Magic Stone 5

மந்திரக்கல் 5

     “சாஸ்தா இங்க இன்னும் ஒரு பெட்டி இருக்கு” ஆச்சர்ய மிகுதியில் கத்தினான் பரசு.

     “சரியான பெட்டிக்குப் பிறந்தவங்களா இருப்பாங்களோ, பெட்டி மேல பெட்டியா புதைச்சு வைச்சிருக்காங்க“ ஏக கடுப்பில் சொன்னான் சாஸ்தா.

     “டேய் ஹெல்ப் பண்ணுடா“ ஆர்வ மிகுதியால் பள்ளத்திற்குள் நின்றவண்ணம் கத்தினான் பரசு.

     “ஏன் ஏன் கத்துற, நீ கத்துற கத்தில் எவனாவது முழிச்சு வந்து இதைப் பார்த்தான்னு வைச்சுக்கோ. புதையலைத் திருடப் பார்த்தோமுன்னு நாளைக்கு நாம தான் எல்லா பேப்பரிலும் ஹெட் லைனில் இருப்போம்” என்றான் சாஸ்தா.

     “சரி சரி கோவப்படாம இதை வெளியே எடுக்க ஹெல்ப் பண்ணு“ என்க, பெருமூச்சுவிட்டபடி வெளியே நின்றவண்ணம் தேவையான கருவிகள் அனைத்தையும் எடுத்துக்கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தி பரசு அடுத்த பெட்டியை எடுத்துக் கொடுக்கும் போது பத்திரமாக வாங்கி வைத்தான்.

     ”பரசு எதுக்கும் அந்த பள்ளத்துக்குள்ள வேற ஏதாவது இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கோ. இந்த இடத்தில் வாழ்ந்த அரைவேக்காடு மண்டையனுங்க இன்னும் என்னவெல்லாம் கோளாறு பண்ணி வைச்சிருக்கானுங்கன்னு தெரியாது” சலிப்போடு சாஸ்தா சொல்ல,

     “இதை நான் யோசிக்காம இருப்பேனா? எல்லாம் நல்லாத் தோண்டிப் பார்த்துட்டேன் வேற எதுவும் இல்லை“ என்றபடி வந்த வேலை நல்லபடியாக முடிந்த திருப்தியோடு கோவிலை விட்டு வெளியே வர, “டேய் இந்த கடப்பாறை மண்வெட்டி எல்லாம் உங்க தாத்தாவா எடுப்பாங்க. நான் ஒருத்தன் இது எல்லாத்தையும் எப்படி டா தூக்கிட்டு வருவது” புலம்பியபடி பின்னால் வந்தான் சாஸ்தா.

     பரசுவின் கையில் இருந்த பெட்டி, இந்தக் காலத்து சூட்கேஸைப் போன்று தோற்றமளித்த அளவில் சற்றே பெரிய மணல் பெட்டி. சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டு இருந்தது. பரசு அதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க, பொறுமை இழந்த சாஸ்தா, அதைப் பிடுங்காத குறையாக வாங்கி குலுக்கிப் பார்க்க அதற்கள் எதுவோ குலுங்கியது.

     அந்த நேரத்தில் சாரலாய் ஆரம்பித்து, இமைக்கும் நேரத்திற்குள் பெருமழை பெய்யத் துவங்க, ”சாஸ்தா இதுக்கு மேல நாம இங்க நிக்கிறது ஆபத்து, வா சீக்கிரம் ரூமுக்குப் போயிடலாம்” பரசு சொல்லவும், ஏற்ற சாஸ்தா எதுவும் பேசாமல் நண்பனைப் பின்தொடர்ந்தான்.

     பள்ளத்தில் இருந்து பரசு முதலில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறிவிட, கீழே இருந்த சாஸ்தா தாங்கள் கண்டெடுத்த இரண்டு பெட்டிகளையும் கயிற்றில் இருக்கக் கட்டி மேலிருந்து பரசு தூக்க உதவி செய்தான்.

     எப்படியோ பெட்டிகள் இரண்டும் எந்தவிதச் சேதாரமும் இல்லாமல் மேலே வந்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் பரசு மூச்சுவாங்கிக் கொண்டிருக்க, அந்த இடத்தில் அவர்கள் எதிர்பாரா சம்பவம் ஒன்று நிகழத் தயாராகிக் கொண்டிருந்தது.

     அளவுக்கு அதிகமான மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, பள்ளத்திற்குள் நின்று கொண்டிருந்த சாஸ்தாவிற்கு பின்பக்கமாக வெகு வேகமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது.

     “சாஸ்தா பின்னாடிப் பாரு” பரசு கத்த, அவன் திரும்பிப் பார்ப்பதற்கு அவசியமில்லாமல் வேகமாக வந்த மண் சாஸ்தாவின் கால்களைச் சூழ்ந்து கொண்டது.

     கண நேரத்திற்குள் முட்டி வரை வந்துவிட்ட மணலால் சாஸ்தா ஸ்தம்பித்து போக பரசு தான், ”டேய் சீக்கிரம் கயிறைப் பிடி” என்று கத்தினான்.

     சாஸ்தாவும் கயிறைப் பிடித்தான். ஆனால், அவனால் ஏற முடியவில்லை. அதற்குள் மண் அவன் தொடையைத் தொட்டிருந்தது. “டேய் சீக்கிரம் மேலே ஏறி வாடா” அச்சத்தில் கத்தினான் பரசு.

     “முடியல மச்சான் கால் சகதிக்குள்ள மாட்டிக்கிச்சு” விட்டால் அழுதுவிடுவேன் என்னும் தோரணையில் சொன்னான் சாஸ்தா. சாஸ்தாவுக்கு இந்த உலகத்தில் வாழ ஆசை அதிகம். நண்பனை நன்றாக வாழவைத்து அவனுக்கு அருகே இருந்து தன் வாழ்வை வாழவேண்டும் என்பது அவனுடைய பேராசைகளுள் ஒன்று. அது நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயந்தான்.

     “சாஸ்தா நான் சொல்றதைக் கேளு. ஆடாம அசையாம இரு நான் உயிரோட இருக்கிற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது. கயிறைப் பிடிச்சிக்கிட்டு கண்ணை கெட்டியா மூடிக்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்” மேலிருந்து நம்பிக்கை கொடுத்தான் பரசு.  

     சாஸ்தாவும் ஆடாமல் அசையாமல் இருந்தான். மண் கொஞ்சம் கொஞ்சமாக அவனை அமிழ்த்துக் கொண்டே வந்து புதைகுழி போல் அவனை உள்ளே இழுக்க முயல, அவன் நண்பன் சொன்ன வார்த்தைகள் கொடுத்த பலத்தினால் திடமாய் அதை எதிர்த்து நின்றான்.

     திடீரென்று ஏதோ ஒரு விசை, ஒளியின் வேகத்தில் தன்னை மேல் நோக்கி இழுப்பதைப் போல் உணர கண்திறந்து பார்த்த சாஸ்தா பரசுவைப் பார்த்து அதிர்ந்தான்.

     தன் கையில் இருந்த கயிற்றின் மற்றொரு முனையை அருகில் இருந்த பெரியதும் அல்லாத சிறியதும் இல்லாத அளவான மரத்தின் தண்டோடு சேர்த்துப் பிணைத்து,   மிச்சத்தை தன் இடையைச் சுற்றி கட்டி இருந்தான் பரசு. உன்னை நான் காப்பாற்றி விட்டால் இருவருக்கும் வாழ்வு, இல்லையேல் இருவருக்குமே இந்த இடத்தில் சாவு என்பது போல் இருந்தது அவனுடைய செய்கை.

     சாஸ்தா நண்பனை வியந்து பார்க்க, அவனோ கொண்டது ஒன்றே கொள்கையென சாஸ்தாவை மேலே இழுப்பதிலேயே மொத்தக் கவனத்தையும் வைத்திருந்தான். அந்தக் காரியம்  நினைத்ததை விட கடினமாகவே இருந்தது. என்ன ஆனாலும் முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் பரசு.

     பிடிவாத குணம் கொண்டவர்களை இயற்கைக்கு அதிகம் பிடிக்கும். அவர்களுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் நிறைவேற்றிக்கொடுக்கும் என்பார்கள். அது பரசுவின் விஷயத்தில் நடந்தது. பளிச்சென்று வெட்டிய மின்னல் கண்களைக் கூசச் செய்ய அந்த வெளிச்சம் தாங்க முடியாது கண்களை மூடியவனின் அகக்கண்கள் சில நொடிகள் திறக்கப்பட, இதுவரை அவன் காணாத சில காட்சிகள் கண்முன் வந்து போனது.

     அதில், மலைப் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஒருவரை இன்னொரு நபர் மிகவும் இலாவகமான முறையில் காப்பாற்றி இருந்தார். அந்த நிகழ்வு மிகச்சரியாக இப்போது காணப்பெற்றதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உணர்ந்த  பரசு தான் கண்ட காட்சியின் படி, தன்னுடைய  முயற்சியை சற்று மாற்ற, அது வேலை செய்தது.

     இடையில் கட்டிய கயிற்றோடு உடலின் ஒட்டு மொத்த சக்தியை ஒன்று திரட்டி பள்ளத்திற்கு எதிர் திசையில் பரசு நடக்க நடக்க சாஸ்தா சிறிது சிறிதாக மேலே வந்தான்.

     ஈர்ப்பு விசையும், சாஸ்தாவின் உடலோடு ஒட்டியிருந்த மணலின் எடையும் சேர்ந்து பரசுவைப் பின்னால் இழுக்கப் பார்க்க, அதை எதிர்த்து தொடர்ந்து முன்னோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தான். இடையில் கட்டிய கயிறு சட்டையைத் தாண்டி உடலைப் புண்படுத்தியது.

     சாஸ்தா வேண்டும் சாஸ்தா வேண்டும் என்பதை மந்திரம் போல் சொல்லிக்கொண்டு வைக்கும் ஒவ்வொரு அடியையும்,  நச்சென்று வைத்தான். அவன் பாதத்தின் அழுத்தத்தால் நிச்சயம் பூமிக்கும் வலித்திருக்கும்.

     பரசுவின் விடாமுயற்சி வெற்றி பெற சாஸ்தா சீரான வேகத்தில் மேல்நோக்கி வந்து கொண்டிருந்தான். பாதிதூரம் வந்ததும் தானும் சற்றே ஒத்துழைக்க ஆரம்பித்தான் சாஸ்தா.

     அதன்பிறகு அதிக சிரமம் இல்லாமல் பள்ளத்தின் மேற்பரப்பிற்கு வந்தவன் ஓடிச்சென்று பரசுவைக் கண்டிக்கொண்டான். அதில் ஆபத்தில் இருந்து தப்பி வந்து தாயிடத்தில் ஆறுதல் பெறும் குழந்தையின் மனநிலை இருந்தது.

     அழுக்காய் நின்றவனை அருவருப்பு பார்க்காது தானும் கட்டிக்கொண்ட பரசு, “பயந்துட்டிட்டியா? விட்டுற மாட்டேன் டா. அவ்வளவு சீக்கிரம் எமன் உன்னைப் பார்க்கவா நான் இந்தப் பூமியில் இருக்கேன்” வலியுடன் கூட புன்னகையோடு சொன்னான் பரசு.

     மழை சாஸ்தாவின் உடலில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை பெருமளவு அகற்றி இருந்தது. நண்பனின் படபடப்பு அடங்கும் வரை பொறுத்திருந்து அவர்கள் கண்டெடுத்த பெட்டிகளோடு சேர்த்து அறை வந்து சேர்ந்தனர்.

     “பரசு நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன் எனக்காக கொஞ்சம் டீ போட்டு வையேன்” என்றபடி பாத்ரூமிற்குள் நுழைந்தான் சாஸ்தா. மண்சரிவில் மாட்டிக் கொண்டிருந்த நேரத்தில், வெட்டிய மின்னல் பரசுவிற்கு மட்டும் இல்லை இவனுக்கும் சில காட்சிகளைக் காட்டி இருந்தது. அந்தக் காட்சிகளின் வெளிப்பாடாக சாஸ்தாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

     குளித்துவிட்டு வெளியே வந்த சாஸ்தா தான் உள்ளே போன போது இருந்த அதே நிலையில் இப்பொழுதும் அமர்ந்திருந்த பரசுவைப் பார்த்தான். "பரசு என்னாச்சு உனக்கு” என்றபடி அருகே வந்து தோள் தொட்டான்.

     “நம்மைச் சுத்தி ஏதோ நடக்குது. அது நல்லாதா கெட்டதான்னு தெரியல. நானே சொன்னாலும் எந்தக் காரணத்துக்காகவும் நீ என்னைத் தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாதே” கண்களில் ஒருவித ஏக்கத்தைத் தாங்கிச் சொன்னான் பரசு.

     “எப்பவும் அப்படி ஒரு நிலைமை வந்திடக் கூடாதுங்கிறது தான் என்னோட வேண்டுதலும்” ஆற்றாமையோடு பதில் சொன்ன சாஸ்தா, "சரி நீ போய் குளிச்சிட்டு வா. நான் ரூமை க்ளின் பண்ணிட்டு டீ போட்டு வைக்கிறேன்” என்க, பரசுவும் அதை ஏற்று குளியலறை சென்றான்.

     பாத்ரூம் கண்ணாடி முன்னால் நின்று தன் சட்டையைக் கழட்டினான். சற்று முன்னர் தோலோடு போட்டியிடும் வகையில் உடலோடு ஒட்டிக்கிடந்த கயிறு தன் வேலையை நன்றாகவே காட்டி இருந்தது. வரி வரியாகக் காயங்கள் இருக்க, அது எதையும் பொருட்படுத்தாமல் குளித்துவிட்டு வந்தவனுக்கு டீயைக் கொடுத்தான் சாஸ்தா.

     “ஏன் சாஸ்தா உனக்கு இந்த பூர்வ ஜென்மம் இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கா” மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான் பரசு.

     “நேத்து வரைக்கும் இல்லை” மிரட்சியுடன் பதில் வந்தது சாஸ்தாவிடம் இருந்து. “இப்ப என்ன சொன்ன“ பரசு அதிற, நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சில கணங்கள் அமைதியாகஇருந்துவிட்டு, “உனக்கும் முன்ஜென்ம ஞாபகங்கள் வந்ததா?“ என ஒரே நேரத்தில் கேட்டு வைத்தனர்.

     அந்த நேரம் ஒருவர் முகத்தில் தெரியும் அதிர்வுகளைப் பார்த்து மற்றவனுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது. “உனக்கு என்ன வந்தது சொல்லு“ மீண்டும் ஒரே நேரத்தில் சொன்னவர்கள், தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டு, “சரி நானே சொல்றேன்“ என்பதையும் ஒன்றாகச் சொல்ல, இந்த முறை சத்தமாகவே சிரித்துவிட்டனர் இருவரும்.

     ஒரு கட்டத்தில் சுதாரித்த சாஸ்தா, “இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் நீ என்னை காப்பாத்துற மாதிரியான காட்சி எனக்கு வந்துச்சு. என்ன ஒன்னு மணலுக்குப் பதில் மலைப்பள்ளம்” என்றவனின் குரல் சோர்ந்தது. முதல் காட்சியைச் சொல்லிவிட்டாய் அடுத்த காட்சியைப் பற்றி உன் நண்பனிடம் எப்படிச் சொல்வாய் என்று மனசாட்சி கேள்வியெழுப்ப பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்துகொண்டான் சாஸ்தா.

     “அதுதான், அதே தான் எனக்கும் தெரிஞ்சுச்சு. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம், இப்ப நடந்தது ஏற்கனவே நடந்திருக்கா. இல்லை ஏற்கனவே நடந்தது தான் இப்ப திரும்ப நடக்குதா? சினிமாப் படங்களில் காட்டுற மாதிரி நாம போன ஜென்மத்திலும் ஒன்னா இருந்திருப்போமா?” தன்னளவில் தீவிரமாக யோசித்தான் பரசு. அவன் வித்தியாசமான விருப்பங்கள் கொண்ட மனது அவனை அப்படி யோசிக்க வைத்தது.

     நண்பனின் தீவிர யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “அப்ப எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்கிட்ட இருந்து எனக்கு விமோட்சனமே இல்லையா?” என்க, மற்றதை மறந்து முறைத்தான் பரசு.

     “சரி சரி முறைக்காத ப்ரீயா விடு. நான் உயிர் பயத்துல சரியாவே பார்க்கல. நீ நல்லா பார்த்து இருப்பியே நாம இரண்டு பேரும் என்ன மாதிரி ட்ரஸ் பண்ணி இருந்தோம்” சம்மந்தமே இல்லாமல் கேட்டான் சாஸ்தா.

     “ட்ரஸா அது எதுக்கு டா" நிஜமாகவே புரியவில்லை தான் பரசுவிற்கு.

     “இல்ல நான் நிறைய கதைகள் படிச்சிருக்கேன். இந்த மாதிரி இரண்டாவது பிறவி எடுக்கிறவங்க எல்லாம் அதுக்கு முன்னாடி பிறவியில் அரசனாவோ இல்லை இளவரசனாவோ இருந்திருப்பாங்க.

     அப்படிச் சொல்வதை விட அரசனா. இளவரசனாப் பிறந்தவங்க தான் மறுஜென்மம் எடுத்திருக்காங்க. சாதாரண மக்கள் சோத்துக்குத் திண்டாடுவதையே பிழைப்பா வைச்சிருப்பதால், அவங்களுக்கு மறுஜென்மம் எடுக்க எல்லாம் நேரம் இல்லை போல“ என்க, “வாயை  மூடுடா காய்ச்சல் வந்த கண்டாமிருகம்“ கலாய்த்தான் பரசு.

     சாஸ்தா அடங்குவதாக இல்லை, “ஒருவேளை நாம ராஜா காலத்தில் வாழ்ந்து இருந்தோமுன்னா நம்ம இரண்டு பேரில் யார் ராஜாவா இருந்திருப்போம், எப்படி யாரால் செத்து இருப்போம். எதுக்காக மறுபடி பிறந்து இருப்போம்“ கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, பரசுவிற்குள்ளும் அந்தக் கேள்வி இருந்ததால் இந்த முறை நண்பனை அவன் தடுக்கவில்லை.

     “நாம யாரையாவது கொன்னு அவன் ஆவியாகி அந்த ஆவியைப் போட்டுத்தள்ள மறுபடி பிறந்திருப்போமா. இல்லை யார் மூலமாவது கொல்லப்பட்டு அவங்களைக் கொல்ல மறுபடியும் பிறந்திருப்போமா” சாஸ்தா தன் கற்பனைக் குதிரையை தட்டி எழுப்பி விட, அது இறக்கை முழைத்து காற்றில் பறக்க ஆரம்பித்தது.

     அவன் பின்னந்தலையில் ஒரு தட்டு தட்டி குதிரையோடு சேர்த்து அவனையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினான் பரசு. வலித்த தலையைத் தேய்த்து விட்டுக்கொண்டு, “இங்க பார் முன்ன மாதிரி என்னை அடிக்கிற வேலை எல்லாம் வைச்சுக்காத. போன ஜென்மத்தில் நிச்சயம் நான் ஒரு அரசனாவோ இல்லை இளவரசனாவோ தான் இருந்திருப்பேன். அதனால மரியாதையா நடந்துக்க அதுதான் உனக்கு நல்லது” ராஜதோரணையுடன் நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான்.

     “அப்படிங்களா ராஜா, மரியாதை தானே வாங்கிக்கோங்க நல்லா வாங்கிக்கோங்க” என்ற பரசு அவனை அடிப்பதற்கு தோதுவாக ஏதாவது கிடைக்குமா என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.

     “டேய் வேண்டாம் டா மச்சான். நான் என் வீட்டுக்கு ஒரே ஆம்பிளைப் பையன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் செத்துப் பிழைச்சு வந்திருக்கேன் வேற. என்னை விட்டுடு டா” என்றவண்ணம் சாஸ்தா எழுந்து அந்த அறைக்குள்ளே ஓட ஆரம்பிக்க, “எதுக்கு ராஜா ஓடுறீங்க, நீங்க தானே மரியாதை கேட்டீங்க நின்னு வாங்கிக்கோங்க” என்று பரசுவும் ஓட சற்று நேரத்துக்கு முன்னர் துடைத்த ஈரம் டைல்ஸ்ஸில் காயாமல் இருக்க அது தன் கடமையை சிறப்பாகச் செய்தது. கால் வழுக்கிய பரசு சரியாக அவர்கள் கண்டெடுத்த அந்த பெட்டியைத் தள்ளிக் கொண்டு விழுந்தான்.

     அந்தப் பெட்டி வழுக்கிச் சென்று ஓரிடத்தில் வலுவாக மோதியதில் அது திறந்து அதற்குள் இருந்த பொருட்கள் மண்ணைத் தொடவும் முடியாமல், பெட்டிக்குள்ளே போகவும் முடியாமல் பெட்டியின் மூடியில் பரிதாபமாகக் கிடந்தது.

     அது அந்தக்காலத்து துணி ஓவியங்கள். மடல் போல சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. இவர்களின் ஆர்பாட்டத்தில் ஒரு ஓவியம் மட்டும் சற்றே விரிந்து, தான் கொண்டிருந்த பாதி உருவத்தைக் காட்டியது.

     “பரசு பாரு ஏதோ ஓவியம் மாதிரி இருக்கு” சாஸ்தா சொல்ல, பரசுவின் கண்களும் நிலைக்கொள்ளாமல் அதன் மீது தான் நிலைத்திருந்தது. உள்ளுணர்வு உந்த, அந்த ஓவியம் இருந்து துணியை முழுதாக விரித்துப் பார்த்தான்.

     அதைப் பார்த்த ஆண்கள் இருவரின் கண்களும் அப்பட்டமாக அதிர்வைக் காட்டியது. கையில் இருந்ததை கீழே போட்ட பரசு அமர்ந்த நிலையிலே வேக வேகமாக பின்நோக்கி நகர்ந்தான். சாஸ்தாவுக்கு பேயறைந்த நிலை.

     ”இல்லை இது எல்லாம் பொய், சாஸ்தா அந்தக் கருமத்தை எல்லாம் தூக்கி வெளியே போடு, உடனே போடு” கத்த ஆரம்பித்தான் பரசு. அது எதுவும் சாஸ்தாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் பரசுவை விட அதிகப்படியான அதிர்ச்சியில் இருந்தான்.

     இவர்கள் இருவரையும் இந்தளவிற்கு அதிர்ச்சியாக்கிய அந்த ஓவியத்தில், இவர்கள் அச்சை உரித்தவாறு மணிமுடி தரித்த இரண்டு ராஜாக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

     மறுஜென்மம், மறுபிறவி என்பதைப் பற்றி காமெடியாகப் பேசும் போது பதறாத இருவரும், அது தான் நிஜம் என்பதை உணர்ந்த நொடி பயந்து போனது உண்மை.

     அந்த நேரம், பரசுவை மக்கள் பலர் ஒன்று சேர்ந்து மரணகாயம் உண்டாகும் அளவு தாக்குவதை, இராஜ உடையில் இருந்த தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்து, சாஸ்தாவை நடுங்கச் செய்தது


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1