Magic Stone 17


 

மந்திரக்கல் 17

     என்ன ஊருடா இது, இவ்வளவு அழகா இருக்கு. இப்ப தான் புரியுது தென்தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லோரும் ஏன் அவங்களோட சொந்த ஊர் மேல தனிக் கர்வத்தோட இருக்காங்கன்னு. இப்படி ஒரு ஊரை இன்னொருத்தன் கிட்ட பேச்சில் கூட விட்டுக்கொடுக்க யாருக்கும் மனசு வராதுஉள்ளார்ந்து சொன்னான் யுவா.

     இது தான் தென்காசியா மச்சான்இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்துகொண்டே கேட்டான் சாஸ்தா. ஈரப்பதம் நிறைந்த தென்றல் காற்று முகத்தை வருட அத்தனை இதமாக உணர்ந்தான் அவன்.

     நாம இங்க இருந்து நேராக் குற்றாலம் போறோம். அங்க அருவியில் குளிச்சி முடிச்சுட்டு பக்கத்தில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிட்டுட்டு உடனே கேரளாவுக்கு கிளம்பப் போறோம்என்றான்.

     இப்படி அவசர அவசரமாகக் கிளம்ப எதுக்குடா இங்க வரணும், நேரடியா கேரளாவுக்கே போய் இருக்கலாமேசற்று எரிச்சலுடன் கேட்டான் சாஸ்தா. அழகான அந்த ஊரை விட்டு அவ்வளவு விரைவில் கிளம்ப மனம் வரவில்லை அவனுக்கு.

     நாம தேடி வந்த பொதிகை மலை, தென்காசிக்கு மட்டுமே சொந்தமானது இல்ல. அதோட ஒரு பகுதி தென்காசியிலும், இன்னொரு பகுதி கேரளாவிலும் இருக்கு. நாம போக வேண்டியது அந்த மலையோட உச்சியில் இருக்கிற அகத்தியர் கோவிலுக்கு.

     அங்க போகணுமுன்னா வாகனங்கள் போக முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி வழியா முழுசா இரண்டு இரவு, மூன்று பகல் நாம நடக்கணும். பாபநாசம் அணை, காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு மாதிரி காட்டாறுகளைக் கடந்து போகணும்பரசு தன்போக்கில் சொல்லிக்கொண்டே போக, இதெல்லாம் நடக்கிற காரியமா என விழிவிரித்தான் சாஸ்தா.

     களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை மனுஷங்ககிட்ட இருந்து காப்பாத்தும் முயற்சியில் தமிழக வனத்துறை 2009 ல் இருந்து இந்தப் பாதை வழியா அகத்தியர் கோவிலுக்கு போறதை தடை பண்ணிட்டாங்க.

     அதனால் அகத்தியர் பெருமானைத் தரிசிக்க நினைக்கும் பக்தர்களுக்காக மலையோட இன்னொரு பகுதி இருக்கும் திருவனந்தபுரம் வழியா பொதிகை யாத்திரை போக கேரளா வனத்துறை அனுமதி கொடுத்து இருக்காங்க. அந்தக் கோவிலுக்குப் போக இப்ப கேரளா மட்டும் தான் ஒரே வழி.

     இது எனக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிய வந்தது. அதனால் தான் பயணத்தில் மாற்றம். நமக்கு அதிக நேரம் இல்லை, சீக்கிரம் போயாகணும். ஆன்லைன்ல  கைடுக்கு கூட ஏற்பாடு பண்ணிட்டேன்.

     இன்னைக்கு நைட் திருவனந்தபுரத்தில் ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு அதிகாலையிலே நாம மலையேர ஆரம்பிக்கப் போறோம் அனைவருக்கும் சேர்த்து தான் ஒருவனே பேசினான் பரசு.

     "இது எதுவும் கொஞ்சம் கூட நல்லதாப் படல எனக்கு. எந்த ஒரு விஷயத்தையும் முழுசா சொல்லாம, பரதேசி படத்தில் அதர்வாவைத் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குக் கூட்டிட்டுப் போற மாதிரி, உன் ப்ரண்டு நம்ம எல்லோரையும் கூட்டிட்டுப் போறாருதமையனிடம் கடுகடுத்தாள் யசோதா.

     நீ எங்களுக்காக மட்டுமா எங்களோட வர. அந்த ரத்னாவைப் பத்தி தெரிஞ்சுக்கத் தானே எங்க கூட வர. உன்னோட சுயநலமும் இருக்கும் போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்தா தப்பில்லை. ஒழுங்கு மரியாதையா அமைதியாக நட. நானே என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தில் இருக்கேன் பதிலுக்குக் கத்தி சகோதரியின் வாயை அடைத்தவன், நண்பனைப் பின்தொடர்ந்து செல்லலானான். இடவலமாகத் தலையை ஆட்டிவிட்டுத் தானும் அவர்களைப் பின்தொடர்ந்தாள் யசோ.

     குற்றாலம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையைத் தாண்டி வந்த நண்பர்களை வரவேற்றன அங்கு வாழும் குரங்குகள்.

     ஹே சாஸ்தா அங்க பாரேன் உன்னோட ப்ரண்ட்ஸ் கூட்டம். பாவம், ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இவங்ககிட்ட இருந்து பிரிஞ்சு நம்ம வீட்டுக்கு வந்து சேர்ந்த உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்காங்க போல.

     நீ. என்னை நினைச்சு கவலைப்படாத. நான் உனக்கு முழு பெர்மிஷன் தரேன். இப்பவே ஓடிப்போய் உன்னோட ப்ரண்ட்ஸோட சேர்ந்துக்கோ, போ போபரபரப்பாகச் சொன்ன யசோவை முறைத்தான் சாஸ்தா.

     அந்த நேரம் எங்கிருந்தோ குதித்த குரங்கு ஒன்று யசோவின் கழுத்தில் உட்கார்ந்து, அவள் தலைமுடியை இரு கரங்களாலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் மற்ற அனைவருக்கும் முதலில் வந்தது என்னவோ சிரிப்பு தான்.

     ஏய்… கடவுளே… ஏய் மங்கி கீழ இறங்கு. எல்லாரும் பார்த்து சிரிச்சிட்டே இருக்கீங்களே யாராவது வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க, இந்த குரங்கை என் மேல இருந்து தூக்கிப் போடுங்ககத்திக்கொண்டே அங்கும் இங்கும் நடந்தாள், ஓடினாள் என்னென்னவோ செய்து பார்த்தாள். ஆனால் குரங்கு அவள் கழுத்தை விடுவேனா என்று அடம்பிடித்தது.

     சிரித்து முடித்த சாஸ்தாவிற்கு ஒருவழியாகத் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் வர, சின்னக்குரங்கு தானே என்னும் நினைப்புடன் அசால்டாக அதைப் பிடிக்க முயன்றான்.

     அவன் தாக்க வருவதாய் நினைத்துக் கோபத்தில் தன் பற்களைக் காட்டிச் சத்தம் போட்டது குரங்கு. பயந்து போய் பரசு என்கிற அழைப்போடு திரும்பிய சாஸ்தா நண்பன் என நினைத்து அவன் தங்கையை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

     யுவாவிற்கு வயிறு கபகபவென்று எரிந்தது. சாஸ்தா என்று சற்று உரத்துக் குரல் கொடுத்தான். அந்தச் சத்தத்தில் உணர்வுக்கு வந்தவன், தன் பிடியில் இருந்த திலோவைப் பார்த்துவிட்டு, ஸ்சாரி” எனப் பயங்கரமாகப் பதறினான்.

     என்ன பண்றீங்க ஹெல்ப் பண்ணுங்கயசோ பல்லைக் கடித்துக்கொண்டே பரசுவைப் பார்க்க, அவன் நிதானமாக அவள் தோளில் அமர்ந்திருந்த குரங்கை நோக்கி ஒரு வாழைப்பழத்தைக் காட்டினான்.

     அது அதை வாங்க கையை நீட்டும் போது, பழத்தை அவர்களை விட்டு சற்று தொலைவில் தூக்கிப் போட, மற்ற குரங்குகளுக்கு முன் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் யசோவின் மீதிருந்து குதித்து ஓடியது அது.

     ஹப்பாடா இப்ப தான் மூச்சே வருதுஎன்று குரங்கு இழுத்த இழுப்பில் கலைந்திருந்த தன்னுடைய முடிகளை வேக வேகமாகச் சரிசெய்தாள் யசோ.

     நெடுநேரமாக சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த திலோ, லேசாகச் சிரித்துவிட, “போங்க இனி நான் உங்ககூட எங்கேயும் வர மாட்டேன்பிள்ளையார் அரசமரத்தடியில் போய் அமர்ந்ததைப் போல் இவள் கோபத்தில் வேப்பமரத்தின் அடியில் போய் அமர்ந்துகொண்டாள்.

     ஹே உன் பின்னாடி குரங்குடிபரசு அவளைச் சீண்ட,குரங்காதிரும்பிப் பாராமல் கத்திக்கொண்டே ஓடிவந்தவள் பரசுவின் மீது இடித்துத் தடுமாறி சாஸ்தாவை கீழே தள்ளி அவன் மீது பாதுகாப்பாக விழுந்தாள்.

     ஏய் அரிசி மூட்டை எழுந்திரிடி அவனைக் கொன்னுடாதே அவன் எனக்கு ரொம்ப முக்கியமானவன்முடிந்தவரை சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு தான் சொன்னான் பரசு.

     என்னைப் பார்த்து சிரிக்கிற இல்ல. எனக்குன்னு ஒரு நேரம் வரும் அந்த நேரத்தில் நான் உன்னைப் பார்த்துக்கிறேன்உள்ளுக்குள் கருவிக்கொண்டாள் யசோ.

     சரி சரி வாங்க முதலில் அருவிக்குப் போகலாம்யுவா வந்த காரியத்தை நினைவூட்ட, அனைவரும் ஆயத்தமாகினர்.

     சார் இங்க அருவிக்கு எப்படிப் போகணும்தங்களைக் கடந்து செல்ல முயன்ற ஒருவரிடம் வினவினான் பரசு.

     எந்த அருவிக்கு உள்ளூர்காரர் சாதாரணமாகக் கேட்க, வெளியூர் ஜந்துக்கள் ஐந்தும் முழித்தது.

     குற்றால அருவிக்கு பரசு சொல்ல,எந்தக் குற்றால அருவிக்குஎன்றார் அவரும் விடாமல்.

     "நான் சரியாக் கேட்கலையா இல்லை இவரு சரியா சொல்லலையா?” குழம்பியவன், சார் நாங்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கோம் குளிக்கணும். அதனால் தான் அருவிக்கு வழி கேட்கிறோம் விளக்கமாகச் சொன்னான்.

     எல்லோரும் குளிக்க தான் அருவிக்கரைக்கு வருவாங்க. துணிதுவைக்கிறதுக்கு அருவிக்கரையில் அனுமதி இல்லை நக்கலாகச் சொன்னார்.

     உங்க பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவு பண்ணதுக்கு ரொம்ப நன்றி. நீங்க போங்க நாங்க எப்படியாவது தட்டுத் தடுமாறி போய்க்கிறோம் கடுப்பு உச்சந்தலைக்கு ஏறிய போதும் பொறுமையாகவே சொன்னான்.

     அவன் கோபம் உணர்ந்து சிரித்தவர், “என்ன தம்பி கோவமா. ஊரைப் பத்தி ஒன்னுமே தெரியாம தான் சுத்திப் பார்க்க வந்தியளாக்கும். இங்கன ஒன்னுல்ல இரண்டுல்ல மொத்தமா ஒன்பது அருவி இருக்கு. அதான் எந்த அருவியில குளிக்கப் போறீயன்னு கேட்டேன் தனக்கே உரிய பாஷையில் கேட்டார் மனிதர்.

     ஒன்பது அருவியா?” ஆச்சர்ய மிகுதியில் கேட்டாள் திலோ.

     பழைய குற்றால அருவி, பேரருவி, தேனருவி, புலியருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, பாலருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவின்னு மொத்தம் ஒன்பது இருக்கு. இது எல்லாமே மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இங்கன வருது“ என்றார்.

     எல்லாமே ஒரே மாதிரி இருக்குமா இல்ல ஏதாவது வித்தியாசம் இருக்காதெரிந்து கொள்வதற்காகக் கேட்டான் பரசு.

     என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டிய. பேரருவி தான் பிரதான அருவி. தரையில் இருந்து 60மீ உயரத்தில், மலைகளில் விளைஞ்சு கெடக்கும் அபூர்வ மூலிகையைக் கடந்து வாரதால அதுகளோட சத்தையும் கடன் வாங்கி வந்து விழுகிற அருவி.

     இதில் தொடர்ச்சியா கொஞ்ச நாள் குளிச்சா நரம்புப்பிரச்சனை, சைனஸ்  என்று ஆரம்பிச்சு எல்லாம் சரியாப் போயிடுமுன்னு காலம் காலமா நம்பப்படுது.

     செண்பகாதேவி அருவிக்குப் பக்கத்தில் செண்பகா மரங்கள் அதிகமா வளர்ந்து இருக்கும். பாலருவித் தண்ணீர் பால் மாதிரி சுவையாவும், சுத்தமாவும் இருக்கும்.

     புலியருவி சுமார் ஒரு 40மீ உயரத்தில் இருந்து விழும். அதோட தண்ணீர் ஆறு மாதிரி அடர்ந்த காட்டுக்குள் போகும். களக்காடு சரணாலயம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, கோடை காலத்தில் காட்டுக்குள்ள தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் புலியருவியில் தான் எல்லாப் புலிகளும் தண்ணீர் குடிச்சிட்டுப் போகுமாம். அதனால் அதற்கு அந்தப் பெயர் வந்தது.

     ஒரு இடத்தில் விழுற தண்ணீர் ஐந்து பாறை இடுக்கில் பிரிந்து விழுவது ஐந்தருவி. தேனருவி கோடையில் வத்தும் போது, அதுக்கு மேல இருக்கிற பெரிய பெரிய தேன்கூடுகள் தெரியுமாம். பழத்தோட்ட அருவிக்குப் பக்கத்தில் நிறைய பழமரங்கள் இருக்கும். இப்படி ஒவ்வொரு அருவிக்குப் பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு" பெருமையாய் சொல்லி முடித்தார். அது என்னவோ தென்னகத்து மக்களுக்குத் தங்கள் ஊர்ப் பெருமை பேசுவதற்கு வாய் வலிப்பதே இல்லை.

     சரிங்கய்யா ரொம்ப சந்தோஷம். இந்த ஒன்பது அருவியில் எந்த அருவி பாதுகாப்பானதுபெண்களை மனதில் வைத்துக் கேட்டான் பரசு.

     தேனருவிக்கும், செண்பகாதேவி அருவிக்கும் போக முடியாது, அடர் வனத்துக்குள்ள இருக்கு. பழத்தோட்ட அருவி பணக்காரங்களுக்கு மட்டுமுன்னு ஆயிருச்சு. இந்த மூணைத் தவிர வேற எங்கன வேணாலும் போங்க. ஜீன், ஜீலை, ஆகஸ்ட் சீசன் டைம், அதுபோக சனி ஞாயிறு கூட்டம் அதிகமா இருக்கும். இப்ப அவ்வளவு கூட்டம் இல்ல.

     பார்த்துப் போங்க, பேரருவியில் குளிங்க இல்லையா புலிஅருவிக்கு போங்க. சந்தோஷமா நிம்மதியா குளிக்கலாம்வழிகாட்டிவிட்டுச் சென்றார் அவர்.

     சாதாரண ஷவரை விட சற்று பெரிதாக இருக்கும் போல என்று நினைத்து வந்த அனைவருக்கும் பிரதான அருவியைப் பார்த்ததும் உள்ளுக்குள் உவகை ஊற்றெடுத்தது. பல மீட்டர் உயரமும் அகலமும் கொண்ட அருவியில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீர்.

     ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக இடம் இருக்க, “நான் போறேன் பா, திலோ நீயும் வாகுழந்தையைப் போல் யசோ ஓட திலோவும் சற்றும் குறையாத சந்தோஷத்துடன் ஓடினாள்.

     ஹே என்னடி இப்படி குளிருது. நனையாமலே உடம்பெல்லாம் நடுங்குது கோழிக்குஞ்சாய் நடுங்கினாள் திலோ.

     "ஏய் திலோ வா அங்க தான் ஆட்கள் குறைவா இருக்காங்க, அங்க போவோம்எனத் தோழியை இழுத்துக்கொண்டு, மக்கள் யாரும் இல்லாத இடம் நோக்கிச் சென்றாள் யசோ.

     அங்க போகாதீங்கம்மா. அது தண்ணீர் நேரடியா கொட்டுற இடம், தலையில் விழும் போது கல்லு விழுற மாதிரி இருக்கும்என்று அங்கிருந்த ஒருவர் சொன்ன எதுவும் அவர்களின் காதில் விழவில்லை. ஆட்டமென்றால் ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். விளையாட்டு நடுவில் வித்தியாசமான காட்சி ஒன்றையும் கண்டாள் யசோதா.

     அருவித் தண்ணீருக்கு அடியில் பாறையின் மேற்பரப்பில், சிவனில் ஆரம்பித்து இன்னும் சில தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. குறைவாகத் தண்ணீர் விழும் இடங்களில் மட்டுமே அவற்றின் தரிசனம் காணக்கிடைத்தது.

     அதிலும் ஒரு இடத்தில், மிகச்சரியாக சிவலிங்கத்தின் மீது மட்டும் சுண்டு விரல் அளவு தண்ணீர் எங்கிருந்தோ பிரிந்து வந்து தொடர்ச்சியாக விழுந்துகொண்டிருக்க, தெய்வ சிற்பங்களை செதுக்கியது மட்டும் இல்லாமல், அவற்றின் மீது எப்போதும் தண்ணீர் விழுந்துகொண்டிருப்பதற்கு ஆவன செய்திருக்கிறார்களே என ஆச்சர்யப்பட்டாள்.

     மேடம் ரொம்ப நேரமா தண்ணீரில் இருக்கீங்க. இதுக்கு மேல இருந்தா ஜன்னி வந்திடும், வெளியே வாங்க சாயங்காலம் வந்து திரும்பவும் குளிச்சிக்கோங்ககாவலுக்கு இருந்த பெண் போலீஸ் இருவரையும் கவனித்துச் சொல்லும் அளவிற்கு ஆக்கிவிட்டனர் இருவரும்.

     பெண்கள் உடை மாற்றும் இடத்தில் உடையை மாற்றிக்கொண்டு ஈரக்கூந்தலை துவட்டிக்கொண்டே இவர்கள் இருவரும் வர, ஆண்களும் அப்பொழுது தான் அருவியில் இருந்து வந்தனர்.

     அருகே இருந்த உணவகத்திற்குள் நுழைந்து உணவின் வாசத்தை நுகர்ந்த உடன் அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த வயிறு இப்போது கபகபவென எரிந்து தன் இருப்பைக் காட்டியது. எப்போதைக்கும் விட அதிகமாக பசிப்பது போல் இருந்தது அனைவருக்கும். நன்றாக உண்ட பின்னர் கேரளா செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.

     பேருந்து கிளம்பியதும் கண்கள் சொருக அடித்துப்போட்டது போல அப்படியொரு தூக்கம் அனைவருக்கும். நடத்துநர் வந்து எழுப்பி வடும் வரை அவர்களின் அந்த நித்திரை தொடர்ந்தது.

     மாலை ஆறு மணியைக் கடிகாரம் காட்ட அருகே இருந்த டீக்கடை ஒன்றில் ஆளுக்கொரு சாயாவும் பழபோண்டாவையும் சாப்பிட்டனர்.

     சேட்டா இவட நல்ல ஹோட்டல் ஏதங்கினும் உண்டோ தனக்குத் தெரிந்த உடைந்த மலையாளத்தில் பேசினான் பரசு.

     என்ட கடா போர்டில் ஒரு அட்வடைஸ்மெண்ட் உண்டு அதை நோக்காம்பதில் சொல்லிவிட்டு தொழிலில் கண்ணானார் அவர்.

     பரசுவும் அதில் இருந்த எண்ணுக்கு அழைத்து விவரம் கேட்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு அங்கு போய் சேர்ந்தான். பரசு, சாஸ்தா, யுவா மூன்று பேரும் ஒரு அறையிலும் யசோ, திலோ இருவரும் மற்றொரு அறையிலும் தங்கிக்கொண்டனர்.

     நண்பர்களுக்குச் சரியான விபரம் சொல்லாமல் தன்னுடன் அழைத்துச் செல்வது சரிதானா இல்லை ஏதாவது பிரச்சினையில் வந்து முடியுமா?” என வழக்கம் போல் மதில் மேல் பூனையாக இருந்தவன் ஒரு முடிவோடு நண்பனைத் தேடிச் சென்றான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1