Magic Stone 3


மந்திரக்கல் 3

     “உன்னை மாதிரியே எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சுட்டா, தெருவுக்குத் தெரு இருக்கும் இந்த தொழில் செய்யும் எல்லோரும் எப்படி டா பொழைப்பை ஓட்டுவாங்க“ சாஸ்தா கேட்க, தோள்களைக் குலுக்கினான் பரசு.

     “அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கு. அது சுத்தப் பொய்யுன்னு இன்னமும் என்னால் நம்ப முடியல“ யோசனையோடு சொன்னான் சாஸ்தா.

     “கலையில் பிழை இல்லை அதைக் கத்துக்கிறவங்க தான் பிழையா இருக்காங்க“ என்க, “என்னைக்காவது முதல்முறையே புரியுற மாதிரி பேசுறியா நீ. உன்னைக் கட்டிக்கிட்டு எவ என்ன பாடுபடப்போறாளோ தெரியல“ சலித்தான் சாஸ்தா.

     “சரி, சரி புலம்பாத, புரியுற மாதிரி சொல்றேன். எதிர்காலத்தைக் கணிக்கிறது ஒரு கலை. அது எல்லோருக்கும் எல்லாம் சாத்தியப்படாது. அதைக் கத்துக்கிறதுக்கு, அதை விட முக்கியம் அதைப் பயன்படுத்துறதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்கு. அதை எல்லாம் இந்தக் கால மனுஷங்களால் புரிஞ்சுக்கவோ, செயல்படுத்தவோ முடியாது.

     இப்ப இருக்கும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்க, ஜோசியம் பார்க்கிறவங்க எல்லாமே பொய் வேஷம் தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. கஷ்டத்தில் இருக்கிற மனுஷங்களுக்கு ஆதரவா நாலு வார்த்தை சொல்லி, அவங்ககிட்ட இருந்து பணம் வாங்கி அதில் பிழைப்பை நடத்திக்கிறாங்க.

     எல்லாத்திலும் விதிவிலக்கு உண்டுங்கிற மாதிரி இதிலும் உண்டு. கடவுள் அனுக்கிரகம் இருக்கிற ஒரு சிலருக்கு மட்டும் எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது தெரியும். ஆனா அவங்களால நடக்கிறதைத் தடுக்கவும் முடியாது. அதை யார்கிட்டவும் சொல்லவும் முடியாது.

     எல்லாத்தையும் விட முக்கியம் அப்படியானவங்க தங்களோட திறமையை இப்படி பணம் காய்க்கும் மரமாப் பார்க்க மாட்டாங்க" இதைச் சொல்லும் பொது பரசுவின் மனதில் ஒருவனின் முகம் மின்னி மறைந்தது.

     சாஸ்தா இன்னமும் தெளியாமல் இருப்பதைக் கண்டு, “முதலில் ஜாதகமுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு" பிள்ளையார் சுழி போட்டு பால பாடத்தில் இருந்து ஆரம்பிக்க, “ஒன்பது கட்டம் போட்டு, அதில் ஒன்பது கிரகத்தை நிறுத்தி ஏதோ பண்ணுவாங்களே அது தானே ஜாதகம்” என்றான்.

     “ஓரளவுக்கு சரியா தான் சொல்ற. இப்ப நான் சொல்லப் போறதைக் கேட்டா உனக்கு இன்னும் கொஞ்சம் விவரமா புரியும்.

     ஜோசியம் என்பது மாயமோ, மந்திரமோ கிடையாது. ஒரு அரிதான கணிதக்கணக்கு அவ்வளவு தான். நாம பிறந்த நேரத்தில் எந்தெந்த கிரகம் எந்தெந்த இடத்தில் இருந்துச்சு என்பதை வைச்சு வரையப்படுற கட்டம் தான் ஜாதகக் கட்டம். அந்தக் கட்டங்களில் இருக்கிற ஒன்பது கிரகங்களோட அமைப்பு மாறிக்கிட்டே இருக்கும்.

     அந்தக் கட்டங்களை வைச்சு மனுசங்க கண்டுபுடிச்ச கால்குலேட்டர், கம்யூட்டர் எல்லாத்தையும் தாண்டிய மனக்கணக்கு போட்டா ஒருத்தனோட ஆயுள், செல்வாக்கு, படிப்பு, செல்வம் மரணம் ஏன் முற்பிறவி பத்தி கூட துல்லியமா தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்றாங்க. அந்த மனக்கணக்கை எல்லோராலும் போட முடியாது. அது ரொம்பவே கஷ்டம்" என்று விளக்கினான் பரசு.

     “நீ சொல்றதை வைச்சுப் பார்த்தா சித்தர்கள், முனிவர்கள், மாதிரியான பெரிய ஆட்களுக்குத் தான் ஜாதகத்தோட சூட்சுமம் புரியும் போலவே. அப்புறம் எப்படி இந்த காலத்திலும் சிலபேர் மட்டும் துல்லியமாக பலன் சொல்றாங்க" என்க,

     “அதைத் தான் அடுத்துச் சொல்ல வந்தேன். அந்தக் காலத்து மனிதர்களில் சிலரைத் தவிர்த்துட்டு பார்த்தா, மத்தவங்க எல்லோரும் தனக்குத் தன்னுடைய குடும்பத்துக்குன்னு மட்டும் சிறுமையா யோசிக்க மாட்டாங்க. இதை நீ ஒத்துக்கிறியா?” பரசு கேட்க, "கண்டிப்பா” என்று தலையாட்டினான் சாஸ்தா.

     “அவங்க அப்படி நினைச்சதால் தான் அவங்களுக்கு தெரிஞ்ச எல்லாக் கலைகளையும், அதைக் கத்துக்கக்கூடிய வழிமுறைகளையும், அதன் பலன்களையும் ஓலைச்சுவடிகளில் எழுதிவைக்க ஆரம்பிச்சாங்க. அந்த மாதிரி காலம் கடந்து வந்து கொண்டிருந்த கலைகளில் ஒன்று தான் ஜாதக சூட்சுமமும்“ என்க, நண்பனின் சொற்பொழிவை ஆர்வமாகக் கேட்டான் சாஸ்தா.

     “ஜோதிடக் கலை எல்லோரையும் சென்று அடையணும். சாதாரண மனிதர்கள் கூட இதைப் புரிஞ்சிக்கணும். உலகத்துக்கு வர அழிவை முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு அதைத் தடுக்கணுமுன்னு நினைச்ச பல சித்தர்கள் கோள்களோட இயக்கத்தை மையமா வைச்சு ஜோதிடவியலை விளக்கமா ஓலைச்சுவடிகளில் எழுத ஆரம்பிச்சாங்க.

     அந்த ஓலைச்சுவடிகள் காலம் கடந்து அடுத்தடுத்த தலைமுறையினரின் கைக்கு வந்து சேர்ந்தது. தலைமுறைகள் முன்னேற முன்னேற மனிதன் இயற்கையை விட்டு தள்ளிக்கொண்டே சென்றதாலோ என்னவோ அவனால் சித்தர்களின் விளக்கங்களைப் புரிஞ்சுக்க முடியல. ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த விளக்கங்கள் புரிந்தது.

     அதனால அந்தக் காலத்து ஞானிகள் பலர் ஒன்னா இணைந்து ஜோதிடவியலை இன்னும் விளக்கமாக எழுத முடிவு பண்ணாங்க. அதில் நமக்கெல்லாம் நல்லாத் தெரிஞ்ச ஒரு புத்திசாலியும் இருந்தாரு” இதுவரை நண்பன் சொல்லிக்கொண்டிருந்த அனைத்தையும் கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டு இருந்த சாஸ்தா “யாருடா அது” என்றான் ஆர்வ மிகுதியில்.

     “உனக்கு மகாபாரதத்தில் வர சகாதேவன் தெரியுமா?” பரசு கேட்க, “யார் பஞ்ச பாண்டவர்களில் கடைசியா இருக்கிறவன் தானே” உடன் பதில் வந்தது சாஸ்தாவிடம் இருந்து. 

     “வாரே வா நீ எப்ப இருந்து டா இந்த மாதிரி விஷயங்களை தெரிஞ்சுக்க ஆரம்பிச்ச நாட் பேட்” என்றான் பரசு

     “நான் எங்க தெரிஞ்சுக்கிட்டேன். சிவகார்த்திகேயன் சொன்ன மாதிரி விஜய் டிவியில் சீடி தேயத் தேய திரும்பத் திரும்ப இந்த நாடகத்தோட ப்ரோமோ போட்டுக்கிட்டே இருக்காங்களே. அதில் பார்த்தது தான் தெரிஞ்சிக்கிட்டேன். ஆமா அவனுக்கும் ஜோசியத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றான் சாஸ்தா.

     நண்பன் சொன்ன விஷயத்தில் சிரித்துக்கொண்டிருந்தவன், அவன் ஒருமை விழிப்பைக் கண்டு கோபம் கொண்டவனாய், “டேய் அவன் இவன்னு சொல்லாத. அவரு ரொம்பப் பெரிய ஆளு. சித்தர்கள் எழுதின ஜோதிடவியலை படிச்சுப் புரிஞ்சுக்கிட்டு ரொம்ப பெரிய வித்தகனா இருந்தவரு. அவரால ஒரே நேரத்துல இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாத்தையும் கணிக்க முடியும். அப்படி ஒரு சிறந்த மகான்.

     குருஷேத்திரப் போருக்கு களபலி கொடுக்க கௌரவ கூட்டமே இவர்கிட்ட வந்து தான் நேரம் குறிச்சிட்டு போனதா சொல்லப்படுது. மழை, புயல், மற்ற இயற்கைச் சீற்றங்கள் எல்லாத்தையும் இவரால ஆணித்தரமா சொல்ல முடியும்.

     இதுக்காகவே இவருக்கு நிறைய சீடர்கள் உண்டு. தான் கற்றறிந்த ஜோதிடவியல் எல்லாருக்கும் பயன்படணுமுன்னு அவர் இன்னும் எளிமையா அதை மொழிபெயர்த்துக்கிட்டு இருந்தாரு" என்க, “அவர் அவ்வளவு பெரிய ஆளா. ஆனா மகாபாரதத்தில் முதல் மூன்று பேரைத் தானே மிகைப்படுத்திக் கட்டுவாங்க" மிகப்பெரிய சந்தேகத்தைக் கேட்டான் சாஸ்தா.

     “கண்ணால் பார்ப்பதை எல்லாம் அப்படியே நம்பினா இப்படித்தான். அதெல்லாம் டிஆர்பி ஏத்துக்கிறதுக்காக. நம்ம மக்களோட புத்தி விரிய விரிய மனசு ரொம்ப சுருங்கிடுச்சு.

     நல்லது கெட்டது கலந்தது தான் மனுஷன்னு புரிஞ்சுக்காம, தனக்குப் பிடிச்சவன் தப்பே பண்ணாதவனா இருக்கணும், எல்லா இடத்திலும் அவனே முதன்மையானவனா இருக்கணுமுன்னு நினைக்கிறாங்க.

     இந்தச் சேனல் காரங்களும் மக்களோட மனசைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்தமாதிரி எடுத்தா தான், எதுவும் கொண்டாடப்படுமுன்னு தெரிஞ்சுக்கிட்டு என்ன வேண்ணா எடுக்கலாமுன்னு எடுத்து வைக்கிறாங்க“ என்க, நண்பனின் ஆதங்கம் உணர்ந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்தான் சாஸ்தா.  

     அதைக் குடித்து முடித்துவிட்டு, “நிஜத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அந்த திறமைகளில் அவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. அந்த வகையில் சகாதேவன் சிறந்த ஞானி. அவர் எப்படிப்பட்டவருன்னு புரிய வைக்க ஒரு சின்னக் கதை சொல்றேன் கேளு.

     ஒருநாள் தன்னோட மாளிகைக்கு வந்த கிருஷ்ணரை அன்போடு உபசரிச்ச சகாதேவன், நாட்டு நடப்பைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கும் போது, 'என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாதுன்னு' கிருஷ்ணர் சொல்லி இருக்காரு.

     வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு கிருஷ்ணா. என்னைத் தவிர யாராலும் காப்பாத்த முடியாதபடி என்னால் உன்னைக் கட்டிப்போட முடியுமுன்னு சொன்ன சகாதேவன், கிருஷ்ணரின் தூண்டுதலால அதை செயல்படுத்தியும் காண்பிச்சாரு" என்க, சாஸ்தா அதிர்வில் வாயையே பிளந்து விட்டான்.

     “என்னடா சொல்ற துரியோதனனால சிறை பிடிக்க முடியாத கிருஷ்ணரை சகாதேவன் சிறைபிடிச்சாரா. இதெல்லாம் புதுசா இருக்கே” ஆச்சரியம் தாங்கவில்லை அவனுக்கு.

     "கிருஷ்ண நாமத்தை இடைவிடாது சொல்லி, கிருஷ்ணரை தன்னோட மனசுக்குள்ள அன்புங்கிற சங்கிலி போட்டு கட்டி வைச்சார் சகாதேவன். சகாதேவனோட மனசுக்குள்ள கட்டுப்பட்ட கிருஷ்ணனால் நிஜ உலகத்தில் அசையக் கூட முடியல.

     கடைசியா சகாதேவன் கிட்ட தன்னோட தோல்வியை ஒத்துக்கிட்டு தன்னை விடுவிக்கும் படி கேட்டுக்கிட்டதால சகாதேவனும் விடுவிச்சிருக்காரு" என்க, “வாவ் நிஜமாவே சூப்பர் தான் டா சகாதேவன்” என்றான் சாஸ்தா.

     "சகாதேவனோட அன்பில் மகிழ்ந்து ஏதாவது வரம் கேளுன்னு கிருஷ்ணர் சொன்னப்ப, 'குந்தியோட புதல்வர்களான பஞ்ச பாண்டவர்கள் ஐவரையும் குருஷேத்திரப் போரில் நீ காப்பாத்தணும்' என்று கேட்டு இருக்கார் சகாதேவன்.

     கிருஷ்ணர் சிரிச்சுக்கிட்டே, 'உனக்கு ஒரு வாய்ப்பு தரேன் வரத்தைகளை நல்லா யோசிச்சு சரியாக் கேளுன்னு' சொல்லி இருக்கார். கிருஷ்ணரோட உந்துதல் எதுக்காகன்னு சரியாப் புரியாத சகாதேவன், கிருஷ்ணன் தன்னைக் குழப்புவதா நினைச்சு, 'தருமன், பீமன், அர்ஜீனன், நகுலன், சகாதேவன் என்ற குந்தியின் மக்கள் ஐவரை நீ காப்பாத்தணும் என்று கேட்டுட்டார்.

     கர்ணனைக் காப்பாத்த இருந்த கடைசி வழி அப்படித்தான் அடைக்கப்பட்டது. ஒருவேளை குந்தியின் புதல்வர்கள் எல்லோரையும் நீ காப்பாத்தணுமுன்னு சகாதேவன் கிருஷ்ணர்கிட்ட கேட்டு இருந்தா, விளைவு வேற மாதிரி இருந்திருக்கும் ஆனா விதி யாரை விட்டது" வருத்தத்தோடு சொன்னான் பரசு.

     “ஆமான்டா கர்ணன் பாவம்" சாஸ்தாவும் சேர்ந்து கொள்ள, "கர்ணன் இறந்தப்ப தான் பாண்டவர்களுக்கு உண்மை தெரிய வந்தது. கர்ணன் எல்லோருக்கும் மூத்தவன்னு தெரிஞ்சிருந்தா சந்தோஷமா அவனுக்கே இந்த நாட்டை கொடுத்து இருப்பேன்னு துரியோதனன் சொல்லி அழுததைக் கேட்ட தருமனுக்கு தன்னோட அம்மா மேல கோவம்.

     அவர் மட்டும் இந்த இரகசியத்தை பொக்கிஷம் மாதிரி மறைச்சு வைக்காம இருந்திருந்தா, இவ்வளவு பெரிய போர் வந்து இருக்காது, இத்தனை அழிவு வந்து இருக்காதேன்னு ஆத்திரம். அதனால இனி உலகம் இருக்கிற வரைக்கும் எந்த பெண்ணாலும் எந்த விதமான இரகசியங்களையும் தங்களுக்குள்ளேயே மறைச்சு வைச்சிருக்க முடியாதுன்னு சாபம் கொடுத்திட்டார்" தனக்குத் தெரிந்ததை, தான் படித்ததைச் சொன்னான் பரசு.

     “ஓகோ அப்போ பொண்ணுங்க வாயில் இரகசியம் நிற்காததுக்கு காரணம் இதுதானா” சிரித்தான் சாஸ்தா. “சத்தமா பேசாத யார் காதிலாவது விழுந்தா நமக்கு சங்கு கன்பார்ம்“ சிரித்த பரசு மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

     போர் முடிஞ்சு தர்மன் ஆட்சி ஆரம்பித்த நேரம், "சகாதேவனுக்கு கிருஷ்ணர் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது ஞாபகம் வந்தது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமுன்னு எல்லாம் தெரிஞ்ச எனக்கு, எங்களுக்கு இன்னொரு அண்ணன் இருக்கான் அவன் தான் நூற்றிஐந்து பேருக்கும் மூத்தவன்னு தெரியாம போயிடுச்சேன்னு கோவம்.

     தான் கத்துக்கிட்ட ஜோதிடவியல் எல்லாம் பொய்யுன்னு கோபப்பட்டு, அத்தனை சுவடிகளையும் தீயில் போட்டு எரிச்சாரு. அவரோட சீடர்கள் நெருப்பை அணைச்சு சுவடிகளை மீட்டாங்க. ஆனா அதில் பாதி எரிஞ்சிடுச்சு. எவ்வளவோ கேட்டும் சகாதேவன் அந்தச் சுவடிகளை முடித்துக்கொடுக்க முடியாதுன்னு மறுத்துட்டார்.

     அதனால் வேற வழியில்லாம அவரோட சீடர்கள் தங்களோட யூகத்தால அதை நிறைவு செஞ்சாங்க. இப்படித்தான் முழு உண்மையா இருந்த ஜோதிடம் ஆரூடம் பாதி, யூகம் மீதின்னு மாறிச்சு. சகாதேவனால் எரிக்கப்பட்டு அவரோட சீடர்களால் முடிக்கப்பட்ட ஜோதிடவியலைத் தான் காலங்காலமா பின்பற்றுறாங்க. அதனால இப்ப உலகத்துல எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஜாதகத்தை வைச்சு பாதி உண்மையைத் தான் சொல்ல முடியும் மிச்ச பாதி கற்பனை தான் இப்ப புரியுதா ஜோசியம் ஜாதகம் பத்தி” என்றான் பரசு.

     “தெரிஞ்சிக்கிட்டேன் டா ரொம்ப நல்லாவே தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம், உனக்கு மட்டும் எப்படி டா இதெல்லாம் தெரியுது” சாஸ்தா வியப்புடன் கேட்க, “போடா போடா போய் வேலையைப் பார்” என்றுவிட்டு கெத்தாக நடந்துசென்ற பரசு, என்ன நினைத்தானோ ஒரு இடத்தில் நின்று பள்ளத்திற்குள் இருக்கும் கல்கோவிலைத் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னே நடந்தான்.

     அன்றைய நாளின் மாலைப் பொழுதிலேயே சாஸ்தா சொன்னது போல் நேபாளத்தின் அறநிலையத்துறை ஆய்வாளர்கள் வந்து சோதித்துப் பார்த்து, அந்தக் கட்டிடத்தில் ஒரு பெண் தெய்வத்தின் சிலையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும், அந்தச் சிலையும் வெறும் கல்லினால் ஆனது தான், அந்த தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை அதனால் தாராளமாக அந்த கட்டிடத்தைத் தகர்த்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

     சாஸ்தாவிற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பிரச்சனை முடிவடையும் என அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பதால் சந்தோஷம் இரட்டிப்பானது.

     இரவு நேரம் வந்துவிட்டதால் நாளை காலையில் கோவிலை இடித்துவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்ற சந்தோஷத்தில் பரசுவையும் இழுத்துக்கொண்டு அறைக்கு உறங்குவதற்காகச் சென்றான் சாஸ்தா.

     நன்றாக உறங்கிக்கொண்டு இருந்த பரசுவின் கனவில் ஏதோ ஒரு மண் பாதை படுவேகமாக நகர்ந்து சென்று ஒரு கட்டத்தில் பள்ளத்திற்குள் இருக்கும் இடிபாடு நிறைந்த கல் கோவில் தெரிய தூக்கத்திலே திரும்பிப் படுத்தான். அப்படியும் கனவு தொடர்ந்தது.

     கோவிலின் வாசலில் யாரோ நிற்பது போல் தோன்ற உற்றுப் பார்த்தால் அது சாட்சாத் அவனே. ஏதோ ஒரு அசௌகர்யம் உடல் முழுவதும் படர, இந்தப்பக்கம், அந்தப்பக்கம் எனத் திரும்பித் திரும்பி படுத்தாலும் கனவு கலைவேனா என்று அடம்பிடித்தது.

     ஒரு கட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பரசு அமைதியாகிவிட, கனவின் காட்சிகள் நகர ஆரம்பித்தது.  கோவில் வாசலில் நின்றிருந்த பரசு இடிந்து கிடந்த தூண்களைத் தூக்கி பாதை உண்டாக்க முயற்சிக்கும் போது, உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மின்னல் தாக்கியது போல் பரவச நிலையை உணர்ந்தான்.

     நிற்கும் இடத்திலேயே நின்று கொண்டிருக்க முடியாது என்று முன்னேறியவன் அதன்பிறகு பெரிதாக சிரமம் இல்லாமல் கோவிலைச் சுற்றிப் பார்த்தான். அதைக் கோவில் என்று அவனால் நம்பவே முடியவில்லை. நிறைய தூண்கள் இருந்ததே தவிர ஒன்றிலும் சின்னச் சிற்பத்தைக் கூட காணோம்.

     என்னடா இது என்கிற யோசனையோடு கர்ப்பக்கிரகத்திற்கு வந்தவன், அங்கு பார்த்த காட்சியை அவனாலே நம்பவே முடியவில்லை. கண்களைக் கசக்கிவிட்டு தெளிவாய்ப் பார்த்தாலும் அவன் கண் முன் நின்ற காட்சி அகல மறுத்தது.

     கர்ப்பக்கிரகத்தின் மூலவர் பீடத்தின் மேல் அழகான பெண்ணொருத்தி நின்றுகொண்டிருந்தாள். இளவரசியைப் போல் உடை, நகை அணிந்திருந்த அவளைப் போன்ற அவ்வளவு அழகான ஒரு பெண்ணை இதுவரை பார்த்ததே இல்லை என்னும் அளவிற்கு வியந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பரசு.

     பிரம்மன் வரைந்த எழில் ஓவியம் போன்ற அவள் உருவத்தில், ஒருவித தெய்வீகத்தை உணர்ந்தான் பரசு. பார்த்ததும் கையெடுத்துக்கும்பிடத் தோன்றியது. அவள் தன் கண்களில் பேரன்பு பெட்டகத்தை ஒளித்து வைத்திருப்பது போல் தோன்ற, தாயைத் தேடும் சேயாய் தன்னால் அவளை நோக்கி நடந்தான் பரசு.

     இதுவரை புன்னகையுடன் சிலையாய் இருந்தவள் முத்துகளின் வரிசையைப் போன்ற தன் பல்வரிசையைக் காட்டி பேசத் துவங்கினாள்.

     "ஆலயத்தின் பவித்திரம் கர்ப்பக்கிரகத்தில் உள்ள விக்கிரகத்திடம் உள்ளது. ஆலயம் பவித்திரமானதாக இருக்கும் வரை அது சேதப்படுத்தப்படலாகாது” என்க, பரசு அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அந்த பெண் உருவம் காலில் ஆரம்பித்து தலை வரை சிறிது சிறிதாக கல்லாக மாற அதோடு கனவு கலைந்து எழுந்து அமர்ந்தான் பரசு.

     வியர்த்து வடிந்து கொண்டிருந்தது. தலைமுடியை அழுத்தமாகக் கோதிக்கொண்டான். இவ்வளவு நேரம் கண்டது கனவு என்றோ, அந்தப் பெண்ணும் அவள் சொன்ன வார்த்தைகளும் கற்பனை என்றோ பரசுவால் நம்ப முடியவில்லை.

     ஏனோ அந்த மாயப் புன்னகைக்காரிக்கும் தனக்கும் ஏதோ நெருங்கிய சம்பந்தம் உள்ளது போலவும், அவள் தன்னிடம் எதையோ உணர்த்த தான் கனவு மூலமாக வந்திருக்கிறாள் என்பதாகவும் நினைத்தான். அந்த நேரம் அவள் சொன்ன வார்த்தைகள் அச்சுப் பிசகாமல் நினைவு வர, நிச்சயமா அந்த இரண்டு வரியில் ஏதோ இருக்கு. கண்டுபிடிக்கிறேன் என யோசிக்க ஆரம்பித்தான் பரசு.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1