Magic Stone 9


 

மந்திரக்கல் 9

     “யசோ நீ எப்படி இங்க” ஆயிருர் தங்கையை அங்கே அறவே எதிர்பார்க்கவில்லை என்பது சாஸ்தாவின் சொற்களிலேயே தெரிந்தது.

     “ச்சீ… என்னடா ட்ரஸ் இது. என்கிட்ட மட்டும் நைட் ட்ரஸ் போடாத, நைட்டி போட்டுகோன்னு வாய் கிழிய சொல்லுவ இல்ல. நீ மட்டும் ஏன்டா இவ்வளவு கண்ட்ராவியா ட்ரஸ் பண்ணி இருக்க" வந்ததும் சண்டை பிடித்தாள் சண்டைக்கோழி யசோதா.

     “ஏய் முட்டி வரைக்கும் இருக்கே டி" பாவமாய் பார்த்து வைத்தான் சாஸ்தா. அது என்னவோ தங்கை மீது, அன்பு மரியாதையைத் தாண்டி பயமும் உடன் சேர்ந்தே இருந்தது அவனுக்கு.

     “முட்டிக்கு கீழ எப்படி இருந்தாலும் பரவாயில்லையா?" விடாமல் அவள் சண்டைக்கு வர, “ஏன்டி வந்ததும் வராததுமா அவனை வாயில் வெத்தலையாப் போட்டு மெல்லுற” நண்பனுக்கு பக்கபலமாக வந்தான் பரசு.

     “ஹலோ அவன் என்ன போன்லெஸ் சிக்கனா வாயில் போட்டு சுகமா மெல்லுறதுக்கு. எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கான் வீட்டையும் கொஞ்சம் பாருன்னு புத்தி சொல்லாம, உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டன்னு ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்திக் கெடுத்துக்கிட்டே இருங்க. உங்க எதிர்காலம் பல்லைக் காட்டும்" கடுகாய் காய்ந்தாள் அவள்.

     “நீ இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லடி” மென்னகையுடன் சொன்னான் பரசு. இவ்வளவு நேரம் இருந்த பயம், குழப்பம் யாவும் சற்றே விலகிப் போய் இருந்தது யசோதாவின் வருகையால்.

     “ஹலோ என்ன கட்டின பொண்டாட்டியைக் கூப்பிடுற மாதிரி வாய்க்கு வாய் டி போட்டு கூப்பிடுறீங்க. அது இருக்கட்டும், ஆமா நீங்க என் அண்ணன் ரூமில் என்ன பண்றீங்க" என்றாள். நகமும் சதையும் போல் எப்போது பார் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்களே என்கிற பொறாமை எப்போதும் அவளுள் உண்டு. அது தான் இப்போது வெளியே வந்தது.

     “ம்ம்ம் உங்க அண்ணனை தொட்டில் கட்டி, தாலாட்டுப் பாடி தூங்க வைக்கலாமுன்னு வந்தேன்" பரசு நக்கலில் இறங்க, “அப்படியா தூங்க வைச்சிட்டீங்களா?" கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்று கேட்டாள் யசோதா.

     “எங்க அதுக்குள்ள ஒரு காட்டேரி வந்து கெடுத்திடுச்சு" இதழில் பூத்த புன்னகையை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திப் பேசினான் பரசு.

     “ஹலோ யாரைப் பார்த்து காட்டேரின்னு சொல்றீங்க. என்னைப் பார்த்தா தலையில் கொம்போட, வாயில் பெரிய பெரிய பல்லோட இருக்க அரக்கி மாதிரி தெரியுதா உங்களுக்கு” யசோ சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் பரசு கற்பனையால் அவள் தலையில் கொம்பு வைத்து நினைத்துப் பார்த்து பலமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

     “மச்சான் என்னாச்சு டா” தொடர் அசாதாரண நிகழ்வால் எங்கே நண்பனுக்குப் பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதோ என்னும் பயத்தில் பரபரப்பாய் கேட்டான் சாஸ்தா.

     “முகரக்கட்ட உன் ப்ரண்டு எனக்கு கொம்பு வைச்சுப் பார்த்து சிரிக்கிறான்” இடுப்பில் கரம் வைத்து கோவமாய் சொன்னாள் யசோ. அவள் இருக்கும் கோபத்திற்கு விட்டால் பரசுவின் தலையைப் பிடித்து ஆட்டி அவன் தலைமுடி அனைத்தையும் வெறும் கைகளாலேயே பிடுங்கிவிடுவாள்.

     இதுவரை தங்கையை, தங்கையாய் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த சாஸ்தாவும் நண்பனின் வழியைப் பின்பற்றி அவளுக்கு கொம்பு வைத்து அழகு பார்த்தான். விளைவு நைட்ரஸ் ஆக்ஸைடை சுவாசித்தது போல் கட்டுக்கடங்காத சிரிப்பு அவனிடத்தில் இருந்தும்.

     இப்பொழுது கோபத்தில் நிஜமாகவே தலையில் இரண்டு கொம்புகள் முளைக்க, காதுகள் கழுதைக் காதைப் போல தொங்க கண்கள், காது, மூக்கு அனைத்தில் இருந்தும் சிகப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் கோபக்கனல் அள்ளித் தெறிக்க, இருவரையும் கண்களால் எரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் யசோ.

     “ஏய் குட்டிக் கத்திரிக்காய்க்கு கோவம் வந்திடுச்சி டா” சொன்னவன் சாஸ்தா.

     “யாரைப் பார்த்து டா குள்ளக்கத்திரிக்கான்னு சொல்ற. நீ ஒரு கத்திரிக்கா, உன் ப்ரண்டு ஒரு கத்திரிக்கா. மங்கா மண்டையா யாரைப் பார்த்து கத்திரிக்கான்னு சொல்ற, நெட்டக்கொக்கு மலமாடு காட்டெருமை” வாயில் வந்ததை சொல்லி அர்ச்சித்துக்கொண்டே அவனை நோக்கி முன்னேறியவளின் கைக்கு வாகாய் அகப்பட்டான் சாஸ்தா.

     இது தான் தனக்கான நிமிடம் என்ற முடிவுக்கு வந்தவள் கற்பனையில் பரசுவுக்கு செய்ய நினைத்து முடியாமல் போன எல்லாவற்றையும் இவனிடம் நிறைவேற்றிக்கொண்டாள்.

     நண்பன் படும் அவஸ்தையை தீர்த்து வைக்காமல் தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தூரம் நின்று சிரித்துக் கொண்டிருந்தான் பரசு. அப்பொழுது தான் அங்கு அவர்கள் யாரும் சற்றும் எதிர்பாராத ஒருவரின் வருகை ஏற்பட்டது.

     “யசோ என்ன பண்ற வலிக்கப் போகுது விடு” சாஸ்தாவை வெறுங்கையாலே மொட்டைத் தலையாக்கி விட வேண்டும் என்று உறுதியுடன் நின்றவளை பிடித்து இழுக்க முயற்சித்தாள் புதிதாய் வந்த ஒருவள்.

     “நீ விடு திலோ இவன் எல்லாம் ஒரு அண்ணன். தங்கச்சி, அம்மான்னு ஒரு குடும்பம் இருக்கே, அது இருக்கா இல்லையான்னு கொஞ்சம் கூட கவலை இல்லாம வேலைன்னு ஊரை ஏமாத்திட்டு, ஊர் சுத்திக்கிட்டு அலையுறான்.

     இவன் தான் இப்படி பாசம் இல்லாம அலையுறான். நாமளாவது நல்ல தங்கச்சியா இருக்கலாமுன்னு, இவன் பிறந்தநாளுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க நாடு விட்டு நாடு வந்தேன் இல்ல எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்" கோபமா இல்லை வருத்தமா தெரியாத குரலில் சொன்னாள் யசோ.

     “யசோ கூல் டவுன்” சொன்னவள் அவளின் தோழி திலோத்தமா.

     “இதில் நீ தலையிடாதே திலோ. இன்னைக்கு இவனா இல்லை நானான்னு பார்த்திடுறேன். எங்களுக்குள்ள மிச்சம் இருக்கிற வஞ்சம் இன்னையோட முடிஞ்சிடட்டும். எங்கம்மாவுக்கு கொள்ளி போட ஆம்பிளைப் புள்ளை இல்லாம போனாக் கூட பரவாயில்லை” என்றுவிட்டு சாஸ்தாவை போட்டு பாடாய் படுத்திய யசோவை, எப்படியோ தன்பக்கம் இழுத்து நிதானத்திற்கு கொண்டு வந்தாள் திலோத்தமா.

     “யசோ கோவத்தைக் கண்ட்ரோல் பண்ணுன்னு சொன்னாக் கேட்கிறியா? பாரு அவரை ஷாக் அடிச்ச மாதிரி உறைஞ்சு போய் இருக்காரு” என்று சாஸ்தாவைக் காட்டினாள்.

     உண்மையில் அவன் உறைந்து போய் தான் இருந்தான். ஆனால் திலோ சொன்னது போல் யசோவின் அடிகளால் அல்ல, தன் கண் முன் நிற்கும் தன் நண்பனின் தங்கையைக் கண்டு.

     சாஸ்தாவின் நிலை கூடப் பரவாயில்லை, பரசுவின் நிலை தான் மிகவும் பாவமாக இருந்தது. அவர்கள் கண்டெடுத்த ஓவியத்திலாவது மகாராணியின் அலங்காரத்துடன் அச்சில் அவனுடைய அம்மாவின் சாயலை உரித்தவாறு  இருந்தாள்.

     நேரில் அப்படியே அவனுடைய அம்மாவே எதிரே நிற்பது போல் இருந்தது அவனுக்கு. ஆனந்தமா, அதிர்ச்சியா என்ன என்று தெரியாத ஏதோ ஒரு உணர்வு உடலெங்கும் பரவி, அவனை மொத்தமாகக் கட்டிப் போட்டு இருந்தது. கண்கள் நிலைக்குத்தி அவளையே சிலை போல் பார்த்துக் கொண்டிருந்தவனை சிலையெனவே நினைத்து தோள்களில் வந்து அமர்ந்தது எங்கிருந்தோ வந்த பஞ்சவர்ணக்கிளி ஒன்று.

     “ஹலோ இங்க என்ன மேஜிக் ஷோவா காட்டுறாங்க. எதுக்கு இப்படி வாயைப் பொழந்து பார்த்துக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்” என்ற யசோ கிளியைக் கவனித்து, “வாவ், டேய் அண்ணா உனக்கும் கூட ரசனை வர ஆரம்பிச்சிடுச்சு போலடா. கிளி வளர்க்கிற போல அதுவும் இது எவ்வளவு அழகா இருக்கு” என்றபடி கிளியைப் பிடிக்கிறேன் எனப் பரசுவின் அருகில் சென்றாள்.

     “யாரு இந்தக் கருங்குரங்கா, இவனை மேய்க்கிறதுக்கே நாலு ஆள் வேணும். இவன் என்னை வளர்க்கிறானா? சோம்பேறிப் பய” அழகிய கீச்சுக் குரல் ஒன்று அந்த அறைக்குள் ஒலித்தது.

     பரசு தான் தன்னைக் கிண்டல் செய்கிறான் என்று நினைத்து சாஸ்தா பரசுவை முறைக்க, அவனோ தன் தோளில் நின்று கொண்டிருந்த கிளியைப் பார்த்தான்.

     “என்னடா பார்க்கிற முட்டக்கண்ணா” என்று அவனையும் வம்பிழுத்தது கிளி. “ஏய்” சாஸ்தா ஆச்சர்யமாக அழைக்க, “சொல்லுடா காட்டெருமை" துளி கூட பயம் என்பது இல்லாமல் கிண்டலடித்தது.

     “ஒரு கிளி இவ்வளவு பேசுறது நல்லா இல்ல ஆமா. அவன் மனம் முழுவதும் ஆச்சர்யம் மற்றும் வியப்பில் ஆழ்ந்திருக்க, குரல் மட்டும் உயருமா என்ன. திட்டும் வார்த்தைகள் கூட செல்லம் கொஞ்சும் குரலில் தான் வந்தது.

     “உனக்கெல்லாம் நான் பேசுறதே பெருசு. இதுல சிங்கம், புலி சிறுத்தைன்னு வரவைச்சுப் பேச வைக்கணுமா அடப் போடா” என்றது அந்தக் கிளி.

     தான் பேசப் பேச தான் அது தன்னை வறுத்தெடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் சாஸ்தா பேச அந்தக் கிளியும் பதிலுக்குப் பதில் பேசியது.

     “இதுக்கு மேல தாங்க முடியாது உன்னை என்ன பண்றேன்னு பாரு” என்றவண்ணம் வேகமாய் நடந்து வந்த சாஸ்தா பரசுவின் கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த அந்தக் கிளியைக் கையில் பிடித்தான்.

     “கிளியக்கா என்ன பேச்சு பேசின. இப்ப என் கையில் மாட்டிக்கிட்ட, பார்த்த இல்ல. இன்னைக்கு உன் இறக்கை இரண்டையும் வெட்டி உன்னை வறுத்து திங்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு” சொல்லிவிட்டு சீரியல் வில்லன் போல் சிரித்த நண்பனைப் பார்த்து தலையை இடவலமாக ஆட்டிய பரசு, “இம்சை அரசன்னு மறுபடி மறுபடி நிரூபிக்கிறியே டா சாஸ்தா” எனத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

     சாஸ்தா செய்ததைப் போலவே ஒரு வில்லன் சிரிப்பு சிரித்த  கிளி அவனுடைய பிடியில் இருந்து இலாவகமாகத் தப்பித்ததோடு, தன்னைப் பிடித்ததற்குத் தண்டனையாய் தன் நகங்களால் அவன் கையைக் கீறிவிட்டு, வீட்டு ஜன்னல் கம்பியில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் போய் அமர்ந்துகொண்டது.

     கிளியின் செயல் தங்களைப் பாடாய் படுத்திய கழுகை நினைவுபடுத்த ஒருவேளை இதுவும் யாரோ சொல்லிக்கொடுத்து தான் என்னை அட்டாக் பண்ணுதா? அதென்ன எல்லா கிரியேச்சரும் எப்பவும் என்னை மட்டுமே தொந்தரவு பண்ணுது. நான் என்ன தக்காளித் தொக்கா போகும் போதும் வரும்போதும் ஒவ்வொருவராக சீண்டிப்பார்க்க. என் கிரகம் ஆறறிவு மனுஷன் கிட்ட பழக்கம் வைச்சுக்கிட்ட பாவத்துக்காக ஐந்தறிவு பிராணிகள் கிட்ட எல்லாம் வாங்கிக்கட்டிக்க வேண்டியதா இருக்கு சலித்தான் சாஸ்தா.

     பரசு, யசோ இருவரும் சிரிக்க ஆரம்பிக்க திலோ சிரிப்பைக் கட்டுப்படுத்த எவ்வளவோ முயற்சித்தாள். ஆனால் பாவம் அவளால் நெடுநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவளும் சிரித்துவிட, சாஸ்தாவிற்கு ஒரு மாதிரி இருந்தது. யசோவும் பரசுவும் தான் முதலில் அவனைப் பார்த்து சிரித்தார்கள். அது அவர்களுக்கும் வழக்கம் இவனுக்கும் பழக்கம் என்பதால் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திலோ விஷயம் வேறாகிற்றே.

     சாஸ்தாவிற்கு உலகில் பிடித்தமானதைப் பட்டியலிடச் சொன்னால் பரசு, யசோ, அடுத்ததாக கட்டடம் கட்டும் தொழில் நான்காவது உணவு என்று தான் சொல்லுவான். நண்பனுக்காகவும் தங்கைக்காகவும் வாழ்நாள் முழுக்க கோமாளி வேஷம் போட அவன் தயார் தான். ஆனால் திலோவின் முன்னிலையில் கோமாளியாய் நின்றது ஒரு மாதிரி இருந்தது. அதற்கான காரணம் அவனுக்குச் சரியாகப் புரியவில்லை.

     தன்னவளாய் நினைக்கும் பெண்ணவள் முன் கோழை கூட வீரனாகத் இருக்கத்தான் ஆசைப்படுவான். சாஸ்தா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன. சாஸ்தாவின் நிலை உணர்ந்தவனாக பரசு பேச்சை ஆரம்பித்து எல்லாருடைய கவனத்தையும் தன் மேல் திருப்பினான்.

     “ஏய் வாயாடி யார் இந்தப் பொண்ணு எங்களைப் பார்க்க வந்தா எப்பவும் தனியா தானே வருவ, இப்ப என்ன எக்ஸ்ட்ரா ஒரு கொடுக்கு” வேண்டுமென்றே தான் கேட்டான்.

     தங்கை உயிரோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றிய நேரமே தன் அப்பாவின் நண்பர் மூலம், பெற்றோர்களுக்கு விபத்து நடந்த அன்று எதிரே வந்த வாகனத்தில் இருந்த குடும்பத்தின் நிலை என்ன என்று விசாரித்தான். ஒரு சிறுபெண் மட்டும் பிழைத்தாள் பழைய நினைவுகளை இழந்து அவள் தாத்தா, பாட்டி வசம் வளர்கிறாள் என்கிற தகவல் கிடைக்க, அது தன் தங்கையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று மகிழ்ந்தான்.

     இப்போது இவள் கண் முன் வந்து நிற்கவும், அவளின் கன்னம் கிள்ளிக் கொஞ்ச ஆசை வந்தது. கூடவே பயமும் வந்தது. ஒருவேளை நினைவுகள் முழுதாகத் திரும்பாமல் தன் தங்கையாக அன்றி யசோவின் தோழியாக வந்திருந்தால் என்கிற நினைப்பில் தான் இப்படிக் கேட்டான்.

     “ஹே என்ன கொடுக்கு அது இதுன்னு சொல்றீங்க. ஷீ இஸ் மை க்ளோஸ் ப்ரண்ட், நேம் திலோத்தமா ஓகே" படு ராயலாகச் சொன்னாள்.

     “என்ன ஓகே சென்னையில் நீ தங்கி இருக்கிற ஹாஸ்டலுக்கு நான் வந்தா லேடீஸ் இருக்கிற இடத்துக்கு எதுக்கு உன் ப்ரண்டை கூட்டிட்டி வருவன்னு கேட்ப இல்ல. இப்ப நீ மட்டும் என்ன இரண்டு பேச்சுலர் மட்டும் இருக்கிற இடத்துக்கு ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து இருக்க” தங்கையை மடக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்னும் நினைப்பில் சந்தோஷமாக முன்வந்தான் சாஸ்தா.

     “இது எப்ப நடந்தது” என்பது போல் பரசு யசோவைப் பார்க்க,
“ஹலோ ஹலோ… என்ன விட்டா ரொம்பப் பேசுற. நான் என் ப்ரண்டை இங்க கூட்டிக்கிட்டு வந்ததில் என்ன தப்பு.

     இவ இம்ப்ரஸ் ஆகுற அளவுக்கு உன் முகரக்கட்டைக்கு ஒன்னும் அவ்வளவு வேல்யூ இல்ல. அதோட பேச்சுலர் பேச்சுலருன்னு சொல்லிக்கிட்டு சுத்துற நீ உண்மையில் பேச்சுலரா தான் இருக்கியான்னு அம்மா செக் பண்ண சொன்னதால தான் இப்படி திடீர் விஜயம்” காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டாள் யசோதா.

     “குடும்பமா டா என்னோடது, தங்கச்சியா டி நீ. குட்டிச்சாத்தான் குட்டிச் சாத்தான்” என்று அவள் தலையிலே கொட்டினான் சாஸ்தா.

     “ச்சே இந்த கடவுள் ஏன் தான் ஆம்பிளைங்களை பொம்பிளைங்களை விட உயரமாப் படைக்கிறாருன்னு தெரியல. ரொம்ப ஈஸியா கொட்டிடிடுறான் எருமை எருமை காட்டெருமை” தலையைத் தேய்த்துக்கொண்டே சொன்னாள் யசோதா.

     “சரி டி வரதுன்னா நீ மட்டும் வர வேண்டியது தானே அந்தப் பொண்ணையும் எதுக்கு உன் கூடவே பத்திக்கிட்டு அலையுற” என்றான் பரசு.

     “ஹலோ இதோட இராண்டாவது முறையா சொல்றென் என்னை டி போட்டு கூப்பிடாதீங்க. அதோட பத்திக்கிட்டு வரதுக்கு அவ ஒன்னும் ஆடோ மாடோ இல்லை. என்னோட ப்ரண்டு என்னை மாதிரியே ஒரு பொண்ணு.

     அதோட ரொம்ப முக்கியமான விஷயம், நாங்க ஒன்னும் இங்க உங்களைப் பார்க்க வரல. எங்க வேலை விஷயமா வந்தோம். அங்க போகுறதுக்கு முன்னாடி என் கூடப் பிறந்த கருமத்தைப் பார்த்துட்டு போலாமுன்னு வந்தோம்” என்றாள். டேய் சாஸ்தா இதை விடக் கேவலமா உன்னை யாரும் பேச முடியாது டா என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான் சாஸ்தா.

     பரசுவின் காது யசோவின் பதிலைக் கேட்டுக் கொண்டாலும் கண் முழுவதும் திலோவின் மீதே இருந்தது. தன்னைக் கண்டதும், தான் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது போல் அவள் அதிரவில்லையே. ஒருவேளை அவளுக்கு பழைய நினைவுகள் இன்னும் திரும்ப வரவில்லையோ என்று வேதனையோடு பார்த்தான்.

     “என் ஆசை தங்கச்சிக்கு என் மேல எப்படி திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வந்துச்சுன்னு சந்தேகப்பட்டேன். அது சரியாப் போச்சு, சரி சரி இப்ப இங்க என்னத்தை பொறுக்க வந்த” தங்கையிடம் கேட்டான் சாஸ்தா.

     “உன்னை மாதிரியே எவனோ ஒரு கூமுட்டை ராஜா. அவனைப் பத்தின விஷயத்தை தோண்டும் போது அவன் கடைசியா நேபாளத்தில் தான் இருந்தான்னு தெரியவந்தது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்க ஒரு இடத்தில் பழங்காலக் கல்வெட்டு ஒன்னு கிடைச்சதுன்னு எங்க டீமுக்குத் தெரிய வந்தது. அதனால் அந்தக் கல்லில் அந்த ராஜா பத்தின தகவல் இருக்கலாமுங்கிற எண்ணத்தில் எங்க டீம் ஹெட் எங்களை இங்கே அனுப்பி இருக்கார்” என்றாள் அவள்.

    “ஏதோ ஒரு ராணியைப் பத்தி தானே நீ நோண்டிக்கிட்டு இருந்த இப்ப என்ன திடீர்னு ராஜா பக்கம் வந்திட்ட” சாஸ்தா பொறுப்பான அண்ணனாய் தங்கையின் வேலையைப் பற்றி வினவினான்.

     ஒரு நாளின் கால்வாசி நேரம் தங்கை மற்றும் நண்பனின் பாதுகாப்பைப் பற்றி யோசிப்பவன், பாதி நேரம் தொழிலை முன்னேற்றுவதைப் பற்றி யோசிப்பான். மீதி கால்வாசி நேரம் தான் அவனுக்குக் கிடைக்கப்பெறும். அதை நினைத்து அவன் என்றும் வருத்தப்பட்டது இல்லை. அது தான் சாஸ்தா.

     “நான் தேடிக்கிட்டு இருந்த ராணியோட புருஷன் தான் இந்த ராஜா” கடுப்புடன் சொன்னாள் யசோ.

     “என்னடி அந்த ராணியைப் பத்தி அப்படி இப்படின்னு அளந்து விடுவ. ஆனா அவங்க புருஷனை இப்ப இந்த வாட்டு வாட்டுற" குடிப்பதற்காக குளிர்பானம் ஒன்றைக் கையில் எடுத்தபடிக் கேட்டான்.

     “என்ன பண்றது அந்த ராஜா ஒரு வக்கில்லாதவன், ஒன்னுக்குமே பிரயோஜனப் படாதவன். அப்படி ஒரு ராணிக்கு இப்படி ஒரு ராஜா. எல்லாதையும் விட மகாக் கொடூரம் அந்த ராஜா முகரைக்கு எங்க ராணி ரத்னா பத்தாம, மொத்தமா மூணு பேரைக் கட்டி இருக்கு” விட்டால் கெட்ட வார்த்தையால் திட்டிவிடுவேன் என்பது  போல் இருந்தது யசோவின் கோபம்.

     பரசு, சாஸ்தா இருவருக்கும் உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் இருக்க, மெதுவாகத் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

     “அந்த ராணி பேரு என்ன” கரகரத்த குரலோடு தடுமாற்றத்துடன் கேட்டான் பரசு. “ரத்னமாலை” மிகவும் கூலாகச் சொன்னாள் யசோதா.

    

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Magic Stone 1