Magic Stone 2

 


மந்திரக்கல் 2

     ”Sir some problem, Please come here” இன்ஜினியர் ஒருவன் கத்த, ”இந்த நேபாளி நிக்கிங்களுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பாரு ஏதாவது கோளாறு பண்ணிக்கிட்டு, இதோ வரேன் டா லூசு” யாருக்கும் தமிழ் தெரியாது என்பதால் மனதில் தோன்றியதை வஞ்சகமில்லாமல் பேசிவிட்டு சாஸ்தா முன்னேறி நடக்க, என்ன நினைத்தானோ தானும் நண்பனைப்  பின்தொடர்ந்தான் பரசு.

     கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும் போது தடங்கல் ஏற்பட என்னவென்று தோண்டிப் பார்த்த வேலையாட்கள், இடிபாடுகளுடன் கூடிய கல்லால் ஆன பழங்காலக் கட்டிடம் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தனர்.

     அவ்விடம் வந்து நடந்ததைத் தெரிந்துகொண்ட சாஸ்தா,
“போச்சா, டேய் பரசு அவ்வளவு தான் எல்லா திங்க்ஸ்ஸையும் பேக் பண்ணு. சிங்காரச் சென்னைக்கு நாம பேக்கப் ஆக வேண்டிய நேரம் வந்திடுச்சு” சலிப்பாகச் சொன்னான்.

     “என்னாச்சுடா, எதுக்கு இவ்வளவு சலிச்சுக்கிற” வழக்கம் போல் நிதானமாகக் கேட்டான் பரசு.

     “கொஞ்ச நாளைக்கு நம்ம வேலையை நிறுத்த வேண்டிய கட்டாயம் எற்பட்டு இருக்கு” பள்ளத்திற்குள் இருக்கும் கோவிலைப் பார்த்துக்கொண்டே சொன்னான் சாஸ்தா.

     “பில்டிங் கட்ட தோண்டும் போது இந்த மாதிரி ஏதாவது கிடைக்கிறது சகஜம் தானே. கிடைச்சது தங்கமாவோ, வைரமாவோ இருந்தா அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிக்கலாம். இது வெறும் கல் கட்டிடம் தானே, தூக்கிப் போட்டுட்டு நாம நம்ம வேலையைப் பார்க்கலாமே” பரசு கேட்க நண்பனைப் புரியாத பார்வை பார்த்தவன்,

     “இதுக்குத் தான் காடு, மேடு மட்டுமே சுத்தினாப் போதாது, நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்கணுமுன்னு சொல்றது. இது இந்தியா இல்ல நேபாளம். உனக்குத் தெரியாதா என்ன அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரைக்கும் நேபாள நாடு தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல இந்துக்கள் வாழுற நாடு. இங்க இந்துக் கடவுள்களோட கோவில்கள் ரொம்பவே அதிகம். பூஜை புனஸ்காரம், கடவுள் நம்பிக்கை எல்லாம் அதை விடவுமே அதிகம்.

     நம்ம இடத்தில் இடிஞ்ச கோவில் ஒன்னு கிடைச்சிருக்குன்னு யாராவது விஸ்வாசமான பிரஜை மூலமா இந்நேரம் இந்த நாட்டு அறநிலையத் துறைக்குப் போன் போய் இருக்கும். அவனுங்களும் தூசி தட்ட எல்லா ஆயுதத்தையும் எடுத்துட்டு இந்நேரம் கிளம்பி இருப்பாங்க.

     இந்த இடத்தை அவங்க கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்து, ஆராய்ச்சிங்கிற பெயரில் எல்லாத்தையும் நோண்டிப் பார்த்துட்டு அப்புறம் தான் முடிவு பண்ணுவாங்க" பெருமூச்சுவிட்டான் சாஸ்தா.

     “என்ன முடிவு எடுப்பாங்க” பரசு கேட்க, “ம்ம்… இந்த இடத்தை நம்ம கிட்ட கொடுக்கிறதா, இல்லை அவங்களே வைச்சுக்கிட்டு இடிஞ்சு போன கோவிலில் இருக்கிற மூலவருக்கு மறுபடி இதே இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணனுமான்னு.

     ப்ச்… இது எல்லாம் நடந்து முடிய எப்படியும் இரண்டு மூணு மாசமாவது ஆகும். அதுவரைக்கும் நாம ஒன்னும் பண்ண முடியாது. பேசாம பார்ட்னர்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு நாம கிளம்ப வேண்டியது தான்” சற்றே கடுப்புடன் சொன்னான் சாஸ்தா.

     “வேணும் டா உனக்கு, இந்தியாவில் இடமே இல்லாத மாதிரி இங்க வந்து கடையைப் போட்டல்ல அனுபவி. ஆனாலும் உனக்குக் கொஞ்சம் பொறுப்பு கம்மி தான்டா” சிரித்தான் பரசு.

     “அடேய் இவ்வளவு நேரம் நடந்தது கூட எனக்கு வலிக்கல டா. பொறுப்பைப் பத்தி நீயெல்லாம் பேசுறன்னு நினைக்கும் போது தான் நெஞ்சு லேசா வலிக்கிற மாதிரி இருக்கு“ என்ற சாஸ்தா நண்பன் முறைப்பதைப் பார்த்துவிட்டு, “என் கிரகம் ஜோசியக்காரன் ஒருத்தன் பேச்சை கேட்டு நல்லா மாட்டிக்கிட்டேன்" என்க, இது புதுத் தகவல் பரசுவிற்கு.

     “ஜோசியக்காரனா? எப்ப இருந்து நீ இந்த ஜோக்கர் வேலை எல்லாம் பார்க்க ஆரம்பிச்ச” சிரிப்புடன் கேட்டான்.

     “அந்த வயித்தெரிச்சலை ஏன்டா கேட்கிற, நான் வளர்த்து வைச்சிருக்கேனே அருமைத் தங்கச்சி யசோதா. அவளுக்குக் கல்யாண யோகம் வந்திடுச்சான்னு பார்க்கணும், அதுக்கு ஒரு நாடி ஜோசியர் கிட்ட போகப்போறேன். நீயும் அங்க வரணுமுன்னு சித்தி ரொம்ப வற்புறுத்துனாங்க.

     சரி வேலை பிஸி ரொம்ப ஸ்ட்ரஸ்ஸா இருக்கு. அங்க போனா டிமான்டி காலணி மாதிரி நல்லா காமெடியா இருக்குமுன்னு நினைச்சுப் போனேன். சித்தி சும்மா இல்லாம அந்த எருமையோட கை ரேகையோடு சேர்த்து, என் கைரேகையும் ஒரு வாரத்துக்கு முன்னாடி கொடுத்து பலன் பார்க்கச் சொல்லி இருந்திருக்காங்க" என்று ஆரம்பித்தவன் மேற்க்கொண்டு ஏதோ சொல்லப்போக அவனைத் தடுத்த பரசு, “உன் கைரேகை எப்படி உன் சித்திக்கிட்ட” அதி முக்கியமான கேள்வியைக் கேட்டான்.

     “சித்தி எதுக்கோ கேட்கிறாங்கன்னு நான் தான் நடு பேப்பரில் சும்மா நச்சுன்னு கைரேகை வைச்சு கொண்டு போய் கொடுத்தேன்” தன்னை மிகவும் திறமைசாலியாக காட்டிக் கொள்ள வேண்டி பேப்பரின் நடுவில் என்பதை அழுத்திச் சொன்னான் சாஸ்தா.

     பரசு அதைக் கண்டுகொள்ளாமல், ”சரி அந்த ஜோசியர் அப்படி என்ன தான் சொன்னான்” என்று அடுத்த கட்டத்துக்குத் தாவினான்.

     ”நாங்க போய் உட்கார்ந்தோமா? அந்தாளும் இரண்டு ஓலைச்சுவடியை எடுத்துக்கிட்டு வந்து எங்க முன்னால உட்கார்ந்தான் டா. எல்லா ஜோசியக்காரனை மாதிரியும் சும்மா எதையாவது அவுத்துவிட்டு காசை புடுங்கப் போறான்னு மனசுக்குள்ள நினைச்சிட்டு அவனுக்கு எதிரே உட்கார்ந்து இருந்தேன்" சாஸ்தா கண்களில் ஒளியுடன் சொல்லிக்கொண்டிருக்க, “ம்ம்ம்ம் அப்புறம்” கொட்டாவி விட்டபடி போலியான ஆர்வத்துடன் கேட்டான் பரசு.

     “என்கூடப் பிறந்த குட்டிப்பிசாசோட பெயர், பிறந்த நட்சத்திரம், அவளோட குணநலன், எங்க வீட்டில் நடந்த சில நல்லது கெட்டதுன்னு எல்லாத்தையும் சொன்னான், அப்ப கூட எனக்கு அவன் மேல நம்பிக்கை வரல. ஆனா கடைசியில் ஒரு விஷயம் சொன்னாரு மச்சான் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன்” சாஸ்தா சீரியஸாக சொல்ல, “அப்படி என்னடா சொன்னான் அந்த ஆளு திடீர்னு மரியாதை கூடிடுச்சி” கேலி செய்தான் எதிரே இருந்தவன்.

     “நானும் தங்கச்சியும் ஒரு அப்பா இரண்டு அம்மாவுக்கு பிறந்தவங்கன்னு கரெக்ட்டா சொல்லிட்டாரு மச்சி, நான் அப்படியே ப்ரீஸ் ஆகிட்டேன். மத்த விஷயத்தைக் கூட அவரு யார் மூலமாவது விசாரிச்சு சொல்லி இருப்பாருன்னு வைச்சிக்க. ஆனா இந்த விஷயம் தான் யாருக்குமே தெரியாதே. உன்கிட்ட சித்தின்னு சொன்னாலும் மத்த இடங்களில் அவங்களை அம்மான்னு தானே சொல்லுவேன்.

     இதெல்லாம் எப்படி அவருக்குத் தெரியும். ஒருவேளை மத்த ப்ராடு ஜோசியக்காரங்க மாதிரி இல்லாம இவரு உண்மையான ஜோசியரா இருப்பாரோன்னு பாதி மனசா நான் இருக்கும் போதே, 'நம்பலாமா வேண்டாமான்னு அலைபாயுற உன்னோட மனசை அடக்கிக்கிட்டு நான் சொல்லப் போறதை நல்லாக் கேளுன்னு' சொன்னார். எனக்கு அப்படியே தூக்கி வாறிப் போட்டுடுச்சி" ஆனந்தப் பெருக்குடன் சொன்னான் சாஸ்தா.

     “ஆங் அப்புறம்” பரசுவின் கேலி கூட மனதில் பதியாமல் அன்றைய நிகழ்வின் பாதிப்பில் மூழ்கினான் சாஸ்தா.

     'உன் தொழிலை மேம்படுத்த இடம் தேடி அலையுற தானே. பொறுமையின் சிகரம் பகவான் புத்தர் பிறந்த இடம், பூமாதேவியோட கர்ப்பத்தில் இருந்து மாதா சீதா பிறந்த இடம். முக்கண்ணன் சிவனோட கண்பார்வை நேரடியா படுற புண்ணிய ஸ்தலம் நேபாளம். அங்க உன்னோட தொழிலை நிலைநிறுத்து. எத்தனை போட்டி வந்தாலும் அத்தனைக்கு நடுவிலும் நீ மேல வந்துக்கிட்டே இருப்ப, உன்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது.

     எதிர்காலத்துல நீயும் உன் கூட இருக்கிறவங்களும் நினைச்சுப் பார்க்க முடியாத பல பொக்கிஷத்தைப் பெருவீங்கன்னு சொன்னாரு மச்சான்' சாஸ்தா சொல்லி முடிக்க, ஏதோ மிகப்பெரிய ஜோக் ஒன்று காதில் விழுந்தது போல் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தான் பரசு.

     “டேய் ஏன் டா இப்படி சிரிக்கிற” நண்பன் தன்னை நம்பவில் எனவும் சாஸ்தா முகம் லேசாக வாடியது.

     “அட என்னடா நீ. படிச்சவன், முற்போக்கான சிந்தனை கொண்டவன். எதுவா இருந்தாலும் ஒரு முறைக்கு நாலு முறை நல்லா யோசிச்சு பண்றவன், இவ்வளவு பெரிய கம்பெனியை எந்தவிதமான கஷ்டமும் இல்லாம ரன் பண்றவன்னு உன்னைப் பத்தி ரொம்பப் பெருமையா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீ, போயும் போயும் ஒரு ஜோசியக்காரன் சொன்னதை அப்படியே நம்பி, போடா போடா” மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் பரசு.

     “அப்ப அவரு எப்படி எல்லாத்தையும் சரியா சொன்னாராம்” சாஸ்தா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கேட்டான்.

     “கொஞ்சம் ஓவரா தான் கிண்டல் பண்ணிட்டோமோ” என்று யோசித்த வண்ணம் சாஸ்தாவின் தோளில் கை போட்ட பரசு, ”மச்சான் உன் சித்தி கொடுத்த கைரேகைகளை வாங்கினதுக்கு அப்புறம், அவன் அவனுக்குன்னு இருக்கிற ஆள்களை விட்டு உங்களை பாலோ பண்ணச் சொல்லி, ஒரு வாரத்துக்குள்ள உங்களைப் பத்தி நல்லா விசாரிச்சு இருந்திருப்பான்.

     ஒரு வாரத்துக்கு அப்புறம் நீங்க அங்க போன நேரத்துல,  உனக்கே தெரியாம சித்தின்னு கூப்பிட்டு இருப்ப. அதை வைச்சு அவன் ஒரு கெஸ்ஸில் சொல்லி இருப்பான். அதைப் போய் நம்பிக்கிட்டு, இந்த ஜோசியம் எல்லாம் உண்மை இல்லை டா” என்றான் பரசு.

     “எனக்கு என்னமோ அப்படித் தோணல மச்சான். என்ன தான் அந்த ஜோசியர் சொன்னதை நான் நம்பினாலும், உடனே கண்மூடித்தனமா இங்க நம்ம பிரான்ச் ஓபன் பண்ண நினைக்கல. அப்படி நான் நினைச்சாலும் அது முடியாது. அதுக்கு ஏகப்பட்ட செயல்முறை இருக்கு.

     ஆனா நம்பு மச்சான் நான் இங்க ப்ரான்ச் ஓபன் பண்ணலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சு அதுக்கான வேலையை ஆரம்பிச்சப்ப எந்தவிதமான தடங்கலும் இல்லாம வேலை எல்லாம் உடனே உடனே முடிஞ்சது.

     நாம டையப் வைச்சிருக்கோமே ஒரு கம்பெனி. அவங்களுக்கு இங்க ஒரு பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சது. ஆனா அதை எடுத்து நடத்த போதுமான பணம் இல்லை. அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்னு சொன்னதும், இலாபத்தில் பாதிப் பாதின்னு ஐந்து வருஷத்துக்கு கான்ட்ராக்ட் ரொம்ப சுலபமா கிடைச்சது.

     நமக்காக ஒரு இடம் வாங்கணுமுன்னு பார்ட்னர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது, சீதா கோவில் நேர்பார்வையில் இருக்கும் இந்த இடம் இப்ப தான் விலைக்கு வருது. விருப்பம் இருந்தா வாங்கிக்கோங்கன்னு சொன்னாங்க. நானும் விசாரிச்சுப் பார்த்து வில்லங்கம் எதுவும் இல்லைன்னு வாங்கிப்போட்டுட்டேன்.

     நீ அடிக்கடி சொல்லுவ தானே. இந்த உலகத்தில் நம்மளையும் மீறின சக்தி ஒன்னு இருக்கு. நம்ம மூலமா ஒரு வேலை நடக்கணுமுன்னா அதை எப்படியாவது அது சாதிச்சுக்கும் என்று.

     அப்படி ஒரு சக்தியால தான், நான் இந்த இடத்தில் வேலை ஆரம்பிக்கணுமுன்னு எல்லாம் எனக்கு பேவரா வேக வேகமா நடக்குதோன்னு கூட யோசிச்சேன் டா. பட் இப்ப ஒரு தடங்கல் வந்து இருக்கு.

     நான் இங்க வேலையை ஆரம்பிக்கணும் என்பது அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தியோட விருப்பம் என்றால், இந்தத் தடையும் சீக்கிரம் விலகிடுமுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” சீரியஸாகப் பேசினான் சாஸ்தா.

     “அடப் போடா இந்தக் காலத்துல போய் ஜோசியக்காரன் சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு" சலித்தான் பரசு.

     “அடேயப்பா, குழந்தைங்க சாப்பிடுவதற்கும், சொன்ன பேச்சுக் கேட்பதற்கும் பெரியவங்க சொல்லி வைச்ச கதைகளை உண்மைன்னு நீ நம்புறப்ப, ஜோசியம், குறி சொல்றவங்க, சாமி ஆடுறவங்க எல்லாம் உண்மைன்னு நான் ஏன் நம்பக் கூடாது. மோர் ஓவர் முக்கால்வாசி போலிகளுக்கு நடுவில் கால்வாசி நல்லவங்களும், உண்மையானவங்களும் ஏன் இருக்கக் கூடாது” என்றான் சாஸ்தா.

     “மச்சான் நான் சொல்றதை நல்லாக் கேளு. சாமி ஆடுறதுங்கிறது நம்மளை மீறின ஒரு பொஸஸிவ் ஸ்டேட். சைன்டிபிகா சொல்ணுமுன்னா, அந்த நேரத்தில் மட்டுமே வரும் ஸ்பிலிட் ஸ்பெர்சனாலிட்டி மாதிரி. ஆடி அடங்கின பிறகு அந்தக் குறிப்பிட்ட நேரத்துல அவங்க என்ன பண்ணாங்கன்னு அவங்களுக்கு ஞாபகத்திலே இருக்காது.

     அவங்க அவங்களா இல்லாத அந்த நேரத்தில் சொல்லும் வார்த்தைகள், இந்தக் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக் காரங்க சொல்றது எல்லாம் பலிக்கும் என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். பணம் பறிக்க இது சுலபமான வழி“ என்க, “ஆனா அவங்க சொல்ற பல வார்த்தைகள் பலிக்குதே. அதுக்கு என்ன சொல்லப்போற“ சாஸ்தா கேட்க, “அதுக்கு நாம தான் காரணமுன்னு சொன்னா உன்னால் நம்ப முடியுமா” சட்டென்று பதில் வந்தது பரசுவிடம் இருந்து.

     ”எதுவா இருந்தாலும் கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு” என்றான் சாஸ்தா. “ஒரு எக்ஸாம்பிளுக்குச் சொல்றேன். குடுகுடுப்பைக்காரனோ இல்லை சாமி ஆடுறவங்களோ ஒரு பொண்ணைக் காட்டி இந்தப் பொண்ணுக்கு கல்யாண யோகம் வந்திடுச்சுன்னு சொல்றாங்கன்னு வைச்சிக்க.

     அதைக் கேட்டுப் அந்த பொண்ணைப் பெத்தவங்க சந்தோஷப்படுவாங்க. பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க. கல்யாணமும் நல்லபடியா நடக்கும். இப்பச் சொல்லு அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நடந்ததுக்கு காரணம் அவங்க சொன்ன வார்த்தையா? இல்லை பெத்தவங்களோட முயற்சியா?” பரசு கேட்க, சற்றே குழம்பிப் போனான் சாஸ்தா.

     பின்பு சந்தேகம் வந்தவனாய், ”சில பேரோட இறப்பைக் கூட இந்த மாதிரி இருக்கிறவங்க சரியா சொல்லுறாங்களே அது எப்படி” என்றான்.

     “அதுக்கும் நம்ம மனசு தான் டா காரணம். மனுச மனசை விட மிகப்பெரிய மருந்து எதுவுமே இல்லை. இந்தக் குடும்பத்தில் ஒரு பலி விழப் போகுதுன்னு ஒருத்தர் சொல்றாருன்னு வைச்சிக்க, அது அந்த குடும்பம் மொத்தத்தையும் மனசளவில் பாதிக்கும்.

     பெரியவங்க தனக்கு முன்னாடியே தன் வீட்டுப் பிள்ளைங்களுக்கு எதுவும் ஆகிடுமோன்னு அதிகமான பயத்தில் இருப்பாங்க. அந்த பயம் அவங்களோட இதய ஓட்டத்தை நிறுத்தும்.

     இல்லையா, எந்த நேரத்தில் யாருக்கு என்ன ஆகுமோன்னு பயத்தில் ரோட்டை கவனிக்காம போய் ஆக்சிடென்ட்டில் சாவாங்க. இதுக்கெல்லாம் காரணம் அவங்க மனசு தானே தவிர வேற எதுவுமே இல்லை.

     நாம எதை மனசாற நம்புறோமோ அதுதான் நடக்கும். ஒரு பொண்ணைக் காட்டி அவ சீக்கிரம் கருதரிச்சிடுவான்னு சொல்றாங்கன்னு வைச்சிக்க. அதை அந்தப் பொண்ணு முழுசா நம்புவா.

     அந்த நம்பிக்கை அவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்தச் சந்தோஷம் அவள் உடலுக்குத் தெம்பைக் கொடுக்கும். மனசை நாம சரியா வைச்சுக்கிட்டாப் போதும் உடம்பில் நடக்க வேண்டியது தன்னால் நடந்து பிரச்சனைகள் எல்லாம் தன்னால் சரியாப் போயிடும். அந்த வகையில் அதுநாள் வரை அந்தப் பொண்ணோட உடம்பில் இருந்த பிரச்சனையும் சரியாகும். அதனால அவ தாயாவா.

     இப்ப புரியுதா, எல்லாத்துக்கும் காரணம் நம்ம மனசு தான், மனசு மட்டும் தான். ஆக்கமா இருந்தாலும் அழிவா இருந்தாலும் அது நமக்குள்ள மட்டும் தான் இருக்கு” சொல்லி முடித்தான் பரசு.
 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1