Magic Stone 8

மந்திரக்கல் 8

     “சாஸ்தா, போன ஜென்மத்தில் நமக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கணுமுன்னு ஆசைப்பட்ட இல்ல. உனக்காகவே யாரோ பல வருஷத்துக்கு முன்னாடி வேலை மெனக்கெட்டு நம்ம கதையை நமக்காக ஓலைச்சுவடியில் எழுதி வைச்சிருக்காங்க போல” என்க, “அப்ப எதுக்கு வெயிட்டிங். உடனே போய் படிச்சுப் பார்ப்போம் வா” கண்கள் பளபளக்க ஒலைச்சுவடிகளைப் பார்த்தான் சாஸ்தா.

     இருவருமாகச் சேர்ந்து சிதறிக்கிடந்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து ஆளுக்கு ஒன்றைக் கையில் எடுத்தனர். கொள்ளை ஆர்வத்துடன் சுவடியை விரித்துப் பார்த்த அடுத்த நொடி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஒரு மாதிரி சிரித்துக் கொண்டனர் பரசு, சாஸ்தா இருவரும். காரணம் அதில் இருந்த ஒரு எழுத்தைக் கூட அவர்களால் படிக்க முடியவில்லை.

     “என்னடா இது இவ்வளவு கண்ட்ராவியா இருக்கு. சின்ன வயசுல என் கையெழுத்தைப் பார்த்துட்டு கோழி கிறுக்கல் கூட இதை விட நல்லா இருக்குமுன்னு தமிழ் வாத்தியார் என் பின்னங்கையிலே அடிப்பார்.

     அவர்கிட்ட இதைக் காட்டணும். உலகத்தில் உன்னை விட யாருக்கும் கேவலமான கையெழுத்து இருக்காதுன்னு சொல்லுவீங்களே. என்னோட கையெழுத்தாவது கோழி கிறுக்கின மாதிரி தான் இருக்கும். இதைப் பாருங்க கோழி வாந்தி எடுத்து வைச்ச மாதிரி இருக்குன்னு அவர் முகத்தில் வீசி அடிக்கணும்” சாஸ்தா சொல்லி முடிக்க, எதையோ நினைத்துச் சிரித்தான் பரசு.

     “என்னடா சிரிக்கிற” சாஸ்தா கேட்க, “இல்ல, ஒரு கருமமும் புரியாத இந்த ஓலைச் சுவடிக்காகவா மணல் புதைகுழி, கழுகுன்னு பல அடுக்குப் பாதுகாப்புன்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சு” சொல்லிவிட்டு தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்த பரசு, “நமக்குப் புரியலங்கிறதுக்காக இதில் விஷயம் இல்லாம இருக்காதுன்னு நினைக்கிறது தப்பு“ என்கிற நண்பனின் வார்த்தையில் அமைதியானான்.

     சாஸ்தா விளையாட்டுப் போலவே இருந்தாலும் இயல்பில் அதிபுத்திசாலி. தொழில் அறிவு மற்றும் அனுபவம் அவனுக்குப் பலதைக் கற்றுக் கொடுத்திருந்தது. பின் வருவதை யூகித்து முன் செயல்படும் அறிவு கொண்டவன், என்ன ஒன்று பல நேரம் அதைச் சரியாகப் பயன்படுத்த மாட்டான்.

     “நீ சொல்றது சரி தான்” என உடன் ஒப்புக்கொண்டான் பரசு. அவன் என்றும் இப்படித்தான். தவறு என்று தெரியாத வரை தன் செயலின் மீது அதீத நம்பிக்கையும் பிடிவாதமும் கொண்டிருப்பான். தவறு என்று தெரிந்துவிட்டால் துளியும் தயக்கம் இன்றி அதை ஒப்புக்கொள்வதுடன், அதுவரை கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் யோசிக்க மாட்டான். பரசுவிடம் இருக்கும் மிகப் பெரிய நல்ல குணத்தில் இதுவும் ஒன்று.

     “நம்ம கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டுப்பார்க்கலாம்“ என்ற சாஸ்தா சொன்னதை நிறைவேற்ற முயற்சிக்கையில், சுவடியில் இருந்த எழுத்துக்கள் யாவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குள் வரும் முன்னர் புழக்கத்தில் இருந்தது என்பதைக் கண்டுகொண்டு புருவம் உயர்த்தினான்.

     சற்று நேரம் போராடிப் பார்த்தா சாஸ்தாவுக்கு தலை வலிப்பது போல் தோன்ற, பணியை முழுவதுமாக நண்பன் வசம் ஒப்படைத்துவிட்டு அருகே படுத்துக்கொண்டான்.

     பரசு மற்ற விஷயங்களில் அவ்வளவு எளிதில் ஈடுபாடு காட்ட மாட்டான் என்றாலும் இதைப் போன்ற விஷயங்களில் அவனுக்குள் இருக்கும் இயல்பான ஆர்வம், அவனை அதிக ஈடுபாட்டாடோடு செயல்பட வைத்தது.

     நான்கு மணி நேர இடைவிடாத போராட்டத்திற்குப் பின்னால் ஓலைச்சுவடி வார்த்தைகளை டீகோட் செய்து முடித்த பரசு, தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நண்பனை எழுப்ப, இருவருமாகச் சேர்ந்து மொத்த ஓலைச்சுவடிகளையும் படித்தனர்.

     முழுதாகப் படித்து முடித்த இருவரும் ஸ்லோமோஷனில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, ஒரே நேரத்தில் கையில் இருந்த சுவடிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு ஏதோ வடிவேல் படம் பார்ப்பதைப் போல விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

     “டேய் மச்சான் சத்தியமா என்னால முடியல டா. நானும் பாகுபலி, பாகமதி, மாவீரன் ரேன்ஜ்க்கு எதிர்பார்த்து படிச்சேன். நம்ம வாழ்க்கை என்னடா இவ்வளவு காமெடியா இருந்திருக்கு” சிரிப்பினூடே கேட்டான் சாஸ்தா.

     “கர்ணன் மாதிரி கொடை வள்ளலாவோ,  தர்மன் மாதிரி நேர்மையாவோ, ஆட்சியை நடத்தி இருப்போமுன்னு நினைச்சா, மக்கள் எல்லாரும் அடிச்சு அரண்மனையை விட்டு துரத்துற மாதிரி கேவலமா இல்ல ஆட்சி நடத்தி இருக்கோம்” என்றவாரு தானும் சிரித்தான் பரசு.

     “இன்னொருத்தனைப் பாரு, பொண்டாட்டி செத்த துக்கம் தாங்காம பைத்தியம் பிடிச்சு நாட்டை ஒழுங்காப் பார்த்துக்காம, அந்நியப் படையெடுப்பில் கெட்டுக் குட்டிச்சுவராப் போக விட்டு இருக்கான்.

     வாரிசு அரசியல் நடந்தா இப்படித்தான். நம்ம இரண்டு பேருக்கும் ராஜாவாகத் தகுதி இல்லாமப் போனாலும் பரவாயில்லைன்னு அந்த ஜென்மத்து அப்பா பட்டம் கட்டி விட்டிருக்கார்.

     தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்துக் கெடுத்த மாதிரி, நாமளும் கெட்டு நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட நாட்டையும் சேர்த்துக் கெடுத்து இருக்கோம். இந்தக் கருமத்துக்கு இரண்டாவது ஜென்மம் வேற ஒரு கேடு” கை தட்டி  சிரிக்க ஆரம்பித்த சாஸ்தா ஒரு கட்டத்தில் நிறுத்தி,

     “மச்சான் எனக்கு இப்ப ஒரு பெரிய சந்தேகம் வருது. இமயவரம்பன், உதய குமாரன் இரண்டு பேரில் யார் நீ, யார் நான்” சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

     “இயமவரம்பன் மூணு பொண்டாட்டி கட்டி நாசமா போனான். உதயகுமாரன் ஒரு பொண்டாட்டி கட்டி பைத்தியமாப் போனான். உனக்குத் தான் பெரிய சைஸ் மச்சம் இருக்குமே. சோ அந்த மூணு பொண்டாட்டிக்காரன் கண்டிப்பா நீயா தான் இருப்ப“ சிரிக்காமல் சிரமப்பட்டு சொல்லி முடித்தான் பரசு.

     “ஓகோ சாருக்கு வாயில் விரல் வைச்சாக் கூட கடிக்கத் தெரியாத பாப்பான்னு நினைப்பா” சாஸ்தா கிண்டலாய் சொல்ல, “அப்படி இல்லை மச்சான் முகராசின்னு ஒன்னு இருக்கு இல்ல. அப்புறம் உன் தங்கச்சி அந்த பஜாரியைக் கல்யாணம் பண்ண அன்னைக்கே நான் என் வாழ்க்கையை வெறுத்து இருப்பேன். இந்த அழகில் அடுத்த கல்யாணத்தைப் பத்தின நினைப்பு எனக்கு எப்படி வந்திருக்கும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்தா அந்த அதிர்ஷ்டசாலி இமயவரம்பன் நீயா தான் டா இருப்ப” என்றான் பரசு.

     நண்பனின் கேலிக்கு அமைதியாக இருந்த சாஸ்தா திடீரென, “இமயா” என ஆர்மார்த்தமாக அழைக்க, அந்த அழைப்பு பரசு மனதின் அடி ஆழம் வரை சென்று தொட்டது. இதைப் போன்ற அழைப்பை பலமுறை தான் கேட்டிருப்பது போல் தோன்றியது. அவனையும் மீறி உடல் சிலிர்த்து அடங்கியது. அந்த ஒற்றை அழைப்பு அவனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தப் போதுமானதாக இருந்தது.

     “பார்த்தியா பார்த்தியா. இப்பவாச்சும் ஒத்துக்கோ நீ தான் இமயவரம்பன்னு” சாஸ்தா சொல்லி சிரிக்க பரசுவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

     நெடுநேரம் அவன் அமைதியாகவே இருக்கவும், “மச்சான் இது எல்லாம் ஒன்னுமே இல்ல விட்டுத் தள்ளு. நாம உடனே இங்க இருந்து கிளம்புறோம். எங்கேயாவது ஜாலியா ஒரு ட்ரிப் போறோம் என்ஜாய் பண்றோம்” நண்பனின் மனநிலையை மாற்ற நினைத்து சாஸ்தா சொல்ல, பரசுவும்  ஏற்றுக்கொண்டான்.

     இவர்கள் நேரமோ என்னவோ அத்தனை நேரம் சுள்ளென்று வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டிருந்த சூரியனை வேகவேகமாக மறைத்தன கரிய மேகங்கள். வானம் மழை பொழியத் தயாராக, அதீத காற்றால் மரங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி போராடிக் கொண்டிருந்தது.

     “ச்சே என்னடா நாம ப்ளான் போடும் போது தான் இப்படியெல்லாம் நடக்கும். வெளியே போய் மழையில் மாட்டிக்கிட்டா பிரச்சனை. அதனால் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு சென்னைக்கு கிளம்பலாம். இங்கிருக்கும் வேலைகளை பார்ட்னர் கிட்ட செய்ய சொல்லலாம்” என்க, பரசுவும் ஆமோதித்தான்.

     சுவடியில் இருந்தவற்றைப் படித்த பின்னர் பயம் விலகி மனம் கொஞ்சம் இலகுவானது உண்மை. ஆனால் முற்றிலுமாக நீங்கிவிட்டதா என்றால் கட்டாயம் இல்லை. இப்போது நடப்பதற்கும் முன்ஜென்மத்தில் நடந்ததாக சுவடி சொல்லும் கதைக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்கிற முரண் இருவரையும் முழுதாக சமாதானமாக விடாமல் பார்த்துக்கொண்டது. 

     காலை உணவு மதிய உணவு இரண்டுக்குமாக சேர்த்து இருவரும் சமைத்து முடிக்க கடிகாரம் தன் வேலையை சிறப்பாக செய்தது. வயிறு முட்ட சாப்பிட்டு முடித்தவர்களுக்கு சலிப்பு தட்ட போனை நோண்டிக் கொண்டிருந்தனர்.

     முந்தையை இரவில் இருந்து மனம் மற்றும் உடல் இரண்டுக்கும் போதிய ஓய்வு கிடைக்காதது கூடவே அனுபவித்த பல மனப்போராட்டங்கள் எல்லாம் சேர்ந்து ஆண்கள் இருவரையும் சோர்வாக்கி இருக்க ஒருவர் பின் ஒருவராக மெதுவாக நித்திராதேவியிடம் சரணடைந்தனர். வெளியே நிலவிய குளிரும் அவர்களுக்கு நன்றாகவே ஒத்துழைத்தது.

     இவர்கள் உறங்கத் துவங்கிய சில நிமிடங்களில் வெளியில் பெய்து கொண்டிருந்த மழை நின்று போனது. இதமான வெயிலோடு கூடிய தென்றல் உடலைத் தீண்டிச் செல்ல, அதன் சுகந்தத்தை கண் மூடி இரசித்தவாறு ஈரம் இருந்தும் காய்ந்த நிலையில் இருந்த மண் தரையில் காலணி இல்லாமல் நின்று கொண்டிருந்தான் பரசு.

     கட்டுமானப் பணி நடக்கும் இடம் என்பதால் பெரிதும் சிறிதுமான கற்கள், செங்கற்கள், இயந்திரங்கள் என இருந்த இடம் நொடியில் இரண்டு பக்கமும் வண்ண வண்ண மலர்கள் நிறைந்த பூந்தோட்டமாக மாறியது.

     காணும் காட்சிகள் யாவும் கண்களுக்குக் குளுர்ச்சியூட்ட, அதன் வித்தியாசமான மணத்தை நாசி பிரித்துக் கொடுக்க இரசித்துக்கொண்டே வந்த பரசுவின் கண்களில் வெற்றிலைக்கொடி தென்பட்டது.

     'வெற்றிலைக்கொடி இருக்கும் இடங்களில் எல்லாம் நான் நிச்சயம் இருப்பேன். வெற்றிலைக் கொடியை ஸ்பரிசித்து என்னை நினைத்தால் அடுத்த கணம் நான் தங்களின் முன்னால் வந்து நிற்பேன்' என்ற கொடியிடையாளின் வார்த்தைகள் நினைவுக்கு வர புன்னகையுடன், தன்னை மீறிய உணர்வுகளின் உந்துதலில் "ரத்னா” என்று அழைத்தான் பரசு. அந்த உடல் பரசுவுக்குச் சொந்தமானது தான். ஆனால் அவனுடைய சிந்தை முழுக்க நிறைந்திருந்தது இமயவரம்பனே.

     இவன் ரத்னாவை அழைத்த அடுத்த நிமிடம் முத்துக்களின் சிதறலைப் போன்று காதுகளை நிறைத்த கொலுசு சத்தம் பெண்ணவளின் வருகையை உணர்த்த, ஆடவனின் இதழ்கள் தானாக விரிந்தது.

     “அழைத்தீர்களா அரசே” என்றவண்ணம் அவனுக்கு எதிரே வந்து நின்றாள் ரத்னா. வெண்மை மற்றும் இளமஞ்சள் நிற உயர் ரக பட்டுத் துணியில், முழு இராஜ அலங்காரத்தில் நடுநெற்றியில் சங்கு மச்சம் மிளிற வானத்து தேவதையைப் போல் அடர் கானகத்தின் நடுவே தங்கமாய் ஜொலித்துக்கொண்டிருந்தாள்.

     இராஜாவை மணந்து இராஜபவனத்தில் இராணியாக வாழ்ந்த போதும் எளிமையாக இருந்தவள், அந்த இராஜா அனைத்தையும் இழந்து வனவாசியாய் வனத்தை ஆண்டுகொண்டிருக்கும் போது அரண்மனை இராணியாகத்  தோரணையுடன் சுற்றிவருகிறாள். என்றும் புரியாத புதிர் தான் என் ரத்னா என்று மனதோடு கொஞ்சினான் இமயன்.

     “தேவதைகள் பகலில் வர மாட்டார்கள் என்று யார் சொன்னது. தேவதை இனத்தின் அதி சுந்தர தேவதை ஒன்று இந்தக்கணம் என் முன்னால்” என்ற இமயா அவளை நெருங்க எத்தணிக்க,

     “வெள்ளைக் கிணற்றில் நீந்தும் கருப்பு நிலா காட்டும் யாவும் மாயை.  மாயை மயங்க மாயக்கண்ணன் வர வேண்டும். காரிருள் கரைய காரிகையவள் வர வேண்டும்" என்றுவிட்டு மெதுவாக பின்னோக்கி நடக்கத் துவங்கிய ரத்னா திடீரென புள்ளியாகி மறைய, "ரத்னா” என்று இமயவரம்பன் அலற, அதே போல் "ரத்னா”என்று கத்திக் கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்தான் பரசு.

     இவன் சத்தத்தைக் கேட்டு ஹிந்தி ஹிரோயினியுடன் காதல் லீலை நடத்திக் கொண்டிருந்த சாஸ்தாவும் பதறியடித்துக் கொண்டு எழுந்தான்.

     நண்பனைப் பார்த்ததும், “டேய் அவ அவ… அந்தப் பொண்ணு மறுபடியும் என் கனவில் வந்தா டா” வியர்க்க விறுவிறுக்க உதடுகள் நடுங்கச் சொன்னான் பரசு.

     “எந்தப் பொண்ணு டா" சாஸ்தாவிற்கு நிஜமாகவே புரியவில்லை தான். “கோவிலைக் கண்டுபுடிச்சப்ப என் கனவில் வந்த அதே பொண்ணு. இப்ப இரண்டாவது தடவையா கனவில் வந்தா“ என்றவனுக்கு, தங்களுடைய முன்ஜென்மத்தை விளக்கிய ஓவியங்கள் நினைவு வர வேகமாக அதை எடுத்தவன், “இதோ இவ தான்டா அந்தப் பொண்ணு“ என்று சாஸ்தாவிடம் காட்டினான்.

     “அதனால தான் நீ இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னியா? போன ஜென்மத்தில் இருந்த உன் பொண்டாட்டி, தங்கச்சி இரண்டு பேரையும் விட்டுட்டு இந்த வேலைக்காரப் பொண்ணு மட்டும் கனவில் வரான்னா, ஒருவேளை இப்ப இங்க நடக்கிற எல்லாப் பிரச்சனைக்கும் இவ தான் காரணமா” சந்தேகம் கேட்டான் சாஸ்தா.

     “வாயைக் கழுவு டா. அவ ஒன்னும் வேலைக்காரி இல்லை, அவளும் என் பொண்டாட்டி தான்” தலையைக் குனிந்தபடி சொன்னான் பரசு.

     “என்னடா சொல்ற” சாஸ்தா மயக்கம் வராத குறையாய் கேட்க, “நீ சொன்னது தான் உண்மை. நான் தான் போன ஜென்மத்து இமயவரம்பன். ஒரு பொண்டாட்டி உன் தங்கச்சி யசோதா, இன்னொரு பொண்டாட்டி இந்தப் பொண்ணு பெயர் ரத்னா. நம்மளால் பார்க்க முடியாமப் போன ஓவியத்தில் இருந்தது என்னோட இன்னொரு பொண்டாட்டியா இருக்க வாய்ப்பு இருக்கு" என்க, சாஸ்தாவுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

     “சரியா தப்பான்னு தெரியல. ஆனா எனக்கு ஒரு தியரி தோணுது சாஸ்தா“ என்க, “இப்ப என்ன குண்டைத் தூக்கிப் போடப் போற“ என்பதாய் விழிவிரித்தான் சாஸ்தா.

     “என் ஒரு மனைவியான ரத்னா என் கனவில் வந்து எதையோ நோக்கிய என்னோட பயணத்துக்கு வழிகாட்டுறா. இன்னொருத்தி, அதான் அவ முகத்தை நாம பார்க்கக் கூடாதுன்னு கழுகை ஏவிவிட்டாளே, அவ நம்மைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறா” தன்போக்கில் கண்டதையும் பரசு சொல்லிக்கொண்டே போக சாஸ்தாவிற்கு விழி பிதுங்கியது.

     இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, “கனவில் நீந்திக் கரை சேர முடியாது. நீ பாட்டுக்கு கண்டதையும் யோசிக்காத. இப்ப என்ன அந்தப் பொண்ணு மறுபடியும் உன் கனவில் வந்து இருக்கு அவ்வளவு தானே.

     முதல் தடவை அந்தப் பொண்ணு சொன்னதை  வைச்சு அந்த சிலை இருந்த இடத்தை தோண்டி பல கஷ்டத்துக்கு அப்புறம் நமக்கு ரொம்பத் தேவையான சில நல்ல விஷயங்களை நாம தெரிஞ்சிக்கிட்டோம்” சலிப்புடன் சொன்ன சாஸ்தாவை முறைத்தான் பரசு.

     “பின்ன என்னடா அந்தப் பொண்ணு எதுக்காக நமக்கு போன ஜென்மத்தை எல்லாம் நினைவு படுத்தப் பார்க்கிது. கட்டாயம் நமக்கு அந்த ஞாபகம் எல்லாம் வரணுமுங்கிற அளவுக்கு போன ஜென்மத்தில் நாம ஒன்னும் கழட்டலையே, அப்புறம் எதுக்கு சும்மா சும்மா கனவில் வரணும்" என்க,

     “ஒருவேளை நாம தெரிஞ்சுக்கிட்ட கதை பாதியா மட்டும் இருந்தா. மீதத்தை நினைவு படுத்த ரத்னாவும் அதை நாம தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு கழுகோட ஓனரும் நினைச்சா“ பரசு இன்னமும் தான் பிடித்த பிடியிலேயே நின்றான்.

     "யப்பா உன்னோட பெரிய அக்கப்போறா இருக்கு. அந்தப் பொண்ணோட பேரு என்ன சொன்ன, ரத்னா தானே. கதையில் வந்த இமயவரம்பன் நீ, ரத்னமாலை அந்தப் பொண்ணு” சாஸ்தா சொல்லிக் கொண்டிருக்கும் போது, “அது ஒன்னும் கதை இல்லை” முந்திக்கொண்டு வந்து சொன்னான் பரசு.

     “சரிப்பா கற்பனை இல்லை நிஜமா நடந்தது தான். ஆனா எப்படி இருந்தாலும் இப்ப இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிற நமக்கு, அப்ப நடந்தது எல்லாம் கதை தானே.

     கதைப்படி அந்த பொண்ணோட உனக்கு மூணாவதா கல்யாணம் நடந்த கொஞ்ச நாளில் ஊர் ஜனங்க எல்லாரும் அரண்மனையைச் சூழ்ந்து உன்னை அடிச்சி விரட்டிட்டாங்க. காட்டுக்குள்ள வாழ்ந்து செத்துப்போயிட்ட அப்படித்தானே“ என்க, மனதிற்குள் ஏதோ உறுத்தல் வந்து இன்னும் விட்ட குறை தொட்ட குறை கதையில் இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருந்தது பரசுவிற்கு.

     “நீ, நான், என் தங்கச்சி, உன் தங்கச்சி நாலு பேரும் மறுபடிப் பிறந்து இருக்கோம். அந்த வகையில் உன் இரண்டாவது பொண்டாட்டியும், மூணாவது பொண்டாட்டியும் எங்கேயாவது பிறந்து இருப்பாங்க தானே“ என்க, “இல்லடா சாதாரணப் பொண்ணுங்களாப் பிறந்திருந்தா என் கனவில் வந்து என்னை வழிநடத்த முடியாது. அப்புறம் கழுகைக் கட்டுப்படுத்தி தேவையான செயல்களையும் செய்ய வைக்கவும் முடியாது. அவங்க இரண்டு பேரும் சாதாரணப் பொண்ணுங்களா இருக்க வாய்ப்பு கம்மி தான்டா“ என்றான் பரசு.

     “நீ சொல்வது உண்மையா இருக்கக் கூட வாய்ப்பிருக்கு. ஒருவேளை அவங்க இரண்டு பேரும் அமானுஷ்ய சக்திகளா இங்கே எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பாங்களோ. ஆனா எதுக்கு, ஒருவேளை உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கவா இருக்குமோ“ கண்டபடி யோசித்தான் சாஸ்தா.

    “எனக்கு ஒன்னுமே புரியல. என்னைக் கல்யாணம் பண்ணிக்கனுமுன்னு நினைச்சிருந்தா கனவுக்கு பதில் நேரில் தானே வந்து இருக்கணும்” விடாமல் கேட்டான் பரசு.

     “அது தான் வந்துட்டேனே” என்றவண்ணம் அவர்கள் இருக்கும் அறையின் கதவைத் திறந்து கொண்டு வந்தாள் இளம்யுவதி ஒருத்தி.

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1