரையில் யாரிடமும் இப்படி அடாவடி செய்ததில்லை. நினைத்ததை விட நண்பனுக்குப் பெரிய பிரச்சனை போல என்கிற நினைப்புடன் அருகில் சென்றான் சாஸ்தா.

     இதெல்லாம் நல்லா இல்ல பரசு, என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல. முக்கியமான வேலை இருக்குன்னு சொல்ல சொல்லக் கேட்காம, எங்களை இங்க கூட்டிட்டு வந்ததே தப்பு. இதில் அடுத்தடுத்து ஆர்டர் போட்டுட்டு இருக்கீங்க. இதெல்லாம் எனக்குச் சுத்தமாப் புடிக்கலநானும் உனக்குச் சளைத்தவள் இல்லை என்பது போல் சண்டைக்கு நின்றாள் சண்டிராணி.

     இப்ப என்ன நீ தேடி வந்த ராணி ரத்னமாலையைப் பத்தி தெரிஞ்சிக்க முடியலன்னு தானே உனக்கு இத்தனை கோபம். என்னோட இந்தப் பயணத்தில் கொஞ்சம் கோஆபாரேட் பண்ணு. உனக்கு அந்த ராணி மட்டும் இல்ல, அவங்களோட ஒட்டுமொத்தக் குடும்பத்தோட கதையையும் நான் சொல்றேன்எங்கே தட்டினால் அவள் விழுவாள் என்று பார்த்து அடித்தான் பரசு.

     டேய் கொஞ்சம் பார்த்து பேசுடா, அவகிட்ட ஒன்னு சொல்லிட்டா அதை முடியாதுன்னு மறுக்க முடியாதுபதறிக்கொண்டு முன் வந்தான் சாஸ்தா.

     இவன் வேற ஒரு முந்திரிக்கொட்டை” அண்ணனைப் பார்த்து சொன்னவள் பரசுவிடம் திரும்பி, நிஜமாவா உங்களால  ரத்னமாலை வாழ்ந்ததுக்கான ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா?" ஆசையாகக் கேட்டாள்.

     கண்டிப்பா முடியும், இந்த இடத்தில் ஆரம்பிக்கிற  நம்மளோட இந்தப் பயணம் முடியும் போது உனக்கே எல்லாம் புரியும். உனக்கு இன்னும் சந்தேகமா இருந்தா நான் வேணுமுன்னா உன் அண்ணன் மேல சத்தியம் பண்ணி சொல்றேன்என்றபடி சாஸ்தா அருகில் சென்றான்.

     தேவையில்லை, இவ்வளவு சொல்லும் போது நான் உங்களை நம்புறேன். நான் வந்திடுவேன் சரி, ஆனா திலோத்தமா வரமாட்டாளே" என்றாள் யோசனையாக.

     அவளை வரவழைக்கிற பொறுப்பு உன்னோடது, அவளும் நம்மளோட வரணும் வந்தாக வேண்டும்" சொன்ன பரசுவின் குரலில் அத்தனை உறுதி.

     அவளை வரவழைக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல. அவளோட பாய்பிரண்டு ஒருத்தன் இருக்கான். அவன் எனக்கு நல்ல க்ளோஸ், அவன்கிட்ட பேசி அவனைக் கரெக்ட் பண்ணிட்டா போதும். இவ ஆட்டோமேட்டிக்கா நம்ம பின்னாடி வந்திடுவாயசோ சொல்ல, பரசு சாஸ்தா இருவரும் ஒரே நேரத்தில் அவளை முறைத்தனர்.

     பசங்க சகவாசம் நிறைய இருக்கு போல உனக்கும் உன் ப்ரண்டுக்கும்அண்ணனாய் திலோ மீது கோபம் வருவது சாத்தியம், யசோ மீதும் கோபம் கொள்வதற்கு என்ன காரணம் என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்.

     பசங்க பசங்களோடவும், பொண்ணுங்க பொண்ணுங்களோடவும் மட்டும் தான் பழகணுமுன்னு சொன்னா அது ரொம்பக் கஷ்டம். அதுவும் என்னால அது முடியவே முடியாதுயசோ வேண்டும் என்றே சொல்ல  பரசுவிற்கு உள்ளுக்குள் கோபம் கோபமாக வந்தது. இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

     அவனை வம்பிழுக்காத யசோதா. இதுவரை அவனை எத்தனையோ நிலையில் பார்த்திருக்கேன். நான் பார்த்ததில் அவனோட ரொம்ப மோசமான முகம் இது.

     கடைசியா அவனோட அம்மா, அப்பா சாகும் போது பார்த்தது. மறுபடி இப்ப தான் பார்க்கிறேன். ஏதோ தீர்க்கமான முடிவில் இருக்கான் போல. அவனைச் சீண்டி வாங்கிக் கட்டிக்காத“ சாஸ்தாவின் பேச்சில் நண்பனுக்காக அக்கறை, தங்கைக்கான கண்டிப்பு இரண்டும் சரிசமமாக இருந்தது.

     சரிடா அண்ணா அப்ப இருந்து உன் ப்ரண்டு எதையோ தேடணும் எடுக்கணுமுன்னு மட்டும் சொல்றாரே. அது என்ன, எங்க இருக்கு, அதை யாருக்காக எடுக்க நினைக்கிறாரு எதையும் சொல்ல மாட்டேங்கிறாரே என்ன விஷயம் கைகளால் அபிநயம் பிடித்தாள்.

     அந்த இழவைத் தெரிஞ்சிக்கத் தானே நானும் ரொம்ப நேரமா போராடிக்கிட்டு இருக்கேன் சொல்ல மாட்டேங்கிறான் டி" புலம்பினான் சாஸ்தா.

     சஸ்பென்ஸ், இதுவும் ஒரு வகையில் நல்லா தான் இருக்கு. சரி விடு, தென் தமிழ்நாடு அங்க இருக்கிற மக்களோட பேச்சு வழக்கு ரொம்ப அருமையா இருக்கும். எப்பவாவது அங்க போகணுமுன்னு நினைச்சிட்டே இருந்தேன். உன் ப்ரண்டு மூலமா அது நடக்கப் போகுது.

     ஆங் அப்புறம் நான் ஏதோ பெரிய மனசு பண்ணி உங்ககூட வர ஒத்துக்கிட்டேன். ஆனா ட்ராவல் செலவு, சாப்பாடு செலவு மொத்தத்தையும் நீங்க தான் பார்த்துக்கணும் சரியாயசோ தீவிரமாய் சொல்ல,

    அதை நீ சொல்லவே தேவையில்லை பரசு பார்த்துப்பான். ஆனா இப்ப நீ சொல்ல வேண்டிய விஷயம் இன்னொன்னு இருக்கு" என்றவனை கூர்மையாகப் பார்த்தாள் பெண்.

     என்னது அது." என்க, உன் ப்ரண்டோட பாய்பிரண்டு ஒருத்தன் இருக்கான்னு சொன்னியே, யார் அவன் அவனுக்கும் உங்களுக்கும் எத்தனை நாளா பழக்கம்பரசு கேட்காமல் விட்டதை இவன் கேட்டுவிட்டான்.

     இங்க பார் நீ என் அண்ணன் என்னைக் கேள்வி கேட்கிற எல்லா அதிகாரமும் உனக்கு இருக்கு. ஆனா திலோவைப் பத்தி என்கிட்ட கேட்காத" மெல்ல நழுவப் பார்த்தாள்.

     அடேங்கப்பா இவங்க ரம்பை, இவங்க ப்ரண்டு பெரிய திலோத்தமா. உண்மையிலே அவ திலோத்தமா தானோ. சரி யாரா இருந்தா எனக்கென்ன. இந்தக் காலத்தில் பார்க்கிற எல்லாப் பசங்களும் நல்லவங்க இல்ல, உங்களோட பாதுகாப்புக்குத் தான் கேட்டேன். எப்பவும் பொண்ணுங்க யார் யார் கூட எல்லாம் பழகுறாங்கன்னு வீட்டில் ஒருத்தருக்காவது முழுசாத் தெரிஞ்சு இருக்கணும் அதுக்குத்தான்" பொறுப்பாகப் பேசினான்.

     இதோ பாருடா அண்ணனோட அக்கறையைஎன்றவள் அவன் கழுத்தை ஒற்றைக் கையால் வளைத்துப் பிடித்து, “சரி  நான் பாய்பிரண்டு அது இதுன்னு பேசின உடனே உன் ப்ரண்டுக்கு மூஞ்சி பத்த வைக்காமலே எரியுது. என்ன விஷயம் லவ் கிவ்வுன்னு ஏதும் வந்துடப் போறாரு. கொஞ்சம் சொல்லி வை" என்று வம்புக்கு இழுத்தாள்.

     லவ்வு… அவனுக்கு, அதுவும் உன் மேல. ச்சே ப்பே… ஏதோ நீ என் தங்கச்சின்னு உன்கிட்ட கொஞ்சம் சிரிச்சு பேசி உரிமையோட நடந்துக்கிறான். அதை நீ வேற மாதிரிப் பார்க்காத நீயெல்லாம் அவன் ரேன்ஜ்சுக்கு வொர்த்தே இல்ல" வேண்டுமென்றே சொன்னான்.

     அவனுக்கு அவன் தங்கையைப் பற்றித் தெரியாதா. அவளால் ஒன்று முடியாது என்று சொன்னால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றிய பின்னால் தான் அமைதியாக இருப்பாள். தங்கைக்குப் பரசுவின் மீது அபிப்ராயம் உண்டு என்பது அண்ணன் அறியாதது அல்லவே. அதனால் காற்றாற்று வெள்ளத்தை திசை திருப்பி விட்டான்.

     என்ன சொன்ன, நான் அவன் ரேன்ஜ்க்கு வொர்த் இல்லையா? இதை அவன் சொல்லி இருந்தாக் கூட நான் அமைதியா இருந்திருப்பேன். ஆனா நீ சொன்ன பார்த்தியா, சத்தியமா என்னால தாங்கிக்க முடியல. உலகத்தில் இல்லாத ப்ரண்டைப் பிடிச்சிருக்கேன்னு கூடப்பிறந்த தங்கச்சின்னு கூடப் பார்க்காம அசிங்கப்படுத்துற இல்ல.

     உன் ப்ரண்டு என்ன பெரிய ஆணழகனா? இல்ல மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வாங்கி இருக்கானா. நான் அவனுக்கு தகுதியில்லாதவளா இருக்கிறதுக்கு. என் படிப்பு என்ன, திறமை என்னன்னு அவனுக்குத் தான் தெரியாது. உனக்குமா தெரியாது. நான் எந்தவிதத்தில் அவனுக்குக் குறைந்தவ சொல்லு பார்க்கலாம். ஒரு பையன் மேல ஆசைப்படுறதுக்கு பொண்ணுன்னு ஒரு தகுதி இருந்தா போதும்" மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசினாள்.

     நீ இப்படியெல்லாம் பேசுறன்னு தெரிஞ்சது உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான். அதோட என் பிழைப்பும் போயிடும் நம்ம குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்திடும்மேலும் மேலும் தங்கையைச் சீண்டினான் சாஸ்தா.

     அட ஆமால்ல, சார் அவரோட கம்பெனியில் சாதாரண வேலையாள் தானே. நீ வேணுமுன்னா பார்த்துட்டே இரு, யாருக்கு நான் தகுதியானவ இல்லன்னு சொன்னியோ அவனையே கரெக்ட் பண்றேன், கல்யாணம் பண்றேன். அவன் கம்பெனிக்கு எம்டியாகுறேன். அப்புறம் பாரு உன்னை எப்படி எல்லாம் டார்ச்சர் பண்றேன்னுயசோ சொல்ல சாஸ்தாவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றான்.

     என்னடா என்னால முடியாதுன்னு நக்கலா சிரிக்கிறியா? மவனே நீ பார்த்துட்டே இரு. கூடிய சீக்கிரமே உன்னை தாய்மாமனா ஆக்கல என் பேரு யசோதா இல்ல டாதன்னை விட்டுச் சென்று கொண்டிருந்த அண்ணனின் காதில் விழவேண்டும் என்று கத்தி சொன்னவள் திரும்ப, அவள் பேசியது அனைத்தும் கேட்கும் தூரத்தில் நின்று அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த பரசு அவள் கண்ணில் விழுந்தான்.

     ஹிஹி…அவள் சிரிக்க, “சபதம் போட்டு முடிச்சாச்சுன்னா கிளம்பலாமாசாதாரணமாகக் கேட்டான்.

     ஐயே இவன் என்ன இப்படி சப்புன்னு பியூஸ் போறான். இவனை நம்பி வேற பெட் எல்லாம் கட்டி இருக்கோமே ஜெயிப்போமாயசோ தனக்குள் நினைக்க,ஜெயிப்போம் கண்டிப்பா ஜெயிப்போம்என்றான் பரசு.

     என்ன சொன்னீங்க" யசோ தான் கேட்டதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்க,நாம போற இந்தப் பயணத்தில் கண்டிப்பா ஜெயிப்போமுன்னு சொன்னேன்வானை வெறித்துப் பார்த்தபடி சொன்னான்.

     அன்றைய நாள் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்து இரவு வந்திருந்தது. பரசு, சென்னையில் இருந்து செங்கோட்டை போற டிரைனிலும் ஏறியாச்சு. இப்பவாச்சும் சொல்லேன்டா நாம எதுக்காக தென்காசி போறோம். எதையோ தேடப்போறோமுன்னு சொன்னியே என்னது அது நண்பனாக வந்து சொல்லட்டும் என்று காத்திருந்தவன் நேரம் கூடக் கூட நண்பன் முகம் போகும் போக்கைப் பார்க்க முடியாமல் தானாக வந்து வாயைத் திறந்தான்.

     நாம போகப் போற இடம், தென்காசி மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிற பொதிகை மலைக்கு மொட்டையாகச் சொன்னான்.

     என்னது மலையா, ட்ரக்கிங் போகப் போறோமா. இதுக்குத் தான் அவ்வளவு பில்டப்பா. தென்காசி, நானும் அந்த ஊரைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியா இருந்து, இப்ப கொஞ்ச மாதங்களுக்கு முன்னாடி தான் தனி மாவட்டமா அறிவிச்சாங்க இல்ல.

     அந்த ஊரில் பிரபலமான குற்றாலம் அருவி, நிறைய அணைகள் இருக்குன்னு கேள்விப்பட்டு இருக்கேன். எல்லா இடத்துக்கும் போகலாம்பட்டியலிட்டாள் யசோ.

     ஏய் நீ வேற தொணத் தொணன்னு. நீ சொல்லு பரசு, அங்க போய் நாம என்ன பண்ணப் போறோம்என்க, பரசுவிடம் பெருமூச்சு வந்தது.

     பொதிகை மலை, அமைதியான தென்றலும், அமுதமான தமிழும், அருஞ்சுவையான மூலிகை நீரும் நிறைஞ்சிருக்கிற அற்புதமான இடம். 1300 கோடி வருஷங்களுக்கு முன்னாடி பேரண்டத்தில் பிளவு ஏற்பட்டு, அது அடுத்த 500 கோடி வருஷங்களுக்கு குளிர்ச்சியடைந்து பூமியா மாறியதா நம்பப்படுது. அப்படி உருவான பூமியில் 300 கோடி ஆண்டுகளாத் தான் உயிரினம் வாழ்வதா நம்புறாங்க“ பரசு சம்பந்தமே இல்லாத கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்க, எதிர்எதிர் சீட்டில் அமர்ந்திருந்த மற்ற அனைவரும் ஒருவரை ஒருவரைப் பார்த்துக்கொண்டனர்.

     “பூமி உருவான அந்தக் காலத்தில் இருந்தே பொதிகை மலை இருக்கிறதா அந்தப் பகுதி மக்கள் பரவலா நம்புறாங்க. பூமியில் தோன்றிய முதல் உயிரினமான நுண்ணுயுரியில் ஆரம்பிச்சு, மனுஷங்க வரை எல்லா உயிரினங்களையும் பொதிகை மலை பார்த்திருக்கு. அவங்களுக்கு அடைக்கலமும் கொடுத்திருக்கு.

     திருநெல்வேலி, தென்காசி அதைச் சுத்தி இருக்கிற பல ஊர் மக்களோட நீர்த்தேவையை தீர்த்து வைக்கிற வற்றாத ஜீவநதியான பொருநை நதின்னு அழைக்கப்படுற தாமிரபரணி பொதிகை மலையில் தான் உற்பத்தி ஆகுது.

     சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் நடக்க இருந்த கல்யாணத்தைப் பார்க்க முப்பத்து முக்கோடி தேவர்கள், அசுரர்கள் எல்லோரும்  வடக்கில் சேர்ந்ததால் பூமி ஒருபக்கமா சாய்ந்ததாம். அந்த நேரம் பூமியோட சமநிலைக்காக சிவபெருமானோட வேண்டுகோளின்படி அகத்தியர் தென்மண்டலமான பொதிகைக்கு வந்து பூமியை சமநிலைப்படுத்தினாருன்னு கதை கேட்டு இருப்போம்.

     அப்படித் தென்தமிழகத்துக்கு வந்த அகத்தியர் கடைசி வரைக்கும் வேறு எங்கேயும் போகாம பொதிகை மலையில் இருந்து தமிழ் மொழியை வளர்த்தார் என்றும் இப்ப வரைக்கும் காற்றோடு காற்றா அந்த பொதிகை மலையிலே சுத்திக்கிட்டு இருக்கிறதாவும் சொல்றாங்கபரசு தன் பேச்சை முடிக்கும் முன்னர்,

     நாம அந்த அகத்திய முனிவரைத் தான் தேட வந்திருக்கோமா முந்திக்கொண்டு கேட்டான் சாஸ்தா.

     சாஸ்தா பரசு சொன்ன கதையைக் கேட்ட இல்ல, உன்னோட சொந்தக்காரங்க நிறைய பேர் அந்த மலையில் இருக்காங்களாம். நீ அமைதியா இல்லன்னா உன்னை குடும்பத்தோட சந்தோஷமா இருன்னு அங்கேயே விட்டுட்டு வந்திடுவோம்சாஸ்தாவை வம்பிழுத்தான் யுவா.

     அண்ணனுக்கு சப்போர்ட்டாக சூடாக ஏதோ சொல்ல வந்த யசோ எதுவும் பேசும் முன்னர், நாம அங்க போறது அகத்தியரைத் தேடி இல்லை. அவர் பாதுகாப்பா வைச்சுட்டுப் போன ஓலைச்சுவடிகளைத் தேடி என்று சொல்லி அனைவரையும் பதற வைத்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1