Magic Stone 18

 

மந்திரக்கல் 18

     சாஸ்தா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்என வந்து நின்றான் பரசு. விடிந்தால் மந்திரக்கற்களைத் தேடிய பயணம் ஆரம்பித்துவிடும், அதற்கு முன்னர் நண்பனிடம் பேசிவிட வேண்டும் என்ற துடிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வந்துவிட்டிருந்தான்.

     இத்தோட நாலாவது முறை. உண்மையை மறைக்க முடியாம இப்ப சொல்றேன் பாருன்னு வீராப்பா கூப்பிடுவான். அப்புறம், காதலிக்கிற பொண்ணுகிட்ட லவ் சொல்ல வெட்கப்படும் பையன் மாதிரி தயங்கி நின்னுட்டு, அதையும் இதையும் சொல்லி சமாளிச்சுட்டுப் போயிடுவான்“ மனதோடு நண்பனைத் தாளித்தாலும் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு, சொல்லுடா" என்றான் சாஸ்தா.

     தனியாப் பேசணும், யுவா நல்லாத் தூங்குறான். அவனைத் தொந்தரவு பண்ணாம நாம வெளியே போயிடலாம் என்க, சாஸ்தாவும் அதை ஆமோதித்து வெளியே நடந்தான்.

     ஹோட்டலின் அமைதியான ஒரு பகுதியில் நின்று நிலலைப் பார்த்தவண்ணம், இப்ப வரைக்கும் நான் உன்கிட்ட சில உண்மையை மறைச்சு வைச்சிருக்கேன். அது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு தயக்கத்துடன் ஆரம்பித்தான் பரசு.

     உன்னோட நிழலில் ஏதாவது மாற்றம் வந்தாலே என்னால் அதைக் கண்டுபிடிக்க முடியும். என் நண்பன் நீ ஆளே மாறிப் போய் நிக்கிற, எனக்கு வித்தியாசம் தெரியாதா? ட்ரெயினில் வரும் போது நீ என்கிட்ட சொன்ன விஷயங்கள் கால்வாசி தான்னு எனக்குத் தெரியும். மிச்சத்தை எப்படியும் நீயே வந்து என்கிட்ட சொல்லுவன்னு எதிர்பார்த்தேன் என்னோட நம்பிக்கையை நீ காப்பாத்திட்டசொன்ன சாஸ்தாவின் முகத்தில் அப்படியொரு பெருமிதம்.

     நீ என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவன்னு நான் சொல்லித் தான் உனக்குத் தெரியணுமுன்னு இல்ல. இந்த விஷயங்களை உன்கிட்டச் சொல்றதுக்கு எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது, அதனால் தான் சொல்லல. ஆனா இப்ப  சொல்லாம மறைச்சு வைச்சிருக்கிறது அதை விடச் சங்கடமா இருக்கு" இருதலைக்கொள்ளி எறும்பாகிப் போன தன் நிலையை விளக்கினான் நாயகன்.

     நமக்குள்ள என்னடா, உன்னை நான் புரிஞ்சுக்காம யார் புரிஞ்சுக்கப் போறா. என்கிட்ட சொல்ல நீ இவ்வளவு தயங்குறது தான் எனக்கு வேதனையே" ஆறுதலாக நண்பனின் தோளை அழுத்தினான் சாஸ்தா.

     "நான் விஷயத்தைச் சொல்றதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுப்பியா?" இதைக் கேட்கும் போது பரசுவின் கண்களில் வந்து போன பரிதவிப்பு இத்தனை ஆண்டுகளில் சாஸ்தா பார்த்திடாதது.

     நீ கேட்டா ஒன்னு என்ன நூறு சத்தியம் கூட பண்ணிக் கொடுப்பேன் தைரியமாச் சொல்லுநண்பனுக்கு நம்பிக்கையூட்டினான்.

     நான் சொல்லப் போறதை முழுசாக் கேட்டதுக்கு அப்புறம் என்னை என் வழியில் போக விடாம நீ தடுக்கக் கூடாது, நீயும் என்னை விட்டுப் போகக்கூடாது. என்னோட இந்தப் பயணம் ரொம்பக் கடுமையானது. அதில் எனக்கு உன்னோட உதவி அவசியம் தேவை. நீ இல்லன்னா நான் தவிச்சுப் போயிடுவேன்உருக்கமாகப் பேசினான் பரசு.

     "ரொம்ப யோசிக்காம விஷயத்தைச் சொல்லு. நான் எப்பவும் உன்கூட உனக்குத் துணையா தான் இருப்பேன்.” சத்தியம் செய்தான் சாஸ்தா.

     "பில்டிங் கட்ட பள்ளம் தோண்டும் போது இடிபாடுகளுக்கு நடுவில் நாம ஒரு சிலையை கண்டுபிடிச்சோமே" குரல் கரகரக்க பரசு ஆரம்பிக்க,ஆமா அந்தக் கல் சிலை" எடுத்துக்கொடுத்தான் சாஸ்தா.

     கண்களை அழுந்த மூடித்திறந்த பரசு, அது சிலை இல்லடா, அதுதான் ரத்னா" என்றான். காதில் தவறாக ஏதோ விழுந்து விட்டது போல் சுண்டு விரலால் காதைக் குடைந்த சாஸ்தா, “இன்னொரு முறை சொல்லு” என்க, அச்சடித்தது போல் மறுபடியும் அதே விஷயத்தைச் சொன்னான் பரசு. இடிவிழுந்தது போல் ஆனது சாஸ்தாவிற்கு.

     தலையில் ஒரு கை, வாயில் ஒரு கை வைத்துக்கொண்டு அதிர்வோடு நண்பனைப் பார்த்தான். நம்பாதே என்று மெத்தப் படித்த மேதாவி மூளை கட்டளையிட, மனமோ நண்பனை உற்றுக் கவனி என்று சொன்னது.

     பரசு இப்படியான விஷயங்களில் விளையாடுபவன் அல்ல என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் அவன் முகத்தில் வந்து போகும் கவலை, சோகம், குற்றவுணர்வு கலந்த கலவை எல்லாம் சேர்ந்து நண்பனை நம்பச் சொன்னது மனம்.

     இவன் நம்புவதற்காகக் காத்திருந்த பயங்கரம் காதோரம் வியர்வையை வடிய வைக்க, திகைத்த விழியோடு நின்றிருந்தான் சாஸ்தா. இதுக்கே இப்படியா? இன்னும் நீ பார்க்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது என்று விதி சிரித்ததை யாரும் அறியார்.

     “உயிருள்ள ஒரு பொண்ணு எப்படிச் சிலையாக முடியும்” பதற்றம் குறைந்து அதி முக்கிய சந்தேகத்தை எழுப்பினான்.

     போன ஜென்மத்தில் துரோகத்தால் கொல்லப்பட்ட என்னை, விதி முடிஞ்ச என்னை, இயற்கையை மீறிப் பிழைக்க வைச்சு, புது விதியை எழுதினதுக்கான தண்டனையா உயிரோட சிலையாகிட்டா என்றவனின் கண்கள் குளம் கட்டியது.

     “இதையெல்லாம் எப்படித் தெரிஞ்சுக்கிட்ட” கேட்ட சாஸ்தாவிற்கு, அவனுடைய பிறந்தநாள் இரவில் நடந்த யாவற்றையும் சொன்னான் பரசு.

     “அந்த ஓலைச்சுவடிகளை நம்பலாமா டா?” சற்றே தயக்கமாகக் கேட்டான் சாஸ்தா. நண்பன் நெருப்புக்குள் குதி என்று சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் அளவு நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் நெருப்பு குளிரும் என்றல்லவா நண்பன் சொல்கிறான்.

     இந்த விஷயத்தை நான் யுவாகிட்ட கூட சொல்லல, உன்கிட்ட சொல்றேன். ரத்னா காலடியில் இருந்து நான் எடுத்தது மொத்தம் இரண்டு ஓலைச்சுவடிகள். அதில் ஒன்னு இமயன் எழுதினது, இன்னொன்னு ரத்னா எழுதினது“ என்று நிறுத்தினான். சாஸ்தாவிற்குப் பேச்சு வரவில்லை.

     “முதல் ஓலைச்சுவடியில் இருந்தது நம்மளோட முன்ஜென்மத்தில் நாம தெரிஞ்சுக்காத மீதிக் கதை. அதைப் படிச்சு முடிச்ச அடுத்த நிமிஷம், எனக்கு போன ஜென்மத்தோட சில நினைவுகள் வந்து போச்சு“ என்று பரசு நிறுத்த, இன்னும் எத்தனை அதிர்ச்சியைத் தான் ஒரே நேரத்தில் நான் தாங்குவேன் என்பதாகப் பதறினான் சாஸ்தா.

     “மறுஜென்மத்தில் பரசுவாப் பிறக்கப் போற எனக்காக, நான் செஞ்சு முடிக்க வேண்டிய என்னோட கடமையை நினைவு படுத்திக்க, இமயவரம்பனா இருக்கும் போது ஓலைச்சுவடி எழுதும் காட்சியை நான் என் கண்ணால் பார்த்தேன்“ சொல்லிக்கொண்டே போன பரசு, ரத்னாவுக்குத் துணையாக அவள் பக்கத்தில் வைக்கும் படி இன்னொரு உயிருள்ள சிலை ஒன்று தன் பக்கத்தில் உருவாகிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் தானே தொடர்ந்தான்.

     நாடு விட்டு நாடு வந்து நீ வாங்கிப் போட்ட இடம், போன ஜென்மத்தில் நான், ரத்னா, தமயந்தின்னு மூணு பேரும் வனவாசியா வாழ்ந்த காடு.

     ரத்னாவை சிலையாக் கண்டுபிடிச்ச அந்தக் கோவில், இமயனா இருந்த நான் இறந்து போய் மறுஉயிர் பெற்று வந்த பின்னால் என் கையால் கட்டியது.  சாகுற வரைக்கும் அந்தக் கோவிலில் தான் இருந்திருக்கேன்“ தான் கண்ட காட்சிகளை எல்லாம் வரிசைப்படுத்திக்கொண்டிருந்த பரசு, அப்போது தான் சிலையாய் உருமாறிப் போய் நின்ற நண்பனைப் பிடித்து உலுக்கினான்.

     மணல் புதைகுழியில் இருந்து தப்பிச்சு வந்த நான் தெரிஞ்சுக்கிட்டது பாதிக் கதைதான்னா, நம்ம முழுக்கதை தான் என்ன. நீயும் நானும் எப்படிப்பட்ட ராஜாவிவரம் கேட்டான் சாஸ்தா.

     நம்ம நாடு நிடதநாடு. நீ என் சொந்த அத்தை மகன். உன் அப்பா இறந்ததும் சித்தப்பா ஆட்சிப் பொறுப்பை ஏத்துக்க, உதயகுமாரனான உன்னையும், தமயந்தியான உன் தங்கச்சியையும் என்னோட அப்பா நிடதநாட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாரு.

     நாட்டைச் சரிபாதியா பிரிச்சு, ஒரு பாகத்துக்கு இமயனான என்னையும், இன்னொரு பாகத்துக்கு உன்னையும் ராஜாவாப் பட்டம் சூட்டினார். அதோட நிறுத்தல உனக்கும், சேதுக்கரசிக்கும் அதாவது இப்ப திலோவா இருக்கிற என் தங்கச்சிக்கும், எனக்கும் உன் தங்கச்சி தமயந்திக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிருக்கார்.

     நாட்கள் நல்லா தான் போய்க்கிட்டு இருந்திருக்கு. ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போன நான், அங்க சந்திக்கக் கூடாதவங்களைச் சந்திச்சு, அதனால் என்னோட வாழ்க்கையே திசை மாறிடுச்சு.

     ஆட்சி மேல குடும்பத்து மேல இருந்த கவனம் போச்சு. தமயந்தியால என்னைக் கட்டுப்படுத்த முடியல. என்னை மறுபடி பழைய நிலைமைக்குக் கொண்டு வர என்னோட வாழ்க்கைக்குள்ள வந்தவ தான் வலந்தரா, என் இரண்டாவது மனைவி. அவளாலும் அகராதி பிடிச்சு அலைஞ்ச என்னைக் கட்டுப்படுத்த முடியல. அதனால் மூணாவதா வந்தவ தான் ரத்னமாலை.

     நான் பண்ண காரியத்தால் நாட்டுக்குப் பல கெடுதல்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. அதனால கோபப்பட்ட மக்கள் கலகம் பண்ணி என்னை அவமதிக்க, அதைத் தாங்கிக்க முடியாம நான் அரண்மனையை விட்டு வெளியேறிட்டேன். என்னோட சேர்ந்து தமயந்தியும், ரத்னாவும் வந்துட்டாங்கதன்போக்கில் கதை சொல்லிக் கொண்டிருந்த பரசுவைத் தடுத்தான் சாஸ்தா.

     “நீ நாட்டை விட்டு வெளியே போவதை நான் அதாவது உதயன் எப்படி அனுமதிச்சான். உன் இரண்டாவது பொண்டாட்டி ஏன் உன்கூட காட்டுக்கு வரல“ சாஸ்தா கேட்க, “எனக்குத் தெரியல மச்சான், தேவையானது மட்டும் தெரிஞ்சுக்கிட்டாப் போதுமுன்னு இமயன் நினைச்சுட்டானோ என்னவோ“ என்றான்.

     “செத்துப்போன அவனை மறுபடி உயிரோட கொண்டு வந்திருக்கா ஒரு பொண்ணு. அவனால் அவ சிலையாகுறதைத் தடுக்க முடியலையா?“ என்றான்.

     இமயன் மறுபடி உயிரோட வந்து கொஞ்ச நாள் ரத்னா நார்மலா தான் இருந்திருக்கா. தமயந்தியோடஇழப்பில் இருந்தவனை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டு வந்திருக்கா. இனி எல்லாம் சுபம், சந்தோஷமா வாழலாமுன்னு இமயன் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பாரா விதமா இப்படிச் சிலையா மாறி இருக்கா” என்றான். இதுவரை கேட்ட விஷயங்களே இந்த ஜென்மம் முழுமைக்கும் தாங்கும் என்பதால் அமைதியாக இருந்தான் சாஸ்தா.

     அடுத்து ஒரு ஜென்மம் எடுத்து அதில் தான் இமயனால் ரத்னாவைச் சரிபண்ண முடியும் என்கிற நிலைமையில் தான் இந்த ஓலைச்சுவடியை எழுதி இருக்கான். அவன் நினைச்சிருந்தா நடந்த எல்லாத்தையும் தெளிவா எழுதி இருக்கலாம், ஆனா எழுதல.

     அதுக்கு என்ன அர்த்தம். ரத்னாவைக் காப்பாத்த அவனோட மறுபிறப்பால் மட்டும் முடியாது. அவனுக்குத் துரோகம் செய்த நபர்களின் துணையும் வேணும். அதனால் தான் அவங்களை அவனோட அடுத்த ஜென்மமான எனக்குக் காட்டிக் கொடுத்துக்கல போலதன்னுடைய புரிதலைச் சொன்னான்.

     இப்ப என்ன சொல்ல வர நான், யுவா யாருன்னே தெரியாத உன்னோட இரண்டாவது பொண்டாட்டி, யசோ இல்ல திலோ இந்த ஐந்து பேரில் யாரோ ஒருத்தர் உன்னைப் போன ஜென்மத்தில் கொன்னுட்டோம் அப்படித்தானேஎன்ற சாஸ்தாவின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை பரசுவிற்கு.

     எதுக்குடா இந்த ரிஸ்க், நாம இப்ப ஐந்து பேரா கிளம்புறோம். கடைசி வரை ஐந்து பேராத் தான் இருப்போமான்னு தெரியாது. ஒருவேளை போன ஜென்மத்தில் நடந்த மாதிரி இந்த ஜென்மத்திலும் நடந்திட்டா. உன்கிட்ட இருக்கிற ஏதோ ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டு கூட இருக்கிறவங்களே உனக்கு ஆபத்து வரவைச்சிட்டா பதற்றத்துடன் கேட்டான் சாஸ்தா.

     வாய்ப்பு இருக்கு சாஸ்தா, ஏன்னா நாம தேடிப்போற பொக்கிஷம் அந்த மாதிரி. அதோட மதிப்பைத் தெரிஞ்ச யாரும் அதை தங்களுக்குச் சொந்தமாக்கிக்கத் தான் நினைப்பாங்க. நாம ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்" என்றான்.

     “யாரோ ஒருத்தர் என்றால், நானும் கூட உன்னைக் கொல்ல வாய்ப்பிருக்கே டா” சாஸ்தா ஆயாசமாய் கேட்க, “இந்த ஜென்மமுன்னு இல்ல, உன் கையால் சாவுன்னா இன்னும் எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் எடுப்பான் இந்தப் பரசு” புன்னகை சிந்திய பரசு பெருமூச்சுவிட்டு,

     “நான் கண்டுபிடிக்க நினைக்கிற பொக்கிஷத்தால் பலருக்கு பலவிதத்தில் நன்மை, தீமை நடக்ககலாம், நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்“ என்றான்.

     ஏது அந்த ஒன்னுக்கும் உதவாத பழைய ஓலைச்சுவடிகளா?" சாதாரணமாகக் கேட்டான் சாஸ்தா.

     பழசோட அருமை என்னைக்கும் யாருக்கும் முழுசாத் தெரியாது டா. அதோட நாம பொதிகை மலையில் எடுக்கப்போற அந்த ஓலைச்சுவடி சாதாரணமானது கிடையாது. இந்த உலகத்தோட மிகப்பெரிய பொக்கிஷத்தை நோக்கி நம்மைக் கூட்டிக்கிட்டு போகப்போறது அந்த ஓலைச்சுவடி தான்" என்றான்.

     பொக்கிஷம் பொக்கிஷமுன்னு சொல்றியே, அப்படி என்னடா பெரிய பொக்கிஷம்" சாஸ்தாவிற்கு ஆர்வம் அதிகமானது.

     நான் சொன்ன பொக்கிஷம் நீ நினைக்கிற மாதிரி வெறும் பணமோ, நகையோ இல்லை. ரிஷி மூலவர்களுக்கும் கிடைக்காத ரிக், யசூர், சாமவேதங்களுக்கு அப்பாற்பட்டு, தீய சக்திகளின் சிம்ம சொப்பணமான அதர்வண வேதத்தை அடிப்படையா வைச்சு குருபலி, கன்னிபலி, மாதிரி நாம நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத பலிகளை விரும்பி ஏத்துக்கிற பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் இப்படி எல்லாத்துக்கும் ஆதாரமான காவல் தெய்வம் கபாலகாமினி தெய்வத்தை சாட்சியாய் வைச்சு, பஞ்ச பூதங்களையும் நடுங்க வைக்கிற மாதிரி, ஒவ்வொரு யாக குண்டத்திலும் நூறு விலங்குகளைப் பலிகொடுத்து அந்த விலங்குகளோட முத்திரையோட சேர்த்து, அத்தனை நாள் இடைவிடாது ஒலித்த வேத மந்திர வார்த்தைகளின் சப்தம் உருவாக்கிய ஆற்றல்  ஒட்டுமொத்தத்தையும் சேர்த்து சொல்ல முடியாத அளவு சத்தியோட யாகத்தீயில் விளைஞ்ச பன்னிரெண்டு மந்திரக்கற்கள் தான் அந்தப் பொக்கிஷம்சொல்லி முடித்தான் பரசு.

     மந்திரக்கற்களா, சின்னக் குழந்தைங்க பார்க்கிற கதையில் காட்டுவாங்களே அதுதானே. அதெல்லாம் உண்மையில் இருக்குமுன்னு நம்புறியா பரசு என்ன மாதிரி உணர்கிறோம் என்பது புரியாத உணர்வில் கேட்டான் சாஸ்தா.

     இங்கே கற்பனை என்று எதுவும் இல்லை. ஒருவன் பாராததை இன்னொருவனால் எழுத முடியாதுன்னு பெரியவங்க சொல்லி வைச்சிருக்காங்க டா. இப்ப கட்டுக்கதைகளா உலாவிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் விதை ஏதோ ஒரு நிஜ சம்பவத்தில் இருந்து தான் வந்திருக்கும்.

     அதுமட்டும் இல்லை யாகத் தீயில் விளைஞ்சு, புவிஈர்ப்பு விசைக்கு எதிரா அந்தரத்தில் எழுந்து நின்ன மந்திரக்கற்களை போன ஜென்மத்துக் காட்சியா நானே என் கண்ணால் பார்த்தேன்“ என்க, “இது என்ன புதுக்கதை” என்று தான் தோன்றியது சாஸ்தாவிற்கு.

     “என்ன பார்க்கிற, நீ பொய்யுன்னு சொல்ற அந்த மந்திரக்கற்களை உருவாக்கினதே நான் தான். இமயனா நான் இருந்தப்ப நாடு, நகரம், மக்கள், குடும்பமுன்னு எல்லாத்தையும் மறந்துட்டு என்னோட வாழ்க்கையே இந்த மந்திரக்கல்லை உருவாக்குவதில் தான் இருக்குன்னு, நாடி நரம்பு இரத்தம் சதைன்னு எல்லாத்திலும் ஊறிப்போன வெறியோட அதை உருவாக்கினவன் நான் தான்இதைச் சொல்லும் போது பரசுவின் முகத்தில் இதுவரை இல்லாத ஏதோ ஒன்று இருப்பதாய் உணர்ந்தான் சாஸ்தா.

     சரி அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரக்கல்லை உருவாக்கி வைச்சிருந்த இமயன் நீ எப்படி உன்னோட எதிரிகளால் கொல்லப்பட்ட" சரியான கேள்வியை சரியான நேரத்தில் கேட்டான் சாஸ்தா.

     எதிரி இல்லை சாஸ்தா, துரோகி. என்கூட இருந்த துரோகிகள் என்கிட்ட இருந்து இந்த மந்திரக்கற்களை அபகரிக்கிறதுக்கிறதுக்காகக் கூட என்னைக் கொன்னு இருக்கலாம்.

     யாகத்தீயில் மந்திரக்கற்கள் உருவானது என்னவோ உண்மை தான். ஆனா அந்த மந்திரக்கற்கள் செயல்பட ஆரம்பிக்கிறதுக்கு என்ன செய்யணுமுன்னு எனக்குத் தெரியல. அதைப் பத்தி தெரிஞ்சிக்க நான் முயற்சி செய்த நேரத்தில் தான் நான் கொல்லப்பட்டேன்.

     ஆனா நான் செத்ததுக்கு அப்புறம் ரத்னா எப்படியோ அந்த பன்னிரண்டு மந்திரக்கல்லையும் செயல்பட வைச்சு அதுமூலமா எனக்கு உயிர் கொடுத்து இருக்கா.

     எனக்கு மறுபடி உயிர் வந்ததும் ரத்னாகிட்ட அந்த மந்திரக்கற்களைப் பத்திக் கேட்டப்ப, அது பாதுகாப்பா இருக்குன்னும் அது எப்ப எனக்குத் தேவைப்படுதோ அப்ப அவளே அதை எடுக்க எனக்கு வழிகாட்டுவதா சொன்னா. அந்த வழிமுறைகள் எழுதிய ஓலைச்சுவடி தான் நான் அவ சிலைக்கு அடியில் இருந்து கண்டுபிடிச்ச இரண்டாம் ஓலைச்சுவடி.

     அவ சொன்ன சொல்லை மீறல டா. இத்தனை வருஷத்துக்குப் பிறகு, நம்மளோட இந்த இரண்டாவது ஜென்மத்தில் அவ காட்டின வழியில் நடந்த பின்னால் தான், நாம மறுஜென்மம் எடுத்தது, நாம பிறந்த நோக்கம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சோம்.

     கனவில் அவ சொன்ன விஷயங்களை நான் சரியாகக் கணிச்ச பின்னால் தான் மந்திரக்கற்களைப் பத்தியும் அது இருக்கும் இடங்களைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கும் இந்த ஓலைச்சுவடி கிடைச்சதுஎன்றான் பரசு.

     ஆக இப்ப இந்த பன்னிரண்டு மந்திரக்கற்களைத் தேடி தான் நாம போறோம் இல்லையா? அதை கண்டுபுடிச்சி அதோட சக்தியை வைச்சு ரத்னாவுக்கு உயிர் கொடுக்கப் போற அப்படித்தானேசாஸ்தா கேட்க,ஆமா சாஸ்தா, நீ சொல்றது நடந்து ரத்னா உயிரோட வந்துட்டா எனக்கு அதுவே போதும்ஆனந்தமாய் சொன்னான் பரசு.

     அப்ப என் தங்கச்சி யசோ, அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறஎன பரசு சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டான் சாஸ்தா.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1