magic stone 4

மந்திரக்கல் 4

     விடுகதையா, கவிதையா என்ன சொன்னாள், எதற்காகச் சொன்னாள் எதுவும் புரியாமல் அடிக்கடி தலையைக் கோதிக்கொடுத்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு அங்கும் இங்குமாக அறைக்குள் நடந்து கொண்டிருந்தான் பரசு.

     திருவாரூர் தேர் ஊர்வலம் போல் இவன் இப்படி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருப்பது தெரியாமல் அதே அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் சாஸ்தா. மனதில் எந்தவிதக் கள்ளமும் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் இத்தனை ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகும் என்பது நிதர்சனம்.

     “மவனே இங்க ஒருத்தன் தூங்காம தவிச்சுக்கிட்டு இருக்கேன். நீ ராஜா மாதிரி பஞ்சனையில் சுகமாப் படுத்துத் தூங்குறியா? தப்பாச்சே. என்னோட ஸ்சுவீட் சாஸ்தா, நான் தூங்க முடியாமத் தவிக்கும் போது, நீ தூங்கி பெரிய தப்புப் பண்ணிட்ட. அந்தத் தப்புக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா இந்தா வரேன்” மனதிற்குள் நினைத்து சிரித்த பரசு, அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துத் திறந்தவன், தண்ணீரை மெதுமெதுவாக சாஸ்தாவின் முகத்தில் ஊற்ற ஆரம்பித்தான்.

     பூஞ்சாரலில் நனைவது போல் தோன்றி இருக்கும் போல. உறக்கத்தில் பற்கள் அனைத்தையும் காட்டிப் புன்னகைத்தான் சாஸ்தா. அது இன்னும் கடுப்பைக் கிளப்ப தண்ணீரின் அளவை அதிகரித்தான் பரசு.

     “ஜயோ, அருவி உடைஞ்சு என் மேல விழுது காப்பாத்துங்க. நயாகரா அருவி உடைஞ்சு என் மேல விழுது” கத்தியவாறே அடித்துப் பிடித்து எழுந்தான் சாஸ்தா.

     “என்னது நயாகரா அருவி உடைஞ்சு உன் மேல விழுதா” எதிர்நின்ற பரசு சிரிக்க ஆரம்பிக்க, அப்போதே நடந்தது அனைத்தும் கனவு என்று உணர்ந்த சாஸ்தா முகத்தில் இருந்த தண்ணீரை கைகளால் துடைத்த வண்ணம் எழுந்து அமர்ந்து, நண்பனைக் கடுமையாக முறைத்து வைத்தான்.

     கனலைக் கக்கும் நண்பனின் கண்களைக் கண்டும் காணாமல், “என்ன சொல்லு மச்சான் உனக்கு கியூரியாசிட்டி ரொம்ப அதிகம். ஒரு அருவி உடைஞ்சு விழுகிற மாதிரி கற்பனை பண்ணி இருக்கிய பார்த்தியா? உண்மையில் நீ கிரேட்” என்றான். அந்த வார்த்தைகளில் ஒருதுளி கூட நிஜமான பாராட்டு இல்லை அத்தனையும் கேலி மட்டுமே.

     அதைப் புரிந்துகொள்ளாமல், “கனவுக்கு ஏது டா வரைமுறை. சாத்தியமே இல்லாத எல்லாம் நடக்கிறது கனவில் மட்டும் தான்” சோம்பேறித்தனமாக சொன்னவனுக்கு திடீரென்று நடந்தது நினைவு வர, “நாயே நாயே, இப்ப என்ன இழவு விழுந்துச்சுன்னு என்னை எழுப்பின எவ்வளவு அழகான கனவு தெரியுமா? எத்தனை அழகான பொண்ணு என் கையைப் பிடிச்சுக்கிட்டு அருவிக்கரையை நோக்கி கூட்டிக்கிட்டு போனா. ச்சே எல்லாம் உன்னால கெட்டுப் போச்சு” என நண்பனின் முதுகில் பல அடி வைத்தான் சாஸ்தா.

     “பொண்ணா“ என ஒரு நொடி நின்ற பரசு, “நல்லா இளவரசி மாதிரி ட்ரஸ் பண்ணி நிறைய நகை போட்டு இருந்திருப்பாளே” என்க, “ஆமா மச்சான்” ஆர்வமாய் சொன்னான் சாஸ்தா.

     “கறந்து வைச்ச பால் தோத்துப் போகுற அளவுக்கு வெள்ளையா இருந்திருப்பாளே"

     “ஆமா"

     “காத்தடிச்சா ஒடிஞ்சு போகுற மாதிரி ஒல்லியா இருந்திருப்பாளே"

     “ஆமா"

     “உடம்புக்கும் பலத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி அவளோட பிடியில் அவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமே"

     “ஆமாடா ஆமா. ஆனா இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்” சந்தேகமாய் நண்பனைப் பார்த்தான்.

     “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என் கனவில் வந்து என்னைத் தூங்கவிடாம பண்ணா. அடுத்து உன்னை டிஸ்டர்ப் பண்ண உன் கனவில் வந்துட்டா போல” சொன்ன பரசுவின் முகம் யோசனையில் சுருங்கியது.

     “ஒரே பொண்ணு எதுக்காக நம்ம இரண்டு பேர் கனவிலும் வரணும். என் கனவில் காலையில் நம்ம இடத்தில் கிடைச்ச  கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் சிலையா இருந்தா, அவளே உன்னோட கனவில் வந்து, கை பிடிச்சு அருவிக்கரை கூட்டிட்டுப் போய் இருக்கா. இதுக்கு என்ன அர்த்தம்" தீவிரமாக யோசித்தான்.

     “ஏன் ஒரே பொண்ணுன்னு நினைக்கணும். தனித்தனி ஆளா இருந்தா. பேசாம இப்படிப் பண்ணுவோமா?“ சாஸ்தா கேட்கவும், குழப்பத்திற்கு விடை சொல்லப்போகிறான் போல என்கிற ஆர்வத்துடன், “எப்படி“ என சீரியஸாகக் கேட்டான் பரசு.

     “உன் கனவில் வந்தவ உன் ஆளு, என் கனவில் வந்தவ என் ஆளுன்னு தொகுதி பிரிச்சுக்கலாம். அப்புறம் நமக்குள்ள சண்டை வராது பாரு. உலகத்தையே ஒன்னா எதிர்க்கும் அளவு நெருக்கமா இருக்கும் நண்பர்களைக் கூட பொண்ணு விஷயம் பிரிச்சிடுமாம். நாம அப்படிப் பிரியக்கூடாது இல்ல” சொல்லிவிட்டுச் சிரித்த சாஸ்தாவின் முகத்தில் துப்புவதற்காக எச்சியை காரினான் பரசு.

     “வேண்டாம் டா மச்சான். மீ பாவம் ப்ளீஸ்” எனப் பதறித் துடித்த சாஸ்தாவைப் பார்த்ததும் அவ்வளவு நேரம் இருந்த பதற்றம் போன இடம் தெரியவில்லை பரசுவிற்கு. சத்தமிட்டு சிரிக்கத் துவங்கினான்.

     அது என்னவோ எத்தனை துன்பம், குழப்பம், பயம் இருந்தாலும் சாஸ்தா முகத்தைப் பார்த்து, அவனுடன் சிறிது நேரம் பேசினாலே அவையாவும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும் பரசுவிற்கு. அந்த மாயத்தை சாஸ்தா எப்படிச் செய்கிறான் என்பது அவனுக்கே தெரியாது என்பது தான் விந்தையிலும் விந்தை.

     "என்ன மச்சான் நான் சொன்னது எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டியா. புது இடத்தில் தங்கும் போது கனவு வருவது எல்லாம் சகஜம் தான். உனக்காச்சும் இன்னைக்குத் தான் கனவு வந்துச்சு. எனக்கெல்லாம் இந்த இடத்துக்கு வந்ததில் இருந்து கனவோ கனவு தான்.

     ஒரு கனவில் என்னை விட நாலு மடங்கு உடம்பு பருத்துப்போன இரண்டு பேர் என்னைத் தூக்கிட்டுப் போனாங்க. இன்னொரு கனவில் ஒரு குரங்கு என்னைக் கழுவி ஊத்துச்சு. இன்னும் சில கனவெல்லாம் வந்துச்சு.

     ஆனா இப்பக் கண்ட கனவு மத்த எல்லாத்தையும் விட கொஞ்சம் வித்தியாசம் தான். ஏன்னா கனவில் வந்த பொண்ணை எனக்கு ஆசையாப் பார்க்கத் தோணல. மரியாதை கொடுக்கத் தான் தோணுச்சு. யசோதாவைப் பார்க்கும் போது வர உணர்வு தான் வந்துச்சு“ என்று பேசிக்கொண்டே வந்தவன், வாயை மூடுவியா மாட்டியா என்னும் தோரணணையில் முறைத்த நண்பனைப் பார்த்து வாயை மூடிக்கொண்டான்.

     பரசுவின் யோசனை முழுக்க, “காரண காரியம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காதே. சாஸ்தா எதற்காக இந்த இடத்தில் கம்பெனி  துவங்க வேண்டும். எந்நாளும் இல்லாத திருநாளாக எங்கேயும் ஊர்சுற்றப் பிடிக்காமல் இவன் நிழலைப் போல் நானும் எதற்காக இங்கு வந்து சேர்ந்தேன். எதற்காக கோவில் இருக்கும் இடத்தை வீடு கட்டுவதற்காக சாஸ்தா வாங்க வேண்டும். கோவில் ஏன் வெளிப்பட வேண்டும். அந்தக் கனவும் அதில் அந்த வசியக்காரியும் எதற்காக வரவேண்டும்“ என்பதிலேயே இருந்தது.

     “ரொம்ப யோசிக்காத பரசு, எப்படிப் பார்த்தாலும் இதெல்லாம் வெறும் கனவு மட்டும் தான்” சொன்னவன் சாஸ்தா.

     “உனக்கு வந்தது கனவுன்னு உன்னால ஏத்துக்க முடியுது. ஆனா என்னால அப்படி ஏத்துக்க முடியல டா. அந்தப் பொண்ணு, அவளைப் பார்த்ததும் ஏதோ உடம்பு புல்லா கரெண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. ஆயிரம் மின்னல் உடம்பில் ஒரே நேரத்தில் பட்டா எப்படி இருக்கும் அப்படி இருந்தது. உடம்பு முழுக்க ஒரு குறுகுறுப்பு.

     அவளோட அந்த இரண்டு கண்ணு, அதை வைச்சு அவ என்னைப் பார்த்த அந்தப் பார்வை. சத்தியமா சொல்றேன் மச்சான், எனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கு. அவளோட வாய் சொன்ன வார்த்தைகள் கொஞ்சம் தான். ஆனால் அவளோட கண்கள் என்கிட்ட பேசினது ரொம்பவே அதிகம்.

     அவ என்கிட்ட ஏதோ சொன்னாடா, நான் ஏதோ செய்யணுமுன்னு அந்தப் பொண்ணு எதிர்பார்க்கிறா. ஆனா அது என்னன்னு தான் எனக்குப் புரியல” பரசுவின் வார்த்தையில் அத்தனை தீவிரம் இருந்தது.

     “டேய் பார்த்திபன் கனவு படத்தில் மணிவண்ணன் சார் ஒரு டயலாக் சொல்வாரே ஞாபகம் இருக்கா. நாம குழந்தையா இருக்கும் போது எல்லாப் பொண்ணுங்களும் அம்மா மாதிரித் தெரிவாங்க. வாலிப வயதில் எல்லாப் பெண்களும் நம்மளோட ஜோடி மாதிரித் தெரிவாங்க, அதுவே வயசான காலத்தில் எல்லாப் பெண்களும் நம்மளோட பொண்ணு மாதிரி தெரிவாங்களாம்.

     உன்னோடதோ வாலிப வயசு. அதனால நீ பார்க்கிறவங்க மட்டும் இல்ல, கனவில் வரும் பெண்கள் கூட உனக்கு பொண்டாட்டி மாதிரி தான் தெரியும். அதனால் தான் சொல்றேன். காலாகாலத்தில் ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு” இரையின் கால்களை விடாமல் இழுத்துப்  பிடிக்கும் முதலையைப் போல், இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி பரசுவின் காலை கல்யாண பந்தத்தில் கட்டிப்போட நினைத்தான் சாஸ்தா.

     “விளையாடாத மச்சான், நான் இருக்கிற இலட்சணத்துக்கு எனக்குக் கல்யாணம் ஒன்னு தான் கேடு“ என்க, “என் நண்பன் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி, உனக்கு என்னடா குறை“ நண்பனின் நாடி பிடித்து செல்லம் கொஞ்சினான் சாஸ்தா.

     “ஏன்டா மாடு மாதிரி வளர்ந்து இருக்கேன். இப்படிப் பச்சைப் பிள்ளையைக் கொஞ்சுற மாதிரிக் கொஞ்சுற. மடியில் தூக்கி வைச்சுக்கிறது தானே. நான் கெட்டுப்போறது பாதி உன்னால் தான். இந்த அழகில் எனக்குக் கல்யாணம் பண்ண வேற நினைக்கிற“ என்றவன் குறுக்கே பேச வந்த நண்பனைக் கண்டுகொள்ளாமல் தன் போக்கில் பேசினான்.

     “எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் பொறுப்பு வராது. என்னை நம்பி வரவளை என்னால் எப்படிப் பார்த்துக்க முடியும் சொல்லு. அதையும் மீறி நான் ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா இப்ப நீ என்னைப் பார்த்துக்கிற மாதிரி காலத்துக்கும் அவ தான் என்னைப் பார்த்துக்கணும்.

     எதுக்குத் தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்கணும் சொல்லு. பெண் பாவம் பொல்லாதது. இருக்கிற வரை அப்படியே ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம்“ என்ற நண்பனைப் பார்த்து மனம் வருந்தினான் சாஸ்தா.

     அது பொறுக்க முடியாமல், “இந்தக் கதை இப்ப எதுக்கு. நேத்து நீ ஒர விஷயம் சொன்னியே ஞாபகம் இருக்கா. நாம இங்க வந்தது, இந்த இடத்தில் வீடு கட்டுறது எல்லாம் ஏதோ விதிக்கப்பட்டது மாதிரி இருக்குன்னு. எனக்கும் இப்ப அந்த உணர்வு வருதுடா” சொன்ன பரசுவின் முகத்தில் இருந்த தீவிரம் சாஸ்தாவையும் தொற்றிக்கொள்ள, “என்னடா சொன்னாங்க உன் கனவில் வந்த பொண்ணு” என்றான்.

     "ஆலயத்தின் பவித்ரம் கர்ப்பக்கிரகத்தில் உள்ள விக்கிரகத்திற்கு உள்ளது. ஆலயம் பவித்திரமானதாக இருக்கும் வரை அது சேதப்படுத்தப்படலாகாதுன்னு சொன்னா மச்சான்“ தீவிர சிந்தனையுடன் சொன்னான் பரசு.

     “இதுக்கு என்ன அர்த்தமா இருக்கும். ஒருவேளை அப்படி இருக்குமோ இல்லை ஒருவேளை இப்படி இருக்குமோ“ தீவிரமாக யோசித்த சாஸ்தா, “ஏன் மச்சான் விக்கிரகமுன்னா சிலை, பவித்திரமுன்னா தூய்மை. அப்ப முதல் வரிக்கு கோவிலோட தூய்மையே சிலை தான்னு அர்த்தம்.

     கோவில் பவித்திரமானதா இருக்கிற வரைக்கும் அதைச் சேதப்படுத்தக் கூடாதுன்னா, சிலை அந்த இடத்தில் இருக்கும் வரை கோவிலைச் சேதப்படுத்தக் கூடாதுன்னு அர்த்தமா இருக்குமோ“ என்க, புருவத்தை ஒற்றை விரலால் நீவினான் பரசு.

     “எனக்கென்னவோ அந்தக் கோவிலை இடிச்சு அந்த சிலையை அப்புறப்படுத்த நாம போட்ட திட்டம் அந்தத் தெய்வத்துக்குப் பிடிக்கலையோன்னு தோணுது“ சொன்ன சாஸ்தாவின் குரலில் பயம் சற்றே எட்டிப் பார்த்தது.

     சின்ன வயதில் தங்கை யசோதாவுக்கு அவள் அம்மா சாப்பாடு ஊட்டும் போது வாய்வழியாகச் சொன்ன ஒரு கதையை நினைவு கூர்ந்தான். வயல்வெளிகளின் நடுவில் அவற்றிற்குப் பாதுகாப்பாக கருப்பசாமி சிலை ஒன்று இருந்ததாம்.

     தலைமுறை தலைமுறையாக மேற்க்கூரை இல்லாமல் மழையில் நனைந்து வெயில் காய்கிறாரே என்று ஒருவர் அந்தத் தெய்வத்துக்கு மேற்கூரை கட்ட நினைக்கும் போது அவரின் கனவில் வந்து, நீ செய்ய நினைப்பது தப்பு. எனக்கு எதுவும் வேண்டாமுன்னு கருகருன்னு உயரமா இருக்கும் நபர் சொன்னாராம். அதைப் பெருசா எடுத்துக்காம மேற்க்கொண்டு வேலை செய்ய அந்தத் தெய்வம் உயிர் பலி வாங்கிட்டதா பேச்சு உண்டு என்பதாய் என்றோ ஒருநாள் கேட்ட கதை இப்போது நினைவு வந்து பயம் கொள்ள வைத்தது.

     சாஸ்தா இப்படி யோசித்தான் என்றால் பரசு வேறு மாதிரி யோசித்தான். “சிலை இருக்கிற வரைக்கும் கோவிலைச் சேதப்படுத்தக் கூடாது. அதுவே சிலை இல்லைன்னா கோவிலைச் சேதப்படுத்தலாமா?“ என்று யோசிக்க அதற்கு வலுச்சேர்ப்பது போல், அன்றைய இரவில் உறங்கப் போகும் சில நிமிடங்கள் முன்பு சைட் இன்ஞினியரிடம் பேசியதை நினைவு படுத்தினான்.

     “சார், கோவிலின் மேற்கூரை, பக்கவாட்டுத் தூண்கள் எல்லாம் சேதமடைந்து இருந்தாலும், மூலவர் சிலையில் சின்னச் சேதம் கூட இல்லை. அதனால் அதைத் தனியே எடுத்து வைச்சிருக்கோம். நாளைக்கு மத்த எல்லாத்தையும் வெளியே தூக்கிப் போட்டுட்டு நாம நம்ம வேலையை ஆரம்பிச்சிடலாம்”  என்றிருந்தான்.

     ஆகத் தான் நினைத்தது தான் சரி என்கிற முடிவுக்கு வந்த பரசு, “அந்தப் பொண்ணு சொன்னதோட அர்த்தம் மூலவர் சிலைக்கு அடியில் தோண்டிப் பார்க்கணும் என்பது. நான் இப்பவே போறேன்” என்றுவிட்டு சாஸ்தாவின் பதிலுக்குக் கூட காத்திராமல் கிளம்பிச் சென்றான்.

     “இவனையெல்லாம் வைச்சுக்கிட்டு” மனதோடு புலம்பினாலும், "இருடா நானும் வரேன், எங்கேயும் போய் ஒத்தையில் எந்தப் பிரச்சனையையும் இழுத்து வைச்க்காதே” என்றவண்ணம் நண்பனின் பின்னால் ஓடினான்.

     வாட்ச்மேன் அறைக்குச் சென்று பார்த்த பரசு, அவன் மூக்கு முட்ட குடித்துவிட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நெற்றியில் அடித்துக்கொண்டு, “இந்த சாஸ்தா நைட் வாட்ச்மேனையும் அவனை மாதிரியே சரியான கும்பகர்ணனா வளர்த்து வைச்சுருக்கான்” என்றவண்ணம் அவனைத் தாண்டி, கட்டிட வேலைப் பொருட்கள் வைக்கும் அறைக்குச் சென்றான் பரசு.

     “என்னது நான் இவனை வளர்த்து வைச்சிருக்கேனா. இவன் என்ன நான் பெத்த பையனா, இல்லை என்னைப் பெத்த எங்கப்பன் குப்பனா. மலமாடு மாதிரி இருக்கான், இவனை நான் வளர்த்திருந்தா இவனுக்கே பரசுவோட பாதி சொத்தை நான் இழந்திருக்கணுமே” புலம்பிய வண்ணம் தானும் நண்பனைப் பின்தொடர்ந்தான் சாஸ்தா.

     தலையில் மாட்டும் மின்விளக்கு ஒன்றை தன்னுடைய தலையில் மாட்டிக்கொண்ட பரசு அதே போல் இருந்த இன்னொன்றை சாஸ்தாவிடம் தூக்கிப் போட்டான்.

     "கடவுளே இதை எவன் போட்டு இருந்தானோ. அவனுக்கு என்ன வியாதியோ. எதுவும் என்னைப் பாதிக்காம நீ தான் பா பார்த்துக்கணும்“ வேண்டிக் கொண்டே அதைத் தலையில் மாட்டிக்கொண்டு லைட்டை ஆன் செய்தவன் ஆவென்று கத்தினான்.

     “டேய் லூசு, நீ பார்த்தது ஒன்னும் பேயோ பிசாசோ இல்லை. உன்னோட கண்ட்ராவி நிழல் தான், பேசாம வா” என்ன நடந்திருக்கும் என்பது புரிய வெளியில் இருந்தபடியே கத்தினான் பரசு.

     “ச்சே ரொம்ப அசிங்கமா போச்சே” மனதோடு நினைத்த சாஸ்தா வெளியே வர, கடப்பாரையும் மண்வெட்டியும் கையுமாக களத்தில் இறங்கத் தயாராக இருந்தான் பரசு.

     “டேய் நான் கூட நீ சும்மாத்தான் சொல்றன்னு நினைச்சேன். நீ நிக்கிற நிலையைப் பார்த்தா, நிஜமாவே மூலவர் சிலை இருந்த இடத்தை தோண்டப் போறியா?” பீதியுடன் சாஸ்தா கேட்க, இல்லை என்று தலையாட்டிய பரசு, “தோண்டப்போறியா இல்லை தோண்டப் போறோம். கொஞ்சம் அங்க பாரு கண்ணா” என்று கைகாட்டினான். சாஸ்தா அந்த திசையில் பார்க்க இன்னொரு கடப்பாரையும் மண்வெட்டியும் அவனைப்  பார்த்து பல்லைக் காட்டியது.

     “உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல” என்று பரசுவின் பின்னே கடப்பாரையையும் மண்வெட்டியையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்தான் சாஸ்தா.

     நீ சாக கிணற்றில் குதிக்கப்போறன்னா குதி மேன் என்னை ஏன் சேர்த்து குதிக்க சொல்ற என்று கேட்பதற்கு ஒரு நிமிடம் போதாது. ஆனால் சாஸ்தா செத்தாலும் அப்படிக் கேட்க மாட்டான். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். இவனுக்கு நண்பன் பரசு இருக்கும் இடமே சொர்க்கம்.

     ஆராய்ச்சிக்காக வந்த அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையை ஆய்வாளர்கள் பள்ளத்திற்குள் இறங்குவதற்காக கட்டப்பட்டிருந்த கயிறு அப்படியே இருந்ததால் அதனைப் பிடித்தபடியே மிகவும் ஜாக்கிரதையுடன் இறங்கினர் இருவரும்.

     பள்ளத்திற்குள் இறங்கவும் வித்தியாசமான உணர்வை உணர்ந்தான் பரசு. அறியாமல் தொலைத்துவிட்டு பைத்தியமாய் அலைந்து திரிந்து தேடிய பொருள் ஒன்று மிகவும் அருகாமையில் இருப்பது போன்ற உணர்வு வர இமையின் முடி கூட சிலிர்த்து வானம் பார்த்தது. அதை அனுபவித்தவாறு தன்னை மீறிய உந்துதலில் கோவிலை நோக்கி நடந்தான்.

     விழுந்து கிடந்த தூண்களை எல்லாம் ஆட்கள் ஒழுங்கு படுத்தி வைத்திருக்க அதையெல்லாம் பார்வையிட்டுக்கொண்டே நடந்தவன் கோவிலின் எல்லைக்குள் நுழைந்து அதன் வாசலில் கால் வைத்த நேரம், கண்ணைப் பறிக்கக் கூடிய மின்னலோடு சேர்ந்து மிகப்பெரிய சத்தத்துடன் இடி முழங்கியது.

    “டேய் சகுனமே சரியில்லை டா, வாடா போயிடலாம்” பின்னே வந்த சாஸ்தா பயத்தோடு புலம்பினான்.

     “சரிடா உடனே போயிடலாம்” என்றவண்ணம் கோவிலுக்குள் நுழைந்தான் பரசு. “அடச் சண்டாளா, வேணுமுன்னே செய்வியா நீ“ என்கிற இவன் புலம்பலைக் கேட்பதற்கு அவன் அங்கே இல்லை, கோவிலுக்கு உள்ளே சென்றிருந்தான்.

     கோவில் என்றால் மிகப்பெரியது எல்லாம் அல்ல. உயரம் பத்தில் இருந்து பன்னிரண்டு அடி இருக்கலாம். பரப்பளவும் பெரிதாக இல்லை. சில தூண்களைத் தாண்டி இருந்த சின்னப் பிரகாரம் முடியவும், உடனடியாக மூலஸ்தானம் வந்தது.

     இவ்வளவு நாளாகத் தான் பாதுகாத்து வந்த தெய்வத்தின் திருவுரு இல்லாமல் வெறுமையாகக் களையிழந்து காணப்பட்டது கர்ப்பகிரகம். கருப்பு வண்ண வானவில்லைப் போல், சிலை இல்லாத அந்தக் கோவிலுக்கும் மதிப்பு இல்லாமல் போனது.

     தன் கண்களை மூடிக்கொண்ட பரசு, தான் கனவில் கண்ட அந்தப் பெண் தன் முன்னே நிற்பதைப் போல் கற்பனை செய்துகொண்டு, மெதுவாக தன் கைகளை அனுமானத்தின் அடிப்படையில் சிலையின் கன்னத்தைத் தொடுவது போல் கொண்டு சென்றான்.

    “வெறும் கையில் முழம் கூட போட முடியாதுன்னு சொல்லுவாங்க. இவன் என்னடான்னா காத்தில் கீதம் படிக்கிறானே. இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ” மனதோடு நினைத்த வண்ணம், "பரசு என்னடா பண்ற” சத்தம் கொடுத்து நண்பன் கவனம் கலைத்தான் சாஸ்தா.

     கனவுலகில் இருந்து வந்தவன் தலை மேல் நுண்ணிய தங்கத் துகள்கள் விழ ஏதோ வெறி வந்தது போல், கையில் இருந்த கடப்பாறை மூலம், மூலவர் பீடத்தின் அடிப்பாகத்தை ஓங்கிக் குத்தினான்.

     “மனசுல பெரிய பாகுபலின்னு நினைப்பு, இவன் குத்தின உடனே மூலஸ்தானம் பெயர்ந்திடுமா” சாஸ்தா மனதிற்குள் நினைத்த அதே நொடியில் மூலவர் பீடத்தின் அடிப்பகுதி தரையில் இருந்து பெயர்ந்தது.

     பாகுபலி சிவுவைப் போல அதைப் பார்த்து சிரித்த பரசு இன்னும் கொஞ்சம் பலம் கொடுத்து அந்தப் பீடத்தைக் கடப்பாரை கொண்டு நிமிர்த்தினான்.

     “ஏய் ஏய் இரு இரு… கை காலில் போட்டுடாதே. நானும் வரேன்” என்றவண்ணம் சாஸ்தாவும் ஓட இருவருமாக சேர்ந்து பீடத்தைத் தூக்கி ஓரமாக வைத்தனர். இப்போது அவ்விடத்தில் வெறும் மண் தரை மட்டும் இருக்க, அதில் கடப்பாரையைக் கொண்டு குத்தினான் பரசு.

     சற்று நேரத்தில் எல்லாம் சத்தம் வித்தியாசமாகக் கேட்க,  வெளியே மீண்டும் ஒரு பெரிய இடி முழங்கியது. “டேய் இங்க ஏதோ இருக்கு டா” என்றான் பரசு.

     “ஒருவேளை புதையலா இருக்குமோ” என்றவண்ணம் சாஸ்தாவும் வர, இருவரும் வேக வேகமாக அந்த இடத்தைத் தோண்டினர்.

     வியர்வையோடு சேர்த்து அவர்கள் உடலின் ஆற்றலும் வழிந்து வெளியே ஓடியது. சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு இருவருமாக ஒரு பழங்காலத்துப் பெட்டி ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

     “டேய் ஏதோ பெரிய புதையல் போல டா” சிரித்தவண்ணம் சாஸ்தா சொல்ல இருவருமாகச் சேர்ந்து அதை வெளியே கொண்டு வந்தனர்.  

     “இந்தப் பெட்டியை நாம ரூமுக்கு எடுத்துட்டு போலாம்” என்றவண்ணம் பரசு முன்னேற நினைக்கையில் அவன் காலுக்கடியில் இருந்த மண் சறுக்கி பெட்டி இருந்த குழிக்குள் விழுந்தான்.

     "டேய் பரசு பார்த்து டா. சரி சரி மேல வா” என சாஸ்தா நண்பனுக்குக் கை கொடுக்க, பரசுவும் அவன் கையைப் பிடித்தபடி மேலே ஏற முயற்சிக்கும் போது தான், நின்று கொண்டிருக்கும் இடத்தில் காலின் தொடுஉணர்வில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான். குனிந்து தலையில் இருந்த விளக்கு வெளிச்சத்தின் மூலம் அது என்னவென்று பார்த்த பரசுவிற்கு அந்த இடத்தில் காத்திருந்தது அந்தநாளின் அடுத்த அதிர்ச்சி.

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1