Magic Stone 7

மந்திரக்கல் 7

     ”ஏய் ச்சே வாயைக் கழுவுடா மூதேவி. இது என் அம்மாவா இருக்க முடியாது. நீ, நான், யசோ மூணு பேரும் இந்த ஓவியத்தில் இருக்கிற வயசில் தான் இப்ப இருக்கோம். அப்ப இந்தப் பொண்ணு எப்படி என் அம்மாவா இருக்க முடியும்” தன்னைப் போல் சொன்ன பரசு ஏதோ தோன்ற சட்டென்று அமைதியானான்.

     “நீ சொல்றதும் நியாயமா தான் இருக்கு. அப்படியே பார்த்தாக் கூட  உங்க அம்மாவை மாதிரியே இருக்கிற இந்தப் பொண்ணு யாரா இருக்கும்” யோசித்த சாஸ்தாவுக்கும் ஏதோ தோன்றியது.

     “என் தங்கச்சி", “உன் தங்கச்சி” என்று அடுத்தடுத்து குரல்கள் ஒலித்தது இருவரிடம் இருந்தும். “ஆமாம் டா, விபத்தில் இறந்து போன என் என் தங்கச்சி உயிரோடு இருந்திருந்தா, இப்ப இந்த வயசில் தானே இருப்பா” பரசு சொல்ல வேகமாக தலையாட்டி அதை ஒப்புக் கொண்டான் சாஸ்தா.

     “எனக்கு ஒரு சந்தேகம் சாஸ்தா. இந்த ஓவியங்கள் எல்லாம் உண்மையா இருந்து, இதில் இருக்கிற மாதிரி எதிர்காலத்தில் நடக்கப் போகுதுன்னா என் அப்பா அம்மாவோட சேர்ந்து ஆக்சிடென்டடில் செத்துப் போயிட்டதா நாம நினைச்சிக்கிட்டு இருக்கிற என் தங்கச்சி உயிரோட இருக்க நிறையவே வாய்ப்பு இருக்கு இல்ல” உற்றாகமாகக் கேட்டான் பரசு. ஆசைஆசையாய் தூக்கி வளர்த்த தங்கை அற்ப ஆயுளில் போய்விட்டாளே என அவன் வருந்தாத நாளே கிடையாது. அது எதற்கும் அவசியமில்லை என்கிற நிலை வந்தால் நினைக்கும் போதே நெஞ்சம் தித்தித்தது.

     “அப்படி உன் தங்கச்சி உயிரோட தான் இருக்கான்னா ஏன் நம்மளைத் தேடி வரல” ஒருவித பரபரப்புடன் கேட்டான் சாஸ்தா. உன்னைத் தேடி என்று சொல்லாமல் நம்மைத் தேடி என்று சொன்னதைக் கவனித்த பரசுவிற்குச் சிரிப்பு வந்தது.

     “வந்தா கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிடுவியோன்னு பயத்தில் வராம இருந்திருப்பா” துளிர்விட்ட புன்னகையுடன் சொன்னான். துக்க வீட்டில் இருந்தாலும் சரியான நேரத்துக்கு பசியெடுக்கும் வயிற்றைப் போல், இருக்கும் அசாதாரண நிலையில் கூட தங்கையின் வரவு பற்றிய கற்பனை சந்தோஷத்தைக் கொடுத்தது பரசுவிற்கு.

     “கடத்திட்டு போய் கல்யாணம். அதுவும் பதிமூணு வயசுப் பொண்ணை. என்னைப் பார்த்தா உனக்க எப்படி இருக்கு” சண்டைக்கு வந்தான் சாஸ்தா.

     “பதிமூணு வயசா அது பத்து  வருஷத்துக்கு முன்னாடி. இப்ப என் தங்கச்சி உயிரோட இருந்தா அவளுக்கு இருபத்திமூணு வயசு இருக்கும்” பெருமூச்சுவிட்டபடி சொன்னான் பரசு.

     “ஆமா டா யசோவுக்கும், உன் தங்கச்சிக்கும் ஒரே வயசு தானே. இதில் ஒரு காமெடியைப் பாரேன் பரசு. என் தங்கச்சிய நீ கட்டிக்க, உன் தங்கச்சியை நான் கட்டிக்கிறேன்னு அந்த காலத்திலேயே நமக்குள்ள டீல் போட்டு வைச்சிருக்கோம்” எனச் சொல்லிச் சிரித்தான்.

     “டேய் இப்ப அவங்க இரண்டு பேரும் நமக்குத் தங்கச்சிங்களா இருக்காங்க. அதுக்காக போன ஜென்மத்திலும்  அப்படியே இருந்திருக்குமா என்ன?" பரசு லாஜிக்காக கேட்க, “எது எப்படியோ, அவங்களுக்கும் நமக்கும்  பூர்வ ஜென்மத்திலும் பந்தம் இருப்பது உறுதி தானே“ என்றவன் சின்னதாய் தயங்கி, “ஏன் பரசு, ஒருவேளை இந்த ஜென்மத்தில் உன் தங்கச்சி உயிரோடு இருந்து அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமை வந்தா என்மேல கோச்சுக்க மாட்டியே" எனக் கேட்டே விட்டான்.

     “விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சமா பிஞ்சிடும் நாயே” நண்பன் ஆசையை நிறைவேற்றிக்கொடுக்க கொள்ளை ஆசை மனதில் இருந்தும், விளையாட்டாக ஏமாற்றினான் பரசு.

     அது புரிந்ததால், “சரி, சரி விடு… எனக்குக் கொடுப்பினை அவ்வளவு தான்னு நினைச்சுக்கிறேன். ஆனா ஒன்னுடா நான் உன் அளவுக்கு கொடூரன் கிடையாது. என் தங்கச்சி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டான்னு வைச்சுக்கோ, முழு மனசோட நானே அவளை உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்" பெருந்தன்மையாகச் சொல்ல,

     “ஊருக்குள்ள வேற எவனும் அவளைக் கல்யாணம் பண்ண மாட்டான்னு என் தலையில் கட்ட பார்க்கிறியா?" சிரித்தான் பரசு. அவள் அண்ணனோடு ஒட்டிக்கொண்டு அலைவதாகப் பொறாமைப் பட்டு எப்போது பார், தன்னை வம்பிழுத்துச் சண்டையிடும் யசோதாவின் முகம் நினைவு வந்தது அவனுக்கு.

     “என் தங்கச்சிக்கு என்னடா குறை ராணியாட்டம் இருப்பா"
 என்க, “ராணியோட முகத்தைப் பாரு" வேண்டுமென்றே சீண்டினான் பரசு.

     “உன் முகரக்கட்டைக்கே யாரோ ராஜா வேஷம் போட்டு இருக்கும் போது, என் தங்கைக்கு என்னவாம். நீ வேண்ணா பாரு இந்த போட்டோவில் இருக்கிற மாதிரி இந்த ஜென்மத்திலும், நீ தான் என் தங்கச்சிக்குப் புருஷன்“ முடிவே செய்துவிட்டிருந்தான் சாஸ்தா.

     ஒருவித திகிலுடன் கையில் இருந்த ஓவியத்தைப் பார்த்த பரசு, “டேய் மச்சான் இது எல்லாம் உண்மையா இருந்தா என்னோட நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாரு. உன் தங்கச்சி அந்த பஜாரிகிட்ட தான் என்னோட வாழ்க்கையை நான் ஒப்படைக்கணுமா" போலியாகப் பயம் கொள்ள, “உன் முகரைக்கு என் தங்கச்சி ரொம்பவே அதிகம் ஒழுங்கா அவளை நல்லாப் பார்த்துக்க" பிறக்காத பிள்ளைக்குப் பெயர் வைக்க சண்டை போட்ட கதையாக, நடக்குமா நடக்காதா எனத் தெரியாத ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

     சில நிமிடங்கள் தொடர்ந்த அந்தச் சண்டை ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர, “சரி சரி அதெல்லாம் நடக்கும் போது நடக்கட்டும். இப்ப வா அடுத்த ஓவியத்தைப் பார்ப்போம்” மீண்டும் சரியான இடம் வந்தான் பரசு. அந்தக் கணத்தில் சற்று நேரத்திற்கு விலகி இருந்த பதற்றம் மீண்டும் அழகாகத் தொற்றிக் கொண்டது இருவரிடத்திலும்.

     பரசு எடுத்த மூன்றாம் ஓவியத்தில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் பெண்ணொருவள். அழகான பிறை போன்ற நெற்றியின் உச்சியில் இருந்து தலைக்கு ஒற்றை வழிப் பாதை ஒன்றை ஏற்படுத்தி, கணவனின் மீதுள்ள பாசம் மொத்தத்தையும் ஒட்டு மொத்தமாக குங்குமத்தை கொட்டி காண்பித்திருந்த, அவளின் நடு நெற்றியில் மங்களத்தின் சின்னமான செயற்கைப் பொட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இயற்கையே கருஞ்சங்கு முத்திரையை எடுப்பாய் வரைந்து வைத்திருந்தது.

     கயல் விழிகளைச் சுற்றி பல வண்ணங்களில் சிறு சிறு திருஷ்டிப் பொட்டு வைத்திருந்தாள். காதுகளில் சிறிய கம்மல்கள், கழுத்தில் ஒரே ஒரு காசுமாலை அதுவே அவளுடைய அலங்காரம். மற்ற இரு பெண்களை விட தனித்தன்மையுடன் வேறு மாதிரியான அழகில் தெரிந்தாள்.

     “மச்சான் இந்தப் பொண்ணை இதுவரைக்கும் எங்கேயாவது பார்த்து இருக்க” பரசுவின் கேள்விக்கு இல்லை என்று பதில் அளித்தான் சாஸ்தா.

     “ஆனா நான் இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேன் டா. இந்த முகம், இந்தக் கண்ணு எல்லாத்துக்கும் மேல நெத்தியில் இருக்கிற இந்த சங்கு மச்சம். கண்டிப்பா  நான் இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்து இருக்கேன். ஆனா எங்கன்னு நினைவு வரலையே. இவளுக்கும் நமக்கும் அப்படி என்ன சம்பந்தமா இருக்கும்” தன்னைப் போல் புலம்பினான். பாவம் ராணியின் கோலத்தில் பார்த்தவனுக்கு இந்த எளிமைக் கோலம் அவ்வளவு எளிதில் பிடிபடிவில்லை.

     “இவளுக்கும் நமக்கும் சம்பந்தம் இருந்திருக்காது. ஆனா இவளுக்கும், நம்ம பொண்டாட்டிங்களுக்கும் சம்மந்தம் இருந்திருக்கும்“ என்ற நண்பனைப் புரியாது பார்த்தான் பரசு.

     “என்னடா யோசிக்கிற எத்தனை படம் பார்த்திருக்க, எத்தனை புக் படிச்சிருப்ப. எல்லா மகாராணிகளுக்கும் ஒவ்வொரு பணிப்பொண்ணுங்க க்ளோஸ் ப்ரண்டா இருப்பாங்க. அதே மாதிரி தான் இந்த இரண்டு மகாராணிங்களுக்கும் இந்தப் பொண்ணு ப்ரண்டா இருந்திருக்கும்.

     ஆனா ராஜா, ராணி ஓவியங்களோட சேர்த்து இந்த வேலைக்காரப் பொண்ணு ஓவியத்தையும் பாதுகாக்கிற அளவுக்கு இந்தப் பொண்ணு அப்படி என்ன பண்ணி இருப்பான்னு தான் தெரியல. சரி வா நாம அடுத்து யார் இருக்கான்னு பார்ப்போம்“ பயத்துக்கு இணையான ஆர்வமும் இருந்தது அவனிடத்தில்.

     அடுத்த ஓவியத்தில் இரண்டு வாள்களுக்கு நடுவே அழகான வாலிபன் ஒருவன் தெரிந்தான். “டேய் இது நம்ம யுவா டா” கண நேரம் கூட வித்தியாசமில்லாமல் ஒன்றாகச் சொல்லி முடித்தனர் நண்பர்கள் இருவரும்.

     “பரசு எனக்கு ரொம்ப கியூரியாசிட்டியா இருக்கு. சீக்கிரம் அடுத்து யார் இருக்கான்னு பாரு” சாஸ்தா சொல்ல கடைசி ஓவியத்தைக் கையில் எடுத்தான் பரசு.

     பட்டுத்துணியாலான அந்த ஓவியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்க, கீரிடம் அணிந்த தலைமுடியைத் தாண்டி நெற்றி வரை வந்த அந்த ஓவியம் ஒரு பெண்ணுக்கு உண்டானது எனச் சொல்லாமல் சொன்னது.

     யார் இந்தப் பெண் என எதிர்பார்ப்போடு அவர்கள் செயல்பட முயற்சிக்கும் போது, எதிர்பாரா வண்ணம் எங்கிருந்தோ வந்த மிகப்பெரிய கழுகு ஒன்று திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து ஒரே நேரத்தில் சாஸ்தா, பரசு இருவரின் தலையிலும் தன் இறக்கைகளால் அடிக்க, பயந்த பரசு கையில் இருந்த ஓவியத்தைக் கீழே போட்டான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய அலகால் அந்த ஓவியத்தைத் தூக்கிக் கொண்டு ஜன்னல் வழியே பறந்தது அது.

     “அடக் கருணையில்லாத கழுகே, அது என்ன நீ திங்கிற பொருளுன்னு நினைச்சியா? எடுத்துட்டுப் போனது தான் போன, நாங்க அந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்த பின்னாடி கொண்டு போய் இருக்கக் கூடாதா? ஏற்கனவே இருக்கிற சஸ்பென்ஸ் போதாதுன்னு இது வேற” என்றவண்ணம் அது பறந்து சென்ற பால்கனி அருகே நின்று கத்தினான் சாஸ்தா.

     “இந்நேரத்துக்கு அது இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிப் போய் இருக்கும்” சொன்னவன் பரசு.

     “சரியான நேரத்தில் இப்படி ஆகிடுச்சே, அந்தக் கழுகு மட்டும் என் கையில் கிடைச்சது" சாஸ்தா பல்லைக் கடிக்க, “கிடைச்சா” தூண்டிவிட்டான் பரசு.

     “கழுகு பிரியாணி சாப்பிட்டு இருக்க நீ” சாஸ்தா சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் காதைக் கிழிக்கும் சத்தத்துடன் திரும்பி வந்து சாஸ்தாவைத் தாக்கியது அந்தக் கழுகு.

     பரசு நண்பனைத் தன்பக்கம் இழுத்துக் காப்பாற்றியவன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேவும் அழைத்து வந்துவிட்டான். செல்லும் அவர்கள் இருவரையும் தன் கூர்மையான கண்களால் முறைத்துப் பார்த்தது கழுகு.

     “அதுக்கு நாம பேசுற பாஷை புரியுது பரசு” பயந்து போய் சாஸ்தா சொல்ல, பரசுவும் ஆம் என்று தலையசைத்தான்.

     அடுத்து என்ன செய்வது என்கிற சிந்தனையோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், முன்பிருந்த அறைக்குள் கேட்ட திடீர் சத்தத்தால் இருவரும் ஒரு கணம் அரண்டு தான் போயினர்.

     ஒருவாரு நிதானித்து, பறந்து செல்லத் துடித்த மிச்சம் மீதி தைரியத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு பரசு அந்த அறைக்குள் சென்று பார்க்க, பால்கனிக்கு அருகே சற்று நேரம் முன்னால் கழுகால் கவர்ந்து செல்லப்பட்ட ஓவியம் அநாதையாகக் கிடந்தது. கழுகு நின்றுகொண்டிருந்த இடத்தில் அதன் அடையாளத்தை உணர்த்தும் வகையில் ஒற்றை இறகு மட்டும் கிடந்தது.

     அந்த இராட்சதப் பறவை சென்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பரசு, ஓவியத்தைத் விரித்துப் பார்க்க, அதில் இருந்த பெண்ணின் முகம் கூரான ஏதோ ஒன்றால் கோடு கோடாக போடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டு இருந்தது.

     தலை முதல் கால் வரை முழுவதும் கருப்பு நிற உடையணிந்த அந்த பெண்ணின் வலது கையில் நின்றிருந்தது கழுகு ஒன்று.

     “சாஸ்தா இங்க பாரு" பரசு காட்ட, “இது அதே கழுகு தான் டா" எச்சில் விழுங்கச் சொன்னான் சாஸ்தா.

     “இந்த ஓவியத்தில் இருக்கிறது யாருன்னு தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு தான் அந்தக் கழுகு இதைச் செஞ்சிருக்கு” என்க, மறுக்கத் தோன்றவில்லை மற்றவனுக்கு.

     “சரி சீக்கிரம் வா அந்தப் பெட்டியில் இன்னும் என்னென்ன இருக்குன்னு பார்த்திடுவோம்” சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் தானே முன்னே சென்று அந்தப் பெட்டியை நன்றாகத் தேடிப் பார்த்தான் சாஸ்தா. ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக போடப்பட்டிருந்த பல வித விதைகளுக்கு நடுவில் இரண்டு மோதிரங்கள் கிடைத்தது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

     மோதிரத்தின் அழகு இருவரையும் ஈர்க்க ஆளுக்கு ஒன்றாக அதை அணிந்து கொண்டனர். பரசு பச்சை நிற மோதிரத்தை அணிந்து கொள்ள, சாஸ்தா நீலக்கல் பதித்த மோதிரத்தை அணிந்து கொண்டான். அந்த இரண்டு மோதிரமும் ஏதோ அவர்களுக்காகவே செய்தது போல் கணக்கச்சிதமாக அவர்களின் மோதிர விரலோடு ஒட்டிக் கொண்டது.

     சற்று நேரம் அமைதியாக இருந்த பரசு, ஏதோ அனத்தல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, கண்டெடுத்த இன்னொரு பெட்டியைத் திறக்கப் போராடிக் கொண்டிருந்தான் சாஸ்தா.

     “டேய் அவசரக்குடுக்கை உடைச்சிடாதே. நான் திறக்கிறேன்” என்றவன், பெரிய சூரனைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டு பெட்டியைத் திறக்க முற்பட்டான். வாய்ச்சொல் வீரன் போலும் அவனாலும் அதைத் திறக்க முடியவில்லை.

     “சாஸ்தா இந்தப்பக்கம் நீ இழு, அந்தப்பக்கம் நான் இழுக்கிறேன்” என்று ஆளுக்கொரு பக்கமாய் அவர்கள் அந்தப் பெட்டியை இழுக்க, அது திறந்து உள்ளிருந்த ஓலைச்சுவடிகள் அறை முழுவதும் சிதறியது.

 

 

   

 

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1